பெண் கல்வி விழிப்புணர்வுக்காக நாடு முழுவதும் கார் பயணத்தை தொடங்கிய சாதனையாளர்

By செய்திப்பிரிவு

சென்னை: பெண் குழந்தைகள் கல்விக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்துக்காக நாட்டின் 4 மூலைகளுக்கும் கார் மூலம் பயணித்து சாதிக்கவுள்ளார் கோயம்புத்தூரைச் சேர்ந்த மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் ஜி.டி.விஷ்ணுராம். அவரது சாதனை பயணத்தை சென்னையில் அண்மையில் தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு), கே.சங்கர், வடசென்னை காவல்துறை இணை ஆணையர் ஆர்.வி. ரம்யா பாரதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

முதல்கட்டமாக சென்னையில் இருந்து தேசு வரை சுமார் 3,231 கி.மீ. தொலைவுக்கும், இரண்டாவது கட்டமாக தேசுவில் இருந்து லே வரை சுமார் 3,458 கி.மீ. தொலைவுக்கும், பிறகு லேயில் இருந்து கோடேஷ்வர் வரை சுமார் 2,212 கி.மீ. தொலைவுக்கும், கடைசி மற்றும் நான்காவது கட்டமாக கோட்டேஷ்வரில் இருந்து கன்னியாகுமரி வரை 2,643 கி.மீ தொலைவுக்கும் இவர் பயணிக்கவுள்ளார்.

பின்னர் அங்கிருந்து 706 கி.மீ. பயணித்து சென்னை திரும்பவுள்ளார். ஏற்கெனவே சாகசப் பயணங்களுக்கான 6 தேசிய சாதனைகளைப் புரிந்துள்ள விஷ்ணு ராம் (4 சைக்கிள் ஓட்டுதல், 2 கார் பயணங்கள்), இப்போது 14 நாட்களில் 12,500-க்கும் அதிகமான கிலோமீட்டரைக் கடக்கவுள்ளார். இதன் மூலம் இந்தியாவைச் சேர்ந்த சுரேஷ் ஜோசப் புரிந்துள்ள முந்தைய கின்னஸ் உலக சாதனையான 401 மணி நேர சாதனையை அவர் முறியடிக்க உள்ளார்.

இந்த பயணத்தின்போது பெண் குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து உள்ளூர் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர் முடிவுசெய்துள்ளார்.

இதுகுறித்து விஷ்ணு ராம் கூறும்போது, ‘‘நாட்டின் நான்கு மூலைகளுக்குமான எனது கார் பயணத்தைத் தொடங்குவதில் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய இந்த முயற்சி கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சி மட்டுமல்ல, நான் உறுதியாக நம்பும் சமூகப் பணிகளில் ஒன்றான ‘பெண் குழந்தைகளுக்கான கல்வி'யை ஆதரிப்பதும் ஆகும். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக திரட்டப்படும் நிதி சென்னை மற்றும் கோயம்புத்தூர் அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு அளிக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE