”எங்கள் பிரிவு அவரால் அழகானது” - ஆஷிஷ் வித்யார்த்தியின் முன்னாள் மனைவி நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நிலையில், அவரது முன்னாள் மனைவி பில்லு வித்யார்த்தி தங்கள் உறவு குறித்தும் பிரிவு குறித்தும் விரிவாகப் பேட்டி கொடுத்துள்ளார்.

ஆசிஷ் வித்யார்த்தி நேற்று ரூபாலி பருவா என்பவரை திருமணம் செய்துகொண்டார். 60 வயதில் அவர் செய்து கொண்ட இரண்டாம் திருமணம் அவரது ரசிகர்களாலும் பரவலாக பலராலும் வரவேற்கப்பட்டது, சமூகத்தில் இரண்டாம் திருமணம் மீதான பார்வை வெகுவாக மாறிவருவதற்கான சான்று என்றே கொள்ளலாம். இது பிரபலம் அல்லாதவர்களுக்கும் நீளும்போது மாற்றம் முழுமையை நோக்கி பயணிப்பதை நாம் உணரலாம்.

இந்நிலையில், ஆசிஷ் வித்யர்த்தியின் முன்னாள் மனைவி பில்லு வித்யார்த்தியின் பேட்டி ஒன்று கவனம் பெறுகிறது. அதில் அவர் திருமண உறவு பற்றியும் விவாகரத்து பற்றியும் பல்வேறு விஷயங்களையும் அழகாக பகிர்ந்துள்ளார். பில்லு ஒரு முன்னாள் ரேடியோ ஜாக்கி என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தப் பேட்டியிலிருந்து... - "நானும் ஆஷிஷும் கடந்த 2021-ல் விவாகரத்து பெற்றோம். அதை நாங்கள் வெளி உலகிற்கு பிரபலப்படுத்த விரும்பவில்லை. நாங்கள் இருவரும் இன்றளவும் நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம். ஆசிஷுடனான 22 ஆண்டு கால வாழ்க்கை என் வாழ்நாளின் மிகச் சிறந்த காலக்கட்டம். அவரிடம் கேட்டாலும் நிச்சயம் இதைச் சொல்வார். எங்களுக்குள் நிறைய ஒற்றுமை உண்டு. வேற்றுமையும் உண்டு. ஆனால், நாங்கள் அதன் நிமித்தமாக ஒருபோதும் மோதிக் கொண்டதில்லை. இன்றும் நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம்.

எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். அவர் இப்போது வெளிநாட்டில் டெஸ்லா நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவரை வளர்த்ததில் ஆஷிஷுக்குதான் பெரும் பங்கு இருக்கிறது. பொதுவாகவே குழந்தை வளர்ப்பில் எல்லாப் புகழும் மனைவிக்குச் செல்லும் ஆனால் எங்கள் வாழ்வில் அவர் தான் மிகப் பெரிய பங்காற்றினார். அவர் என் மகனுக்கு நண்பர் மட்டுமல்ல வழிகாட்டியும் கூட. நாங்கள் இருவரும் ஆர்த் வித்யார்த்தியை ஒரு நல்ல மனிதராக வளர்த்துள்ளோம். அதனால் அவர் எங்களுக்குள் ஏற்பட்ட பிரிவு உள்பட அனைத்தையுமே புரிந்து கொண்டார்.

எங்களுக்குள் பிரிவு தேவைப்பட்டது. அது முன்னருமே தேவைப்பட்டிருக்கலாம். ஆனால், அந்த தேவையை நான் அண்மையில்தான் உணர்ந்தேன். நானும், ஆஷிஷும் ஆர்த்தை வளர்ப்பதிலேயே காலத்தை செலவழித்தோம். அவர் வளர்ந்து வெளிநாடு சென்றார். ஒரு கலைஞராக எனக்கு நான் விரும்புவதை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்கு எனக்கு யாரும் தடையாக இல்லை. என் தேவை என்னவென்பதை உணர்ந்தபோது எனது எதிர்கால தேவைகளும், ஆஷிஷின் எதிர்கால தேவைகளும் வெவ்வேறு எனப் புரிந்தது. ஆஷிஷ் அவரது கனவுகளை பூர்த்தி செய்ய, எதிர்கால விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள எல்லா உரிமையும் உண்டு. அதுதான் எங்களுக்குள் பிரிவு தேவைப்பட்டது என்பதை உணர்த்தியது.

திருமணம் என்றால் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்வதை நாம் அனைவருமே கடந்து வந்திருப்போம். இன்னமும் நம்மில் நிறைய பேர் சமரசம் செய்துகொண்டே வாழ்கிறோம். ஆனால் நமக்குத் தெரியாதது, பூட்டிய கதவுக்குப் பின்னால் நடப்பது என்னவென்பது. திருமணத்தால் ஒருவர் மன ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வளவு சமரசங்களை செய்து கொள்கிறார்கள் என்பது அதை செய்து கொள்பவர்களைத் தவிர பிறருக்குத் தெரியாது. அது ஒரு மெல்லிய கோடு. அந்த சமரசத்தின் தடிமனை அளவிட முடியாது. என்னால் அப்படிப்பட்ட சமரசத்துடன் வாழ முடியாது.

எனது தேவைகளும் ஆஷிஷின் தேவைகளும் வெவ்வேறு. திருமணத்துக்குள் இருக்க அவை எதிரெதிராக இருந்தன. சிலர் சமரசத்துடன் வாழ்கிறார்கள். நான் அதை குற்றமென்று சொல்லவரவில்லை. நான் அதற்குத் தயாராக இல்லை என்றே சொல்கிறேன். சமூக வலைதளங்களில் தங்கள் இணையரை சிலாகித்து நீண்ட பதிவுகளை இடுவோரைப் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்கு ஒரே விஷயம்தான் எழும். உண்மையில் அவர்களுக்குள் என்ன இருக்கிறது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும் எனத் தோன்றும்.

எங்கள் பிரிவை ஆஷிஷ் தான் அழகானதாக மாற்றினார். அவரது ஆதரவு இல்லாவிட்டால் இது நடந்திருக்காது. வழக்கமாக விவாகரத்தின்போது வழக்கறிஞர் அலுவலகத்தில் பல அசிங்கமான சண்டைகள் நடக்கும். எங்கள் பிரிவு அழகாக அமைந்தது. எங்கள் இருவருக்குமே அதை எளிமையாக்கினார் ஆஷிஷ்.

எங்கள் பிரிவுக்குப் பின்னர் மிகப் பெரிய துன்புறுத்தல், கஷ்டம் இருந்ததாக நிறைய ஊகங்கள் உலா வருகின்றன. ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. இரண்டு ஆண்டுகளாக நாங்கள் வெவ்வேறு பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். அவர் அவருடைய தொழிலில் சிறப்பாக செயல்படுகிறார். நான் எனது பாதையில் செல்கிறேன். அவர் இப்போது இன்னொரு திருமணம் செய்துள்ளார். அதற்காகத் தான் அவர் என்னை விவாகரத்து செய்தார் போன்ற பேச்சுக்கள் முட்டாள்தனமானவை. அவர் ஒருபோதும் என்னை ஏமாற்றியதில்லை.

அதேபோல் நானும் இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. ஏனென்றால் என் தேவை திருமணம் இல்லை. அவருக்கு துணை தேவைப்பட்டதால் செய்து கொண்டார். ஒருவரின் தேவைகளை வைத்து அவரை தண்டிக்க முடியாது அல்லவா? அவர் அவருக்கு எது நல்லதோ அதைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

நான் என் வாழ்நாளின் பெரும் பகுதியை சகுந்தலா பாருவாவின் மகளாகவும், ஆஷிஷ் வித்யார்த்தியின் மனைவியாகவும் கடந்துவிட்டேன். இப்போது என் வழியில் செல்கிறேன். அதற்காக இத்தனை காலம் என் அடையாளத்தை அழித்துவிட்டேன் என்றில்லை. நான் இப்போது என் அடையாளத்தை வேறு பாதையில் தேடுகிறேன்” என்று அந்தப் பேட்டி முடிகிறது.

திரைப்படங்களும், வெப் சீரிஸ்களும் ஆண் - பெண் உறவை, திருமண பந்தத்தை, விவாகரத்திற்கான ட்ரான்சிஷனை கலை வடிவில் சொல்லிவிட நிறைய மெனக்கிடல்களை செய்யும்போது யதார்த்தமாக அந்த ட்ரான்சிஷனை அனுபவ ரீதியாக சொல்லியிருக்கிறார் பில்லு வித்யார்த்தி. ஆனால், இதிலும் கூட ஏன் ஒரு மனைவியாக இருந்தவர் மட்டும் இவ்வளவு விளக்கங்களைக் கொடுக்க வேண்டிய சூழல் இருக்கிறது என்ற கேள்வி எழாமல் இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

7 hours ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

18 days ago

வாழ்வியல்

20 days ago

வாழ்வியல்

27 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்