பூஞ்சைகள் என்னும் அதிசயம்

By செய்திப்பிரிவு

விலங்கு, தாவரம், பாக்டீரியா போன்ற உயிரிகளின் ஐந்தாம் தொகுப்பில் பூஞ்சைகள் உள்ளன. பூஞ்சை செல்கள் வியக்கத்தக்க வகையில் மனித உயிரணுக்களை ஒத்திருக்கின்றன என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 1.538 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு விலங்குகளிடமிருந்து பூஞ்சைகள் பிரிகின்றன. தாவரங்கள் நிலத்தில் வளர ஆரம்பிப்பதற்கு முன்பே (60 கோடி ஆண்டுகள்) பூஞ்சைகள் நிலத்தில் வேர் பிடித்துவிட்டன. மண்ணில் பொதிந்து கிடக்கும் பாஸ்பரஸ், அமோனியா போன்ற நைட்ரஜன் செறிவான மூலக்கூறுகள், நுண்ணூட்டமான துத்தநாகம், செம்பு போன்றவற்றில் சில நொதிகளை உமிழ்ந்து வேதிவினை புரிந்து, பிரித்து எடுக்கும் திறனை நிலவாழ் பூஞ்சைகள் பெற்றுவிட்டன. ஒளிச்சேர்க்கை செய்யக் கூடிய தாவரங்கள் போல் அல்லாமல், பூஞ்சைகள் விலங்குகளை போல ஆற்றலுக்கான வெளிப்புற உலகை சார்ந்திருக்கின்றன.

பூஞ்சைகள் அவற்றின் செல் சுவர்களில் சிடின் எனப்படும் ஒரு பொருளைக் கொண்டுள்ளன, இது பூச்சிகள், சிலந்திகளின் எலும்புக்கூடுகளிலும் காணப்படும் பொருளாகும். பூஞ்சைகள் உலகை சேர்ந்த காளான்கள் மரங்களை தொடர்புகொள்ள அனுமதிக்கின்றன.

உதாரணத்துக்கு, ஒரு காளானின் கீழ் ஒரு பரந்த வலையமைப்பு இருக்கிறது. அந்த வலையமைப்பு காடுகளில் பல ஏக்கர்கள் அளவு பரவி இருக்கிறது. காளான்கள் ஒரு காட்டில் உள்ள பல்வேறு தாவரங்களை இணைக்கும் மைசீலியம் எனப்படும் மெல்லிய இழைகளைக் கொண்டுள்ளது. இவை மரங்கள் தொடர்புகொள்ள உதவுகின்றன.

மரங்களுடன் தொடரும் - பண்டமாற்றுமுறை: பூஞ்சைகளும் தாவரங்களும் நெருக்கமான உறவை கொண்டிருக்கின்றன. ஏனெனில், தாவரங்கள் கார்பன் நிறைந்த சர்க்கரைகளை பூஞ்சைகளை வழங்குகின்றன. இதற்கு பதிலாக பூஞ்சைகள் மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட ஊட்டச்சத்துகளை தாவரங்களுக்கு வழங்குகின்றன. இந்த மைசீலியம் வலையமைப்பு தாவரங்கள் மற்றும் பூஞ்சைகளை ஒருவருக்கொருவர் பொருட்களை பரிமாறிக்கொள்ள அனுமதிப்பதுடன் காட்டில் உள்ள பல்வேறு தாவரங்கள் தொடர்பு கொள்ள உதவுகின்றன.

வயதான மற்றும் பெரிய மரங்கள் காளான்களின் கீழ் உள்ள இந்த மைசீலிய வலையமைப்பின் மூலம் கார்பன்களை பரிமாறி கொள்கின்றன. இதன் மூலம் இந்த மரங்கள் உயிர் பிழைக்க பூஞ்சைகளின் வலையமைப்பு உதவுகிறது. ஆனால், மரங்கள் பல நேரம் இந்த வலையமைப்பின் மூலம் கார்பன்களை திருடவும், மேலும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை தங்கள் போட்டியாளர்கள் மீது செலுத்தவும் இதனை பயன்படுத்தலாம்.

ஒளிரும் பூஞ்சைகள்: சுமார் 80 பூஞ்சை இனங்கள் பயோலுமினசென்ட் என்று அறியப்படுகின்றன. அதாவது இருட்டில் மிளிரும் தன்மை கொண்டவை. பிரேசிலில் உள்ள நியோனோதோபானஸ் கார்ட்னெரி மற்றும் தெற்கு வியட்நாமில் உள்ள நியோனோதோபானஸ் என்ற இரு காளான்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், இந்த காளான்களில் லூசிஃபெரேஸ் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இது ஆக்சிஜனுடன் கலக்கும்போது உண்டாகும் ரசாயன எதிர்வினை ஒளியை தருகிறது.

1000 ஆண்டுகளாக மருத்துவத்துக்கு பயன்படும் காளான்கள்: 1000 ஆண்டுகளாகவே உலகின் பல பகுதிகளில் மக்கள் காளான்களை மருத்துவத்துக்கு பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். கால்வாட்டியா ஜைசான்டியா என்று அழைக்கப்படும் பெரிய பந்து காளானை வட அமெரிக்க மக்கள் இன்னமும் தங்கள் காயத்திற்காக பயன்படுத்துகின்றனர் மேலும், மேஜிக் காளான்கள் மன அழுத்தத்திற்கு மருந்தாக பயன்படுகிறது. எனினும் இதுகுறித்த மருத்துவ ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன.

சீனர்களும் காளான்களை மருத்துவத்திற்காக பயன்படுத்துகின்றன. மேலும், உண்ணக் கூடிய, மயக்க நிலையை ஏற்படுத்தும் காளான்களும் இதில் உள்ளன. உலகெங்களில் நச்சுத் தன்மை கொண்ட காளான்களை உண்பதால் மரணங்களும் ஏற்படுவதாக கூறப்படுகின்றது.

பிளாஸ்டிக் கழிவுகளை உடைக்க உதவும் பூஞ்சைகள்.. - பிளாஸ்டிக் பொதுவாக சிதைவதற்கு பல ஆண்டுகள் ஆகின்றது. ஆனால், அஸ்பெர்கிலஸ் டூபிங்கென்சிஸ் என்ற பூஞ்சை சில வாரங்களில் பிளாஸ்டிக்கை சிதைக்கும் தன்மைகொண்டது.

இந்த பூஞ்சைகள் முதன்முதலில் 2017-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள ஒரு குப்பை கிடங்கில் வளர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குவைத்-இ-ஆசம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த பூஞ்சைகளில் காணப்படும் நொதிகள் பாலியூரித்தேனை உடைக்க முடியும் என்று கண்டறிந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE