பெருங்கருணையில் உள்ள சிவன் கோயிலை கட்டியது சோழர் படை: கல்லூரி மாணவி ஆய்வில் தகவல்

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத் தூர் அருகே பெருங்கருணையில் உள்ள சிவன் கோயில் சோழர்களின் வேளக்கார மூன்றுகைப் படையினர் கட்டிய தகவலை தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டு வரும் மாணவி சிவரஞ்சனி தெரிவித்தார்.

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் மூலம், கல்வெட்டு, கோயில் கட்டிடக் கலை ஆகியவற்றில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அதன் தலைவர் வே.ராஜகுரு பயிற்சி வழங்கி வருகிறார்.

இப்பயிற்சி பெற்ற ராமநாதபுரம் அருகேயுள்ள பால்கரையைச் சேர்ந்த மாணவி வே.சிவரஞ்சனி தொல்லியல் இடங்களை நேரில் கள ஆய்வு செய்து வருகிறார்.

எம்.ஏ தமிழ் பயின்றுள்ள வே.சிவரஞ்சனி, தற்போதுபி.எட் பயின்று வருகிறார். முதுகுளத்தூர் அருகே பெருங்கருணையில் தொல்லியல் ஆய்வு நிறுவன மாணவ, மாணவியர் வி.டோனிகா, ஸ்ரீவிபின், முகம்மது சகாப்தீன், தீபிகா, பார்னியா ஆகியோருடன் மாணவி வே. சிவரஞ்சனி கள ஆய்வு செய்தார்.

இதுபற்றி மாணவி வே.சிவரஞ்சனி கூறியதாவது: பெருங்கருணையில் உள்ள கல்வெட்டுகளில் இவ்வூர் தடங்கழி, பெருங்கருணைச் சதுர்வேதி மங்கலம், மஹா கருணா கிராமம், சிலைமுக்குயநல்லூர் எனவும், ஆங்கிலேயர் காலத்தில் 'வெள்ளந்துறையாகிய பெருங்கருணை' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வூரில் ஸ்ரீஅகிலாண்ட ஈசுவரர் கோயிலில் உள்ள 2 கல்வெட்டுகள், மத்திய தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெருங்கருணை சிவன் கோயில் கல்வெட்டை படியெடுக்கும் மாணவர்கள்.

சோழர் படை அமைத்த சிவன் ஆலயம்: ஸ்ரீஅகிலாண்ட ஈசுவரர் கோயிலில் உள்ள ‘புகழ்மாது விளங்க’ எனத் தொடங்கும் கல்வெட்டு, கி.பி.1,114-ம் ஆண்டு முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்தை சார்ந்தது.

கல்வெட்டில், கோயில் பூஜைகளுக்காக குலோத்துங்கச் சோழ அள்ளு நாடாழ்வான் என்பவர் 11 தடி அளவுள்ள துண்டு நிலங்களை கோயிலுக்குக் கொடையாக வழங்கியுள்ளார். இதில் அரைசறு கண்டி வயக்கல், மஞ்சளி வயக்கல், பெற்றாள் வயக்கல், செந்தி வயக்கல், சோழன் வயக்கல், தொண்டி வயக்கல், தொளர் வயக்கல் உள்ளிட்ட 12 வயக்கல் நிலங்கள் குறிப்பிடப்படுகின்றன.

தரிசு நிலத்தை சீர்படுத்தி, பயிர் செய்வதற்குரிய வகையில் பண்படுத்தப்பட்ட நிலம் வயக்கல் எனப்படும்.

மேலும் கல்வெட்டில் சிவனின் பெயர் திருவேளக்கார மூன்றுகை ஈஸ்வரமுடைய மகாதேவர் என்று உள்ளது. இதன்மூலம் சோழர்களின் வேளக்கார மூன்றுகை படையினர், இக்கோயிலைக் கட்டினர் என்பது தெரிய வருகிறது. மேலும் திருநெல்வேலி மாவட்டம், மணப்படைவீடு என்ற ஊர் சிவன் கோயிலும் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் மூன்றுகை படையால் கட்டப்பட்ட கோயில் ஆகும்.

பெருங்கருணையில் கள ஆய்வின்போது கண்டெடுக்கப்பட்ட
வரலாற்றின் இடைக்காலத்தைச் சேர்ந்த தொல்பொருட்கள்.

இடைக்காலக் குடியிருப்பு: இவ்வூரில் கள மேற்பரப்பாய்வு செய்தபோது சிவப்பு, கருப்பு பானை ஓடுகள், வட்டச்சில்லுகள், சுடுமண் சக்கரம் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. இங்கு இரும்பு உருக்காலை இருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது.

கி.பி.12-14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. கி.பி.12-லிருந்து 19-ம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் இப்பகுதியில் முக்கிய ஊராக இவ்வூர் இருந்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE