உணவு சுற்றுலா: கொல்லிமலையின் முடவாட்டுக்கால் சூப்

By டாக்டர் வி.விக்ரம்குமார்

திணைக்கு ஏற்ப உணவுகளையும் இயற்கையான மருந்துகளையும் சாப்பிட்ட பாரம்பரியம் நமக்குச் சொந்தம். குறிஞ்சியாகட்டும், மருதமாகட்டும் அந்தந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், பிரத்யேகமாக அங்கு விளையும் உணவுப் பொருட்களைத் தங்கள் உடல், காலச் சூழலுக்கு ஏற்ப சமைத்துச் சாப்பிட்டனர். நோயைத் தடுக்கும் மருந்தாகவும், உடலுக்கு வலிமை அளிக்கும் உணவாகவும் அப்பொருட்கள் பெரும்பாலும் பயன்பட்டன.

இந்த வகையில், குறிஞ்சியிலும் முல்லையிலும் விளைந்து அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளுக்கு மருந்தாக முடவாட்டுக்கால் கிழங்கு பயன்பட்டது. ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு, முடவாட்டுக்கால் சூப்பைப் பருகிவிட்டு, 'சைவ ஆட்டுக்கால் சூப்' என்ற தலைப்பில் இந்து திசை நாளிதழில் நான் எழுதிய கட்டுரை இன்னும் நினைவிருக்கிறது.

முடவாட்டுக்கால் சூப்

ஏற்காடு, கொல்லி மலைப் பகுதிக்குச் சுற்றுலா சென்றால், 'முடவாட்டுக்கால் சூப் இங்கே கிடைக்கும்' என்று பல்பத்தின் உதவியால் சிலேட்டில் எழுதப்பட்டிருக்கும் நிறையக் கடைகளைப் பார்க்கலாம். கொல்லிமலையின் மையப் பகுதியில் உள்ள கடையில், லுங்கியும் மேல் சட்டையும் அணிந்துகொண்டிருந்த அவ்வூர் மக்களும் சுற்றுலாப் பயணிகள் பலரும் நின்று சூப் பருகிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.

கடைக்குள் சக பயணியாய் நுழைந்து சூப் பருகிக்கொண்டே, கிழங்கைப் பற்றி விசாரித்த போது, கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. முன்பிருந்ததை விட இப்போது முடவாட்டுக்கால் பற்றிய விழிப்புணர்வு சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகரித்திருப்பதாகவும், பல பகுதிகளிலிருந்து மொத்தமாக முடவாட்டுக்கால் கிழங்கை விற்பனைக்கு வாங்கிச் செல்வதாகவும் விற்பனையாளர் தெரிவித்தார்.

குளிருக்கு இதமான சூப்

மாலை வேளையில் கொல்லி மலைக் கிராமம் ஒன்றில் பறவைகளைத் தேடி உலாவிக்கொண்டிருந்தேன். உடலைச் சில்லிடச் செய்யும் பனிமூட்டப் பரப்பைப் பறவைகளின் அழைப்பொலி மேலும் அழகாகக் காட்டியது.

சூடாக ஏதாவது பருக வாய்ப்பிருக்காதா என்று ஏங்கியபோது, சிறிய பெட்டிக் கடை ஒன்று தென்பட்டது. அக்கடையின் அடுப்பிலிருந்த பாத்திரத்திலிருந்து சூடு பறக்க ஆவி பறந்து கொண்டிருந்தது. கடுங்காபி அல்லது காபியாக இருக்கலாம் என்று விசாரித்ததில், அது மாலை நேரத்தில் சூடாகத் தயாரிக்கப்படும் முடவாட்டுக்கால் சூப் என்று தெரியவந்தது. காலையில் குடித்த சூப்பின் சுவையே இன்னும் நாவில் ஒட்டிக்கொண்டிருக்க, மகிழ்ச்சியில் ஒரு சூப் வாங்கிப் பருகலானேன். குளிருக்குத் தோதான சூட்டையும் சுவையையும் வழங்கியது முடவாட்டுக்கால் சூப்.

மருத்துவப் பலன்கள்

ஆட்டுக்கால் கிழங்கு, முடவாட்டுக்கால், முடவன் ஆட்டுக்கால், ஆட்டுக்கால் எனப் பகுதிக்கு ஏற்ப பல பெயர்களால் அழைக்கப்படும் இந்தக் கிழங்கு, கம்பளியை வைத்துச் சுற்றியது போலத் தோற்றமளிக்கிறது. மலைப்பகுதி மக்களின் பல நோய்களை நீக்கும் திறமை வாய்ந்த முடவாட்டுக்கால், சுரம், மூட்டு வலி, வயிறு உபாதைகளுக்கான நல்ல மருந்து. வீக்கத்தைக் குறைப்பது, உடலை உரமாக்குவது, கிருமிகளை அழிக்கும் செய்கை போன்றவை முடவாட்டுக்காலுக்கு சொந்தம்.

அக்கிராமத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் குளிர்காலத்தில் தினமும் முடவாட்டுக்கால் ரசத்தைப் பருகுவார்களாம். உடல் சோர்வு ஏற்பட்டால் நகரத்து வாசிகளைப் போல, சிந்தடிக் மருந்துகளைத் தேடாமல் தாங்கள் சேகரித்து வைத்திருக்கும் முடவாட்டுக்காலை சூப் செய்து சூடாகக் குடிப்பார்கள்; சிறிது நேரத்தில் உடல் சோர்வை மறந்து, விவசாயம் பார்க்கவும் கிளம்பிவிடுவார்கள்.

இப்படியும் சாப்பிடலாம்

முற்காலங்களில் நீண்ட தூர நடைப்பயணங்கள் அவர்கள் மேற்கொள்ளும்போது, கிழங்கை வாயில் அடக்கிக்கொண்டு நடைபோடுவார்களாம். தாகத்தைத் தணிக்கவே இந்த ஏற்பாடு. ஒரு சாக்குத் துணியில் சிறிது மணல் வைத்து அதற்குள் கிழங்கைப் பத்திரப்படுத்துகின்றனர். இப்படி வைத்து கிழங்கை ஆறு மாதம் வரை உபயோகிக்கலாம் என்பது தகவல்.

முடவாட்டுக்கால் கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, கிழங்கை நன்றாக அரைத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அதில் சீரகம், சிறு வெங்காயம், மிளகு, பூண்டு இத்தியாதிகளை அரைத்துக் கலந்து சூப் செய்யலாம். சூப் மட்டுமன்றிச் சட்னியாகவும், துவையலாகவும் செய்து தொடு உணவாகவும் பயன்படுத்தலாம்.

கல்விக்களம்

மலைப்பகுதிக்குச் சுற்றுலா செல்லும் போது, தவறாமல் முடவாட்டுக்கால் சூப்பைக் குடிக்க மறக்காதீர்கள். கூடவே அதன் வளரியல்பு, அதன் வரலாறு, அதன் பிறப்பிடம், மலைவாழ் மக்களோடு அதன் பிணைப்பு போன்ற தகவல்களையும் சேகரித்து உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுத்தால், இன்பச் சுற்றுலா கல்விக்களமாகவும் அமையும்.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர் | தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

முந்தைய அத்தியாயம்: உணவுச் சுற்றுலா | கொடிவேரி மீன் உணவு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

7 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

27 days ago

வாழ்வியல்

28 days ago

வாழ்வியல்

28 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

1 month ago

மேலும்