சாமந்தி சாகுபடியில் நிறைவான வருமானம்: வெய்யலூர் கிராம பெண் விவசாயி மகிழ்ச்சி

By க.ரமேஷ்

கடலூர்: சேத்தியாத்தோப்பு அருகேயுள்ளது வெய்யலூர் கிராமம். இக்கிராமத்தில், பெண் விவசாயியான கயல்விழி (36) என்பவர், தனக்கு சொந்தமான குறைந்த இடத்தில் சாமந்தி பயிரிட்டு கை நிறைய வருமானம் பார்க்கிறார். குறைந்த நாள்களில் நிறைவான வாழ்வாதாரத்தை தனக்கு இது தருவதாக மகிழ்வுடன் தெரிவிக்கிறார்.

சாலையோரம் அமைந்துள்ள இவரது வயலில் மலர்ந்துள்ள சாமந்தி பூக்களை பார்க்கும் யாருமே சட்டென நின்று, ஒரு செல்ஃபி எடுத்துச் செல்வது சமீப காலமாக வாடிக்கையாக உள்ளது. இப்பகுதிகளில் உள்ள பெரும்பான் மையான விவசாயிகள் நெல், கரும்பு என எப்போதும் நல்ல மகசூலைத் தரக்கூடிய பணப் பயிர்களையே பயிரிட்டு வருகின்றனர்.

அந்த வயல்களில் வேலை பார்த்து வந்த தினக்கூலி தொழிலாளிகளில் ஒருவர் இந்த கயல்விழி. ஆனாலும், சுயமாக விவசாயம் செய்ய ஆசைப்பட்ட அவர், தனக்குச் சொந்தமான குறைந்த இடத்தில் (சுமார் 15 சென்ட்) இந்த சாமந்தி மலர்ச் சாகுபடியைச் செய்துள்ளார்.

“கூலிக்கு போவது, வீட்டு வேலை செய்வது என்பதைத் தாண்டி, முதலில் சிறுசிறு தோட்டப் பயிர்களை பயிரிட்டேன். பருவ நிலை தப்பியது, அந்த நேரத்து மார்க்கெட் விலை சரிந்தது போன்ற காரணங்களால் பயிரிட்ட காய்கறிகளால் பெரிய லாபம் இல்லை. சொற்ப விலைக்கு போனது. இந்த நேரத்தில், சாமந்தி பயிரிட்டால் மார்க்கெட் விலைக்கு வாங்குவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஓசூரில் இருந்து 3 மாதங்கள் உடைய சாமந்தி செடிகளை வாங்கி வந்து, பயிரிட்டேன். தற்போது அவை நன்றாக செழித்து வளர்ந்து அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 3 ஈடு எடுத்துள்ளேன். சொன்னது போலவே, வியாபாரிகள் நல்ல விலைக்கு வாங்குகின்றனர். இதற்கான செலவு குறைவு. பக்கத்தில் உள்ள வாய்க்கால் மடை பாசனமே போதுமானது.

குடும்ப வேலைகளை செய்து, ஓய்வு நேரத்தில் இந்த விவசாய பணியை மேற்கொள்கிறேன்” என்கிறார் கயல்விழி. நாம் சென்றிருந்த போது, இந்த முறைஉற்பத்தியானதில் தேர்ந்த மலர்களை தேடிப் பிடித்து, அடுத்த பருவத்திற்கான விதையை எடுத்து வைத்தார் கயல்விழி.

திருவண்ணாமலை, சிதம்பரம், சேத்தியாதோப்பு, விழுப்புரம் மார்க் கெட்டில் இருந்து இப்பகுதிக்கு வரும் மலர் வணிகம் செய்வோரின் சாமந்தி தேவை மிக அதிகமாக உள்ளது. தேவையை அறிந்து, தான் செய்து வந்த விவசாயப் பணியை சிறிது மாற்றிய கயல்விழி நிறைவான மகசூலைப் பெற்றிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE