பெண்களை சமமாகப் பார்க்க நம் வாரிசுகளுக்கு கற்றுத் தர வேண்டும்: நடிகை ரோகிணி அறிவுரை

By செய்திப்பிரிவு

தருமபுரி: பெண்களை சமமாக பார்க்கும் மனநிலையை நம் வாரிசுகளுக்கு நாம் கற்றுத் தர வேண்டும் என தருமபுரியில் தமுஎகச சார்பில் நடந்த கருத்தரங்கில் நடிகை ரோகிணி பேசினார்.

தருமபுரி பெரியார் மன்றத்தில் நேற்று முன்தினம் இரவு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் அம்பேத்கர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிங்காரவேல் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் சுகந்தி, வேலகணபதி, ஜெயராமன், மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் முனைவர் சிவப்பிரகாசம் தொடக்க உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், நடிகை ரோகிணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ‘கலையும் வாழ்வும்’ என்ற தலைப்பில் பேசியது: அனைத்து கலைகளுக்கும் மூத்த கலை தெருக்கூத்து தான். இங்கிருந்து தான் மற்ற எல்லா கலைகளும் தொடங்குகின்றன. பொதுவாக சமூகத்தில் மக்களிடையே அதிகாரம் திணிக்கப்படுகிறது.

அதற்கு கலை வடிவத்தையும் பயன்படுத்துகின்றனர். சமூகத்திலும், வழிபாட்டு தலத்திலும் கற்பிக்கப்படும் பாடம் என்னவென்றால் பெண்களுக்கு கல்வி முக்கியமில்லை. குடும்பத்தை கவனிப்பதும், குழந்தை பெற்றெடுப்பதும் தான் பெண்களின் பணி என்ற கருத்து திணிக்கப்படுகிறது. சமூக விதிகளை மீறும் பெண்களை கொன்று விட்டு, அவர்களின் சாபத்தில் இருந்து காத்துக் கொள்ள அந்த பெண்களை நாட்டார் தெய்வமாக வழிபடுகின்றனர்.

பெண்கள் ஓட்டினாலும் விமானங்களும், ராக்கெட்டுகளும் பறக்கும். பெண்கள் காலடி வைப்பதை சந்திர மண்டலம் ஒன்றும் புறக்கணித்து விடாது. பெண் அடிமைத் தனத்துக்கு எதிராக அம்பேத்கரும், பெரியாரும் போராடினர். குடும்பங்களில் பெண்களை சமமாக மதிக்க நம் வாரிசுகளுக்கு நாம் கற்றுத் தர வேண்டும். அறிவியல் வளர்ந்து கொண்டே இருந்தாலும் மலக்குழி மரணங்களுக்கு தீர்வு இல்லை. இந்த மரணங்களுக்கு சமரசமும், இழப்பீடும் தான் கிடைக்கிறது, நீதி கிடைக்கவில்லை. இவ்வாறு பேசினார்.

தொடர்ந்து, ‘சனாதனமும், சமூகநீதியும்’ என்ற தலைப்பில் தமுஎகச மாநில பொதுச் செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா பேசியது: ஆணுக்கு பெண் அடிமை என சனாதனம் கூறுகிறது. ஒரு மனிதன் மற்றொரு மனிதனை சமமாகப் பார்ப்பதில்லை. அதேபோல, இங்கு பொருளாதார பாகுபாடு நிலவுகிறது.

இந்தியாவின் 52 சதவீத மக்களிடம் நிலம் இல்லை. இந்த ஏற்றத் தாழ்வும், பாலியல் பாகுபாடும் எப்போதும் இருக்க வேண்டும் என்று சனாதனம் சொல்கிறது. நமக்கு இயற்கை நீதி தான் வேண்டும். இதை சீர்குலைத்த மனுநீதியை பின்னுக்கு தள்ளி அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையிலான சமூக நீதிக்காக மக்கள் சக்தியை ஒன்றிணைப்போம். இவ்வாறு பேசினார். கருத்தரங்க முடிவில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

இந்நிகழ்ச்சியில், சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் நவகவி, மாவட்ட பொருளாளர் ஆதிமுதல்வன், தகடூர் புத்தகபேரவை தலைவர் சிசுபாலன், மக்களுக்கான மருத்துவ சங்க தலைவர் மருத்துவர் பகத்சிங் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையிலான சமூக நீதிக்காக மக்கள் சக்தியை ஒன்றிணைப்போம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE