கொடைக்கானல் | விவசாயம் செழிக்க பொங்கல் வைத்து கிராம மக்கள் வழிபாடு

By ஆ.நல்லசிவன்

கொடைக்கானல்: விவசாயம் செழிக்க வேண்டி கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் சித்திரை பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கிளாவரை, பூம்பாறை, கவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் மலைப்பூண்டு, கேரட், உருளைக் கிழங்கு ஆகியவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அவை கொண்டு செல்லப்படுகின்றன. இங்குள்ள மக்களின் பிரதான தொழிலே விவசாயம் தான்.

இம்மலைக்கிராமங்களில் சித்திரை மாதம் பயிர்களை நடவு செய்வது வழக்கம். அப்போது விவசாயம் செழிக்க வேண்டி, ஆண்டுதோறும் சித்திரை மாதம் 18-ம் தேதிக்குள் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆற்றங்கரையோரம் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இந்தாண்டு நேற்று காலை மலைக்கிராமங்களில் ஆறு மற்றும் நீர் நிலைகளுக்கு அருகில் சித்திரை பொங்கல் வைத்து, பல வகையான காய்கறிகளை படையல் வைத்து விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் வழிபட்டனர்.

இது குறித்து மன்னவனூரைச் சேர்ந்த விவசாயி வல்லரசு கூறுகையில், "ஆண்டுதோறும் சித்திரை மாதம் விவசாய பணிகளை தொடங்கியதும், பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். இப்படி செய்வதால் விவசாயம் செழிக்கும் என்பது எங்களது நம்பிக்கை. இதை காலங்காலமாக பின்பற்றி வருகிறோம்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE