கல்வான் தாக்குதலில் உயிரிழந்த வீரரின் மனைவி ராணுவ அதிகாரியானார்!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியா-சீனா ராணுவத்தினர் இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்த வீரர் தீபக் சிங்கின் மனைவி ரேகா சிங், சென்னையில் ராணுவ பயிற்சியை நேற்று நிறைவு செய்தார். அவர் லெப்டினன்ட் அதிகாரியாக கிழக்கு லடாக் பகுதியில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இந்திய ராணுவத்தின் பிஹார் படைப்பிரிவில் வீரராக பணியாற்றியவர் தீபக் சிங். இந்தியா-சீனா எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020-ம்ஆண்டு ஜூன் மாதம் சீன ராணுவத்தினர் ஊடுருவினர். அவர்களை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தியபோது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் தீபக் சிங். இவரது வீரதீர செயலை பாராட்டி, கடந்த 2021-ம் ஆண்டு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டது. அதை தீபக் சிங்கின் மனைவி ரேகா பெற்றார்.

கணவர் உயிர் தியாகம்

கணவர் இறந்தபின் இவர் ராணுவ அதிகாரி பணிக்கு விண்ணப்பித்தார். வீரமரணம் அடைந்த வீரர்களின் மனைவிக்கு ராணுவத்தில் அதிகாரியாக சேர யுபிஎஸ்சி நடத்தும் பாதுகாப்பு படைகளுக்கான எழுத்து தேர்வில் இருந்துவிலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. ராணுவ அதிகாரி பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட ரேகா சிங், சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் (ஓடிஏ) நேற்று பயிற்சியை நிறைவு செய்தார்.

லெப்டினன்ட் அந்தஸ்து

இவர் லெப்டினன்ட் அந்தஸ்தில் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள ராணுவ படைப்பிரிவில் பணியில் சேரவுள்ளார். சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நேற்று 200 பேர் பயிற்சியை நிறைவு செய்தனர். இதில் 5 பேர் பெண்கள். பெண் அதிகாரிகள் 3 பேர் இந்தியா-சீனா எல்லையில் உள்ள படைப்பிரிவுகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதில் ரேகா சிங்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE