நினைத்த நேரத்தில் அடுத்த நொடியே ஒளிப்படம் எடுக்கும் அளவிற்கு அறிவியல் வளர்ந்திருக்கிறது. கையடக்கத்தில் அலைபேசி; அதன் பின்புறத்திலும் முன்புறத்திலும் பல குட்டி குட்டிக் கேமிராக்கள்! அவற்றின் உதவியுடன் கணக்கில்லாமல் ஒளிப்படங்களை எடுத்துத் தள்ளலாம் என்ற சூழல் இப்போது! தேவைப்படாத அல்லது சரியாகப் பதியாத ஒளிப்படங்களை உடனடியாக டெலிட் செய்துவிட்டு, பிடித்த கோணத்தில் எடுத்து அப்போதைக்கே சரிபார்த்துக் கொள்ளும் நவீன உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்போ, எடுக்கப்பட்ட ஒளிப்படத்தைப் பார்ப்பதற்குப் பல நாட்கள் காத்திருக்க வேண்டும்.
படச்சுருள் (ஃப்லிம் ரோல்கள்)
20 ஆண்டுகளுக்கு முன்பு படச்சுருள் ரோல் இல்லாமல் ஒளிப்படம் எடுக்க முடியாது. சிறிய வெள்ளை நிற டப்பாவில் இருக்கும் படச்சுருளை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. பயன்பாடற்று போன படச்சுருள்களையும், நெகடிவ் தாள்களையும் கொண்டு ‘விளையாட்டு சினிமா’ பார்த்த நினைவுகள், 90ஸ் காலக்கட்டத்தில் வாழ்ந்த சிறுவர்களுக்கு நிச்சயம் இருக்கும்.
படச்சுருளில் சுமார் 30 முதல் 35 ஒளிப்படங்களை மட்டுமே எடுக்க முடியும். கல்லூரி சுற்றுலா ஆகட்டும், திருமண நிகழ்வுகள் ஆகட்டும், படச்சுருள்களே பிரதானம். படச்சுருளின் உதவியுடன் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களுக்கு இருட்டறையில் பிரத்தியேக ஒளியின் அடிப்படையில் டெவலப்பர் உதவியுடன் நெகடிவ் கழுவப்பட்ட பின் நமது ஒளி பிம்பங்கள் கிடைக்கும். சில நேரங்களில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள், பதியாமல் போன சோகமான சம்பவங்களும் நெகடிவ் கழுவும் போது தெரிய வரும். ஒளிப்படங்களுக்கு ஆதாரமான நெகடிவ் தாள்களைப் பத்திரப்படுத்தி, பிறகு தேவைப்படும் போது ஒளிப்படமாக மாற்றிக்கொள்ளலாம்.
குழு ஒளிப்படம்
பள்ளி / கல்லூரி இறுதி நாட்களில் குழு ஒளிப்படம் எடுப்பதற்காகத் தயார் ஆகும் நிகழ்வு, 90ஸ் கால மாணவர்களுக்குப் பசுமையான நினைவு! கீழ் வரிசை, முன் வரிசை, நடு வரிசை, மேல் வரிசை என அடுக்கப்பட்ட மேசைகளின் மீது மாணவர்கள் அணிவகுத்திருப்பார்கள். உயரத்தைப் பொறுத்தும், உடல் வாகைப் பொறுத்தும் மாணவர்களின் அணிவகுத்தல் நடைபெறும். ஒன்றல்லது இரண்டு ஒளிப்படங்களே எடுக்க முடியும் என்பதால், படம் பிடிப்பவர் பல்வேறு குறிப்புகளை இடைவிடாமல் கொடுத்துக்கொண்டே இருப்பார். கண்சிமிட்டாமல், ஒளிப்படத்திற்குத் தோதாக காட்சிகொடுக்க அனைவரும் மெனக்கெடுவார்கள். அனைத்தையும் மீறி சில நாட்கள் கழித்து, ஒளிப்படத்தைப் பார்க்கும் போது சுமார் ஐந்து மாணவர்களாவது கண்களை மூடி இருப்பார்கள்.
ஸ்டுடியோ ஒளிப்படங்கள்
குடும்ப ஒளிப்படம் எடுப்பதற்கு ஸ்டுடியோக்களில் கூட்டம் அலைமோதும். ஸ்டுடியோ அறைகளில் பின்னணியில் தொங்கவிடப்பட்டிருக்கும் தாஜ்மஹால், பனிமலை, காடு போன்ற படங்களுக்கு முன்பு ஒளிப்படம் எடுத்துக்கொள்வது அன்றைய மக்களின் பெரும் விருப்பம். விருப்பப்பட்ட பின்னணியில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள், பெரிய அளவில் வீட்டு அறையில் காட்சிகொடுக்கும்.
ஸ்டுடியோக்களில் உள்ள ஒப்பனை அறை, எடுக்கப்படவிருக்கும் ஒளிப்படத்தை அழகாக்கப் பெருமளவில் உதவி புரியும். மணப்பெண் பார்க்க அல்லது மணமகன் பார்க்கத் தயாராகும் ஒளிப்படங்களை எடுப்பதற்குக் கூடுதல் அக்கறையைச் செலுத்துவார்கள் ஒளிப்படக்காரர்கள்! கணினி வசதிகளும், போட்டோ ஆப்களும் இல்லாத அக்காலத்திலேயே, எடுக்கப்பட்ட ஒளிப்படத்திற்கு மெருகேற்றுவதில் வல்லவர்களாக இருப்பார்கள் ஸ்டுடியோக்காரர்கள்.
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
20 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
25 days ago
வாழ்வியல்
1 month ago
வாழ்வியல்
1 month ago