ஏழைகளுக்காக மருத்துவமனை கட்டிய கார் ஓட்டுநர்: பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரலில் பங்கேற்கிறார்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மேற்குவங்கத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் முகமது சோஹிதுல் லஸ்கர், ஏழைகளுக்காக மருத்துவமனை கட்டி நடத்தி வருகிறார். அவரது சேவையை கவுரவிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அப்போது முதல் மாதந்தோறும் வானொலியில் மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் அவர் உரையாற்றி வருகிறார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி ஒலிபரப்பானது. வரும் 30-ம் தேதி 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பாக இருக்கிறது. இதையொட்டி 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளது.

மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் அடையாளம் காணப்படாத பல்வேறு சாதனையாளர்களை பிரதமர் நரேந்திர மோடி வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார். அந்த வகையில் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்க மேற்குவங்கத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் முகமது சோஹிதுல் லஸ்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதன்படி அடுத்த வாரம் அவர் 4 நாட்கள் பயணமாக டெல்லி செல்கிறார். அவருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாட உள்ளார். இருவரின் கலந்துரையாடல் 100-வது மனதில் குரல் நிகழ்ச்சியில் ஒலிபரப்பாக உள்ளது.

யார் இவர்?

மேற்குவங்கத்தின் தெற்கு 24 பர்கானஸ் மாவட்டம், புன்ரி கிராமத்தை சேர்ந்தவர் முகமது சோஹிதுல் லஸ்கர் (51). 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர் வாடகை கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவரது கிராமம், மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் இருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு முகமதுவின் 18 வயது தங்கை மரூபாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. புன்ரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மருத்துவமனை இல்லாததால் கொல்கத்தாவுக்கு தங்கையை காரில் அழைத்துச் சென்றார். உடனடியாக சிகிச்சை கிடைக்காததால் அவரது தங்கையை காப்பாற்ற முடியவில்லை.

இந்த துயர சம்பவம் முகமதுவின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. "எனது தங்கையை போன்று வேறு யாரும் உயிரிழக்கக்கூடாது" என்று உறுதி மேற்கொண்ட அவர் சொந்த கிராமத்தில் மருத்துவமனை கட்ட முயற்சி செய்தார்.

கடந்த 2008-ம் ஆண்டில் தங்கையின் பெயரில் அறக்கட்டளையை தொடங்கினார். தனக்கு சொந்தமான 3 கார்களை விற்றார். மனைவியின் நகைகளை விற்றார். மகன் பெயரில் இருந்த ஆயுள் காப்பீட்டில் இருந்து முழு பணத்தையும் எடுத்தார். இரவு பகலாக வாடகை கார் ஓட்டி பணம் சம்பாதித்தார்.

இதில் கிடைத்த பணம் மற்றும் பொதுமக்கள் அளித்த நன்கொடையின் மூலம் கடந்த 2008-ம் ஆண்டில் புன்ரி கிராமத்தில் 28,800 சதுர அடி பரப்பில் மருத்துவமனை கட்டும் பணியை முகமது தொடங்கினார். சுமார் 10 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு கடந்த 2018-ம் ஆண்டில் 2 அடுக்குமாடிகள் கொண்ட மருத்துவமனையை அவர் கட்டி முடித்தார். மரூபா நினைவு மருத்துவமனை என்ற பெயரில் செயல்படும் இந்த மருத்துவமனையின் மூலம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 100 கிராமங்களின் மக்கள் பலன் அடைகின்றனர். தன்னார்வ உள்ளம் கொண்ட மருத்துவர்கள் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து முகமது சோஹிதுல் லஸ்கர் கூறியதாவது. எங்களது மருத்துவமனையில் 10 மருத்துவர்கள் இலவசமாக சேவையாற்றி வருகின்றனர். நாள்தோறும் சுமார் 300 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களிடம் தலா ரூ.50 கட்டணம் வசூலிக்கிறோம். மருந்துகளை இலவசமாக வழங்குகிறோம். மருத்துவமனையை நடத்த தொடர்ந்து நிதியுதவி தேவைப்படுகிறது.

மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ், எக்ஸ்ரே இயந்திரம், கூடுதல் படுக்கை வசதிகள் தேவைப்படுகின்றன. வாடகை கார் ஓட்டி சம்பாதிக்கும் பணத்தை மருத்துவமனைக்காக செலவிடுகிறேன்.

எனது சேவையை அறிந்து 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் நரேந்திர மோடியிடமும் நாட்டு மக்களிடமும் நிதியுதவி கோருவேன். நாட்டில் அமைதி நிலைத்திருக்கவும் எரிபொருள், சமையல் காஸ் விலையைக் குறைக்கவும் பிரதமரிடம் வேண்டுகோள் விடுப்பேன். இவ்வாறு முகமது சோஹிதுல் லஸ்கர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

5 hours ago

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

18 days ago

வாழ்வியல்

19 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

28 days ago

வாழ்வியல்

1 month ago

மேலும்