ஆத்தோரத்தில் அமர்ந்து காற்று வாங்கிக்கொண்டே, ஆற்று மீன்களைப் பிடித்து, சூடாக சமைத்து சாப்பிட ஆசையா! அப்போது நீங்கள் உடனடியாகப் பயணப்பட வேண்டிய இடம் கொடிவேரி! ஈரோடு மாவட்டம் கோபிக்கு அருகில் இருக்கிறது கொடிவேரி. அங்கே இருக்கும் சுமார் முப்பது அடி உயர சிறிய அணைக்கட்டு, பவானி சாகர் அணையிலிருந்து வரும் தண்ணீரைத் தடுத்து நிறுத்தி வெளியேற்றுகிறது.
சிறிய அருவி போல வித்தியாசமாக இருக்கும் இந்தக் கொடிவேரி அணைக்கட்டில் குளிக்க மக்கள் விடுமுறை நாட்களில் படை எடுப்பது வாடிக்கை. கோபியிலிருந்து பசுமை போர்த்திய பகுதிக்கு நடுவிலான சாலையில் பயணித்தால் சுமார் 20 நிமிடங்களில் கொடிவேரியை அடையலாம். இருபுறமும் வாழை மரத் தோப்புகள், நெல் வயல்கள் என கண்களுக்கு விருந்தளிக்கும் சாலை, குளிர்ச்சி தரும் கொடிவேரிக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
அணைக்கட்டின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சிப்படுத்த பரிசல்கள் காத்திருக்கின்றன. தண்ணீர் வழிந்திறங்கும் அணைக்கட்டின் கீழ், மணல் படர்ந்த கரைப் பகுதியில் எக்கச்சக்கமான மீன் கடைகள் வரிசைக்கட்டி நிற்கின்றன. கொடிவேரி அணையை நோக்கிச் செல்லும் போதே, ‘வாங்க மீன் சாப்பாடு சாப்பிடுங்க… மீன் குழம்பு டேஸ்டா இருக்கும்’ என மீன் கடைகளின் உரிமையாளர்கள் அழைக்கிறார்கள். கடை உரிமையாளர்கள் பெரும்பாலும் அப்பகுதியில் இருக்கும் இல்லத்தரிசிகளே!
தனித்துவமான உணவு சுகம்
கடைகள் என்றால் பெரிய கற்பனை எல்லாம் வேண்டாம். மணல் பரப்பின் மீது இரண்டு மேசைகள், சுற்றிலும் சில நாற்காலிகள், மணலில் விரிக்கப்பட்ட தார்ப்பாய்கள்! அருகிலேயே சாதம் வேக வைக்கவும் மீன் சமைக்கவும் விறகடுப்பு எப்போதும் கனன்று கொண்டே இருக்கிறது. கால்களுக்கு எட்டிய தூரத்தில் உள்ள ஆற்றுநீரின் சலனமும் மனதை உற்சாகப் படுத்திக்கொண்டே இருக்கிறது.
மணற் கடைகளில் சாதமும் மீன் குழம்பும் தயாராக இருக்கின்றன. பசியோடு வருபவர்கள் அப்போதே சாப்பிட்டு விட்டு குளிக்கச் செல்கிறார்கள். மற்றவர்கள், ‘எவ்வளவு சாப்பாடு வேண்டும், எவ்வகையான மீன் வேண்டும்’ என்று சொல்லிவிட்டு குளிக்கச் செல்கிறார்கள். ஆனந்தக் குளியல் போட்ட பிறகு ஏற்படும் உற்சாகப் பசியை சாந்தப்படுத்த மீன் உணவுகள் ஆர்டர் செய்த கடையில் ஆவி பறக்க காத்திருக்கின்றன. பசியோடு மீன் குழம்பை சாதத்தில் பிசைந்து சாப்பிடுவது தனித்துவமான உணவு சுகம் தான்!
கூட்டாஞ்சோறு
ஒவ்வொரு கடைக்குப் பின்புறமும் தார்ப்பாய்கள் மணல் பரப்பின் மீது விரிக்கப்பட்டிருக்கின்றன. குடும்பம் சகிதமாக வந்து மீன் உணவுகளைக் கூட்டாஞ்சோறாக சாப்பிடும் வழக்கத்தை அங்கு பார்க்க முடிகிறது. ஆற்றங்கரையில் மணல் மீது பத்து பதினைந்து பேர் வட்டமாக சம்மணமிட்டு அமர்ந்து, ஒருவருக்கொருவர் பரிமாறி சாப்பிடும் சூழல் பழைய உணவு நினைவுகளைத் தூண்டுகிறது.
மீன் குழம்போடு சேர்த்து ஒரு தட்டு சாப்பாட்டின் விலை ஐம்பது ரூபாய். தட்டு நிறைய சாதமும், அதற்குள் குழி வெட்டி ருசியான மீன் குழம்பையும் ஊற்றித் தருகிறார்கள். குழம்புக்கு அளவெல்லாம் இல்லை. தேவைக்கேற்ப வாங்கிக்கொள்ளலாம். எல்லாம் ஐம்பது ரூபாயிலே அடக்கம். தட்டு நிறைய கொடுக்கப்படும் சாதமே பசியை சாந்தப்படுத்திவிடும். கூடுதலாக சாதம் தேவைப்படுபவர்கள் இருபது ரூபாய் கொடுத்து சாதமும் வாங்கிக்கொள்ளலாம்.
கரையும் மீன்கள்
அருகிலிருக்கும் ஆற்றிலே கிடைக்கும் மீன்கள், குழம்பில் இடம்பிடிக்கின்றன. சிறிய பாறைக் கணுவா என அப்பகுதியில் அழைக்கப்படும் மீன்கள், குழம்போடு கரைந்து சுவையைக் கூட்டுகின்றன. குழம்பில் இருக்கும் மீன்களைக் கையில் தொட்டாலே கரையும் அளவுக்கு மென்மையாக இருக்கின்றன. குழம்பின் சுவைக்கும் ஆதாரமாக இருக்கின்றன. நீர்த்த மீன் குழம்பாக இல்லாமல், கொஞ்சம் கிரேவி சாயலில் குழம்பு இருப்பதால் புதுமையான சுவை அனுபவத்தைக் கொடுக்கிறது.
மீன் வறுவல்
கூடுதலாக மீன் வறுவல் வேண்டுபவர்கள் ரோகு, கட்லா, பாறை, ஜிலேபி என விறகடுப்பில் வறுத்துக் கொடுக்கப்படும் மீன்களை விரும்பி சாப்பிடுகிறார்கள். சில கடைகளில் அம்மியில் அரைத்த மசாலா கலவைகளை மீன்களில் தடவி வைத்து சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கிறார்கள். மீன் வகைகளைப் பொறுத்து வறுத்த மீன்களின் விலை 30, 50, 100 ரூபாய்களில் கிடைக்கின்றன. அங்கு பிரசித்திப் பெற்ற மீன் சாதத்திற்கு தொடுகையாக, வறுத்த மீன்களைப் பலர் விரும்பி சாப்பிடுவதைப் பார்க்க முடிந்தது.
பொதுவாக பயணம் செல்லும்போது, அங்கே சுவையான தரமான உணவுகள் கிடைக்குமா என்ற அச்சம் பலருக்கும் இருக்கும். ஆனால் கொடிவேரி பகுதிக்கு நீங்கள் பயணம் மேற்கொள்கிறீர்கள் என்றால், கொஞ்சமும் அச்சப்படாமல் வீட்டு சாப்பாடு தரத்தில் மீன் உணவுகள் கிடைக்கும் என்ற தைரியத்தோடு செல்லலாம்! ஆற்றங்கரையில் அமர்ந்து சுவையாக சாப்பிடலாம், நீரோட்டத்தை ரசித்துக்கொண்டே!
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர் | தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com
| முந்தைய அத்தியாயம்: உணவுச் சுற்றுலா | சேலத்து அல்வா புட்டு |
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
3 hours ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
4 days ago
வாழ்வியல்
5 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
13 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
16 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
28 days ago