‘உதகை 200’ மரபுவழி நடைபயணம் தொடக்கம்

By செய்திப்பிரிவு

உதகை: உதகை நகரம் உருவாகி 200 ஆண்டுகள் தொடங்கியதை கொண்டாடும்வகையில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற 'உதகை-200' மரபுவழி நடைபயணத்தை, அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இது தொடர்பாக ஆ.ராசா கூறும்போது, "200 ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் 1824-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கண்டறியப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, 200 ஆண்டுகள் நிறைவை கொண்டாட வேண்டுமென, கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, உதகையில் 200 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட பழங்கால கட்டிடங்கள், அரசு கலைக் கல்லூரி, ஆதாம் நீரூற்று, அசெம்பிளி திரையரங்கம், பிரிக்ஸ் பள்ளி, நீலகிரி நூலகம், மாவட்ட நீதிமன்றம், ஸ்டீபன் தேவாலயம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய பாரம்பரிய இடங்களை கண்டறிந்து பாதுகாக்கும் வகையில் பள்ளி, கல்லூரிமாணவர்களை மரபுவழி நடைபயணம் அழைத்துச் செல்வதற்கு, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாதுறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு, நடைபயணம் தொடங்கி வைக்கப்பட்டது" என்றார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் மோனிகா ரானா, மாவட்ட வன அலுவலர் கௌதம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE