சிந்தனையின் மிக உயர்ந்த அடையாளம் மொழி: எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் கருத்து

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: சிந்தனையின் மிக உயர்ந்த அடையாளம் மொழி என்று, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் பேசினார்.

அனைத்து மாணவர்களிடமும் தமிழ் மொழி குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்பதன் அடிப்படையில், தமிழர்களின் பெருமை, பண்பாடு, கலாச்சாரம் தமிழின் தொன்மை ஆகியவற்றை உணர்த்தும் வகையில், ‘மாபெரும் தமிழ் கனவு’ என்ற பண்பாட்டு பரப்புரை நிகழ்வு, பொள்ளாச்சியில் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்தார். எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், பேச்சாளர் கரு.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மொழியும், வழியும் என்ற தலைப்பில் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் பேசும்போது, "தமிழ் மொழியை, கல்வியை, கலாச்சாரத்தை ஒரு தலைமுறைக்கு கொண்டு வந்து சேர்க்கும் மிகக் கடினமான, ஆழமான முயற்சியாக மாபெரும் தமிழ் கனவு அமைந்துள்ளது. சிந்தனை என்பது முழுவதும் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானது.

சிந்தனையின் மிக உயர்ந்த அடையாளம் மொழி. தனிமனிதன் சொத்து அல்ல மொழி, அது பொதுச்சொத்து. உலகில் 19 ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. அதில் 200-க்கும் குறைவான மொழிகளுக்கு மட்டுமே எழுத்து வடிவம் உள்ளது. அதில் 2000 ஆண்டுகள் பழமையான மொழிகள் கிரேக்கம், லத்தீன், ஈப்ரூ, சமஸ்கிருதம், சீனம் மற்றும் தமிழ். இதில் இன்று வரை மக்களால் பேசப்படும் உயிர்ப்புடன் உள்ள மொழிகள் தமிழ், சீனம் மட்டுமே. தமிழ் மொழி பழமையும், சிறப்பும் வாய்ந்த இலக்கண, இலக்கிய வளம் கொண்டது" என்றார்.

பாடத்திட்டம் தாண்டி வாசிப்பு என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் பேசும்போது, "தமிழ்நாட்டின் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு ஆகியவற்றை அறிந்துகொள்ளும் இந்நிகழ்ச்சி சிறப்பானது. தமிழ் மொழியின் சிறப்பு, வார்த்தைகளை மாற்றி அமைத்தாலும் வாக்கியத்தின் பொருள் மாறாமல் இருப்பது, ஒரே வார்த்தையை பலவிதமாக மாற்றி அமைக்க முடியும்.

இந்தியாவிலேயே மொழி வாழ்த்து பாடல் கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான்" என்றார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான கையேடும், தமிழ் பெருமிதம் என்ற கையேடும் வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE