தஞ்சை தமிழ்ப் பல்கலை.யில் 50% தள்ளுபடியில் நூல்கள் விற்பனை தொடக்கம்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக பதிப்புத் துறை சார்பில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு 50 சதவீத சிறப்புத் தள்ளுபடி நூல்கள் விற்பனை, பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தொடங்கியது.

சிறப்புத் தள்ளுபடி விற்பனையை, பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். அப்போது, அவர் பேசியது:

தமிழில் பன்முக கூறுகளை ஆழமாக ஆராய்வது, ஆவணப்படுத்துவது, பதிவு செய்வது என பல நிலைகளில் தமிழ் மொழி, கலை, பண்பாடு, அறிவியல் தளங்களை தமிழ் மக்களிடையே எடுத்துச் செல்வதில் தமிழ்ப் பல்கலைக்கழகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மட்டுமின்றி, தமிழ் உலகின் தலைசிறந்த ஆய்வு அறிஞர்களின் படைப்புகள், பழந்தமிழ் இலக்கியங்கள், அகராதி மற்றும் களஞ்சியங்கள் என பலவகை நூல்களையும் ஆழமாக பதிவு செய்து, அவற்றை நூலாக வெளியிடும் பணியை பல்கலைக்கழக பதிப்புத் துறை மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்கள் மலிவு விலையில் அரிய நூல்களை வாங்கி பயன் பெறும் வகையில், சித்திரை திருநாள் மற்றும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் ஆகிய நாட்களில் 50 சதவீத சிறப்புத் தள்ளுபடியில் நூல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, நிகழாண்டு மே 13-ம் தேதி வரை நடைபெறும் சிறப்புத் தள்ளுபடி விற்பனையை பொதுமக்களும், தமிழ் அறிஞர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழகப் பதிவாளர்(பொறுப்பு) சி.தியாகராஜன், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் நீலகண்டன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்(பொறுப்பு) கோவை மணி, பதிப்புத் துறை இயக்குநர்(பொறுப்பு) பன்னீர்செல்வம், மக்கள் தொடர்பு அலுவலர்(பொறுப்பு) முருகன் மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். மே 13-ம் தேதி வரை நடைபெறும் சிறப்புத் தள்ளுபடி விற்பனையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE