1.83 கிராம் தங்கத்திலான வில்லிசை கருவிகள்: ராஜபாளையம் நகைத் தொழிலாளி அசத்தல்

By அ.கோபால கிருஷ்ணன்

ராஜபாளையம்: ராஜபாளையத்தைச் சேர்ந்த நகைத் தொழிலாளி தமிழர்களின் பாரம்பரிய வில்லிசை கலையை பாதுகாக்கவும், அது குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1.83 கிராம் எடையுள்ள தங்கத்தில் 8 வில்லிசை கருவிகளை உருவாக்கி அசத்தியுள்ளார்.

ராஜபாளையம் பூபால்பட்டி தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் (45). இவர் கடந்த 28 ஆண்டுகளாக தங்க நகை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் முதன் முதலாக கடந்த 2011ம் ஆண்டு இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை நடைபெற்ற போது 210 மில்லி கிராம் தங்கத்தில் ஒரு செ.மீ உயரத்தில் உலக கோப்பை மாதிரியை வடிவமைத்து சாதனை படைத்தார்.

அதன் பின் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர், கால்பந்து உலக கோப்பை, பாராளுமன்ற கட்டிடம், பல்வேறு வகையான இசை கருவிகள், வாக்குப்பதிவு இயந்திரம், பளு தூக்கும் வீரர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பொருட்களை மில்லி கிராம் எடையிலான தங்கத்தை கொண்டு ஒரு செ.மீட்டருக்கும் குறைவான உயரத்தில் தயாரித்து அசத்தி உள்ளார்.

நகைத் தொழிலாளி ராமச்சந்திரன்

இந்நிலையில் தற்போது திருவிழா காலம் என்பதால் தமிழர்களின் பாரம்பரிய கலையான வில்லிசை கலையை பாதுகாக்க வலியுறுத்தியும், இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1 கிராம் 830 மில்லி எடையிலான தங்கத்தில் வில்லிசை கலைக்கு பயன்படுத்தும் வில், குடம், மட்டை உடுக்கை, சிங்கி, கட்டை, வீசுகோல் உள்ளிட்ட 8 இசை கருவிகளை உருவாக்கி அசத்தியுள்ளார்.

இது குறித்து நகை தொழிலாளி ராமச்சந்திரன் கூறுகையில், "2011ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா வெல்ல வேண்டும் என்ற நோக்கில் 1 செ.மீ உயரத்தில் உலகக்கோப்பை மாதிரியை வடிவமைத்தேன். அதன்பின் தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள், சாதனைகள் என 20க்கும் மேற்ப்பட்டவற்றை மில்லி கிராம் இடையிலான தங்கத்தை கொண்டு ஒரு சென்டி மீட்டருக்கும் குறைவான உயரத்தில் உருவாக்கி இருக்கிறேன்.

தற்போது அழிந்து வரும் தமிழர்களின் பாரம்பரிய கலையான வில்லிசை கலையை பாதுகாக்கவும் இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 நாட்களாக உழைத்து 1.83 கிராம் எடையில் 1 செ.மீட்டர் உயர வில் உள்ளிட்ட 8 இசை கருவிகளை உருவக்கி உள்ளேன். வில்லிசை கலைஞர்களை பாதுகாக்கும் வகையில் பொதுமக்களும், அரசும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என ராமச்சந்திரன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE