ஓசூரில் மண் பானைகள் விற்பனை அதிகரிப்பு; கோடையில் குழாய் பானைக்கு வரவேற்பு

By செய்திப்பிரிவு

ஓசூர்: ஓசூரில் கோடைக்கு முன்னரே வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், நா வறட்சியை போக்க, ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிக்காத இளநீர், நுங்கு, கரும்புச்சாறு உள்ளிட்ட இயற்கையான பொருட்களை மக்கள் நாடி செல்வது அதிகரித்துள்ளது.

பாரம்பரிய பயன்பாடு: அதேபோல, கோடை காலத்தில் தாகத்தைத் தணிக்க வீடுகளில் கடந்த காலங்களைப் போல மண் பானைகளில் குடிநீரைச் சேமித்துப் பருகும் பழக்கமும் அதிகரித்துள்ளது.

மண் பானைகள் பயன்பாடு என்பதும் பாரம்பரியம் சார்ந்து இருந்தாலும், தற்போதைய நாகரிக மோகத்தில் குளிர்சாதன பெட்டிகள் பயன்பாடு உடல் ஆரோக்கியத் துக்குக் கேடு விளைவிக்கும் என்பதை உணர்ந்து நகரப் பகுதி மக்களும் மண் பானை பயன்பாட்டில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஓசூர் பகுதியில்.. தற்போது, கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், ஓசூர், உத்தனப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி பகுதிகளில் குழாய் பொருத்திய மண் பானைகளை மண்பாண்டத் தொழிலாளர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது: நாகரிக மோகத்தால் மண் பானைக்கு போதிய வரவேற்பு இல்லாமல் இருந்தது. இதனால், பொங்கல் பண்டிகை காலங்களில் மட்டும் மண் பானைகள் விற்பனை இருந்தது.

கோடை காலங்களில் வீடுகளில் குளிர்சாதனப் பெட்டியில் தண்ணீரை வைத்துக் குளிர்ந்த நீராகப் பருகி வந்தனர். அது உடலுக்கு கேடு என்பதை அறிந்து, மக்கள் மீண்டும் உடல் ஆரோக்கியத்துக்காக மண் பானை பயன்பாட்டுக்கு மாறத் தொடங்கியுள்ளனர்.

இதனால், கடந்த சில ஆண்டுகளாக மண் பானைக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது, கோடை வெயில் தாகத்தைத் தணிக்க மண் பானைகள் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக வீடுகள், பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் மண் பானை பயன்பாடு அதிகரித்துள்ளது.

நல்ல வரவேற்பு: இதனால், காலத்துக்கு ஏற்ப மண் பானையில் குழாய் பொருத்தி நாங்கள் விற்பனை செய்கிறோம். 10 லிட்டர் முதல் 20 லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட பானை ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்கிறோம். மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE