மாம்பழங்களை நோய்களிலிருந்து பாதுகாக்கும் ‘பழுப்பு நிற காகித போர்த்தி’ தொழில்நுட்பம் - புதிய முயற்சியில் விவசாயிகள்

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: காலநிலை மாற்றத்தால் பூச்சி, புழு, நோய்களிலிருந்து பாதுகாக்கும் ‘பழுப்பு நிற காகித போர்த்தி’ தொழில்நுட்பம் மூலம் விளைச்சல் பாதிப்பை ஈடுகட்டுகின்றனர் மா சாகுபடி விவசாயிகள்.

‘பழங்களின் ராஜா’ மாம்பழத்தின் பூர்வீகம் கிழக்காசிய நாடான இந்தோ- பர்மா. உலக அளவில் மாம்பழ சாகுடியில் இந்தியாவே முதலிடம் வகிக்கிறது. உலக மாம்பழத் தேவையில் 52 சதவீதத்தை இந்தியாவே பூர்த்தி செய்கிறது. அடுத்தபடியாக இந்தோனேசியா, சீனா, பாகிஸ்தான், மெக்சிகோ, பிரேசில், நைஜீரியா உள்ளன. இந்தியாவில் 2.4 மில்லியன் ஹெக்டர் சாகுபடி மூலம் 26,359.39 மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்து 39.17 மில்லியன் டாலர்கள் ஏற்றுமதி மூலம் வருவாய் ஈட்டப்படுகிறது.

இந்தியாவின் மொத்த உற்பத்தியில் உத்தர பிரதேசம் 23.64% (50 லட்சத்து 21 ஆயிரம் டன்) கொண்டுள்ளது. அடுத்து ஆந்திரபிரதேசம், கர்நாடகா, பீகார், தெலங்கானா, குஜராத், மேற்குவங்காளம், ஒடிசா மற்றும் தமிழகம் (6,39,640 டன்) உள்ளன. பழ ஈக்களால் மட்டும் ஆண்டுதோறும் 17.23 % மாம்பழங்களில் சேதாரம் ஏற்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் 20-30% மாம்பழங்களை சந்தைப்படுத்த முடிவதில்லை. பழ ஈக்கள், புழுக்கள், சிலந்தி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளால் சேதாரம் ஏற்படுகின்றன. இவற்றிலிருந்து பாதுகாத்து தரமான பழங்களை உற்பத்தி செய்ய ‘பழுப்பு நிற காகித போர்த்தி’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி எஸ்.செந்தூர்குமரன் கூறியதாவது: "மாம்பழத்தில் வைட்டமின் சி, ரிபோளோவின், நியாசின், பீட்டா கரோட்டின் சத்துக்கள் தவிர, பாலிபினால் அன்ட்டிஆக்சிடென்ட், கரோட்டினாய்ட்ஸ், பினாலிக் அமினோ அமிலங்கள் உள்ளன. பூச்சிகள், நோய் சேதாரங்களிலிருந்து பாதுகாக்க, மாமரத்தில் தரமான பழங்களை உற்பத்தி செய்ய பல தொழில்நுட்பங்கள் இருந்தாலும் ‘பழுப்பு நிற காகித போர்வை’ பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

ஏற்றுமதி தரமிக்க அல்போன்சா, பங்கனப்பள்ளி, இமாம்பசந்த் ரகங்களுக்கு ஒரு மாம்பழத்திற்கு ரூ.2 முதல் ரூ.4 செலவின் மூலம் தரமான மாம்பழங்களை உற்பத்தி செய்து அதிகமான விலை பெறலாம். இந்த பழுப்பு நிற காகித போர்த்தி 20×29 செமீ, 18×30 செமீ அளவுகளில் பழுப்பு, செங்கல் சிவப்பு நிறங்களில் கிடைக்கிறது. 100 எண்ணிக்கையுடைய ஒரு பாக்கெட்டின் விலை ரூ.200 லிருந்து ரூ.450 வரை கிடைக்கிறது.

ஆஸ்திரேலியாவில் ஏற்றுமதி தரம் வாய்ந்த ‘கேய்ட்’ ரக மாம்பழங்களை ஈக்களின் தாக்குதலிருந்து பாதுகாக்க, முதன்முதலில் ‘பழுப்பு நிற காகித போர்த்தி’ தொழில்நுட்பத்தை 1994-95-ல் வடிவமைத்தவர் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதி தோட்டக்கலைத்துறை விஞ்ஞானி பீட்டர்ஹோப்ஸ்மேன் குழுவினர். இந்த தொழில்நுட்பம் தற்போது பழங்களுக்கு ஏற்றவாறு பலவித போர்த்திகளாக சந்தையில் உள்ளது. பழுப்பு நிற காகித போர்த்தியை ஒவ்வொரு மாங்காயும் நெல்லிக்காய் அளவில் இருக்கும்போதே போர்த்த வேண்டும்.

சுருக்குப்பை போன்றுள்ள காகித போர்த்தியில், ஒரு சிறிய நைலான் நூல் போர்த்தியின் அடிப்புற விளிம்பில் இணைக்கப்பட்டிருக்கும். அதன்மூலம் காற்று புகும் அளவில் சுருக்கியும் வைத்துக் கொள்ளலாம். மேலும் பூச்சிகள் மஞ்சள் நிறத்தையே விரும்பும் என்பதால் இந்த காகிதப்போர்த்தி பழுப்பு நிறத்தில் உள்ளது.

இந்த தொழில்நுட்பம் இப்பொழுது பல பயிர்களுக்கு பல விதமான போர்த்திகளாக சந்தையில் உள்ளது. ஆரஞ்சு பழங்களுக்காக கருப்பு நிற வெண்ணெய் காகித போர்த்தி, ஆப்பிள் பழத்திற்க்கு இளஞ்சிவப்பு காகித போர்த்தி, கொய்யாப்பழத்திற்கு நைலான் காகித போர்த்தி, மாதுளம்பழத்திற்கு காக்கி நிற காகித போர்த்தி, பீச் பழத்திற்கு நீல நிற பாலி எத்திலீன் போர்த்தி, பேரிக்காய்க்கு கருமை நிற காகித பூர்த்தி என ஏற்றுமதி தரம் வாய்ந்த பழங்களைப்பெற இந்த காகித போர்த்தி தொழில்நுட்பங்கள் உதவுகின்றது" என்றார்.

இதுகுறித்து அல்போன்சா மாம்பழ உற்பத்தியாளர் விவசாயி மு.முருகேசன் கூறியதாவது: காலநிலை மாற்றம், பூச்சி, நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்து ஏற்றுமதி தரம் வாய்ந்த பழங்களை உற்பத்தி செய்ய பழுப்பு நிற காகித போர்த்தி தொழில்நுட்பம் பயன்படுத்தி வருகிறேன். கடந்தாண்டு ஒப்பிடும்போது இதன் மூலம் விளைச்சல் பாதிக்காமல் பாதுகாக்கின்றன. இவ்வாறு தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

4 days ago

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

26 days ago

வாழ்வியல்

28 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்