அல்வா தெரியும்… புட்டு தெரியும்…! அதென்ன ‘அல்வா புட்டு’ என்று யோசிக்கிறீர்களா? இருக்கிறது சுவாரஸ்யம்... அல்வாவுக்கு திருநெல்வேலி… புட்டுக்கு கேரளா! இரண்டும் சேர்ந்த புதுமையான அல்வா புட்டு எந்த ஊருக்குச் சொந்தம் தெரியுமா? மாம்பழத்துக்குப் பெயர் போன சேலத்துக்குத் தான்!
வழுவழுப்பான தோற்றத்துடன் குறைந்த விலையில் பலரது பசியாற்றும் ஆரோக்கியத் தின்பண்டம்தான் அல்வா புட்டு! சேலத்தில் இருக்கும் எந்தப் பலகாரக் கடைக்குச் சென்றாலும், அல்வா புட்டைத் தரிசிக்கலாம். குறிப்பாக வீட்டிலேயே செய்யப்படும் பலகாரங்களில் அல்வா புட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. பண்டிகைக் காலச் சிற்றுண்டிகளில் அல்வா புட்டு தவறாமல் இடம் பிடித்துவிடுகிறது.
புட்டுக்காரம்மா: 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இட்லி விற்பனை செய்பவர்களை ‘புட்டுக்காரம்மா’ என்று அழைக்கும் வழக்கம் சேலத்தில் இருந்தது. அக்காலத்து பெரும்பாலான இட்லிக் கடைகளில் அல்வா புட்டும் கிடைக்கும் என்பதை ‘புட்டுக்காரம்மா’ பெயரோடு பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறது. சேலத்தின் பழமை வாய்ந்த அம்மாப்பேட்டை, பொன்னமாப்பேட்டை, செவ்வாய்பேட்டை போன்ற பகுதிகளில் தெருவுக்கு ஒரு வீட்டின் முகப்பிலாவது அல்வா புட்டு விற்பனைக்கு இருப்பதைப் பார்க்கலாம். கண்ணாடி பதித்த தள்ளு வண்டிக் கடைகளிலும் மாலை நேரத்தில் அல்வா புட்டு விற்பனை களை கட்டுகிறது.
எப்படித் தயாரிக்கிறார்கள்? - சேலத்து ஸ்பெஷல் அல்வா புட்டை எப்படித் தயாரிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள அம்மாபேட்டையில் உள்ள ஒரு பழமையான தின்பண்டக் கடைக்குள் அனுமதி பெற்று செய்முறையைக் கவனிக்கலானேன்.
» உணவுச் சுற்றுலா: ஜவ்வாது மலை கருநண்டு ரசம்
» உணவுச் சுற்றுலா: சுவையில் அசத்தும் தென்காசி கூரைக்கடை உணவகம்
இரண்டு டம்ளர் புழுங்கல் அரிசியை மூன்று முறைக்குத் தவறாமல் அலசிய பின், மூன்று முதல் நான்கு மணி நேரம் ஊற வைக்கிறார்கள். ஊற வைத்த கலவையை மிக்ஸியில் போட்டு, தோசைக்கு மாவு அரைக்கும் பதத்தை விட, கூடுதல் மென்மையான பதத்தில் அரைத்துக் கொள்கிறார்கள். மென்மையான பதத்திற்குக் கொண்டு வர முன்பெல்லாம் ஆட்டு உரலில் பல மணி நேரங்கள் அரைப்பார்களாம். நான்கு அல்லது ஐந்து ஏலக்காய்களை மாவு அரைக்கும் போதே சேர்த்து அரைத்துக் கொள்ள, ஏலக்காய் சுவையை மட்டும் கொடுத்துவிட்டு, நாவில் தட்டுப்படாதாம். ஏலக்காயை அதிகம் விரும்புபவர்கள், கடைசியாகவும் ஏலத்தைச் சேர்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள்.
நான்கு டம்ளர் வெல்லத்தை ஒன்றிரண்டாக இடித்து வெல்லம் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்த்து, வெல்லத்தைக் காய்ச்சி பாகு எடுத்துக்கொள்கிறார்கள். இதற்கென தனிப்பதம் கிடையாது. வெல்லம் நன்றாகக் கரைந்ததும், வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டியது தான்.
ஒரு பாத்திரத்தில் எட்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, நன்றாகக் கொதிக்க வைத்து, அரைத்து வைத்த அரிசிமாவுக் கலவையை அதில் போட்டு நன்றாகக் கிளறுகிறார்கள். கைவிடாமல் கிளறுவதில்தான் நளபாகம் அமைந்திருக்கிறது. அரிசிமாவு சிறு சிறு கட்டியாக உருவெடுக்காமல் இருப்பதற்கே இந்த ஏற்பாடு. அடுப்பில் மெல்லிய தீ தொடர்கிறது. பிறகு அந்தப் பாத்திரத்திலேயே காய்ச்சி வைத்த வெல்லத்தைப் போட்டு நன்றாகக் கிண்டுகிறார்கள். பாத்திரத்தில் ஒட்டாத பதம் வருவது நன்றாக வெந்துவிட்டதற்கான அறிகுறி. சிறு, சிறு பற்களாய் நறுக்கிய தேங்காய் சில்லைகளையும் சேர்த்து ஒரு கிளறு கிளறுகிறார்கள். இறுதியாக நெய் ஊற்ற, வாசனையும் மெலிதாய்ப் பரவுகிறது.
குழிக் கரண்டி கொண்டு கெட்டியாக மாறிய கலவையைச் சிறிய இட்லி அளவு வில்லைகளாகத் தூய்மையான வெண்ணிறத் துணியில் போட்டு ஆற விடுகிறார்கள். சில வில்லைகளைத் தட்டிலும் போட்டு ஆறப் போடுகிறார்கள். மங்கலான இளமஞ்சள் நிறத்தில் அல்வா புட்டு சுவைப்பதற்குத் தயாராக இருக்கிறது.
பாக்கு தொன்னையில் அல்லது வாழை இலையில் வைத்து அல்வா புட்டை வழங்குகிறார்கள். அல்வா புட்டை ஒருமுறை சுவைத்து விட்டால், கணக்கில்லாமல் தொண்டைக்குள் இறங்குகிறது. அல்வாவின் வழுவழுப்பும், புட்டின் சுவையும் அமைந்திருப்பதால் அல்வா புட்டு என்று பெயர் வந்திருக்கலாம்.
செரிமானச் சுரப்பிகளைத் தூண்டி, பசியை உண்டாக்கும் திறமை ஏலக்காய்க்கு உண்டு. இரும்புச் சத்து நிறைந்த வெல்லம், உடலைத் திடமாக்கும். நுண்ணூட்டங்களுக்கும் வெல்லத்தில் பஞ்சமில்லை. அரிசியின் மூலம் கிடைக்கும் மாவுச் சத்தும் உடலுக்குத் தேவையானதே! தேங்காயின் மூலம் கிடைக்கும் நெய்ப்புச் சத்து உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கக்கூடியது.
பாரம்பரிய வாசனை: நலம் கொடுக்கும் ஓர் அல்வா புட்டின் விலை ஐந்து ரூபாய்! மூன்று நான்கு அல்வா புட்டுகள் தாராளமாக மாலை நேரத்துப் பசியை ஆற்றும். எவ்விதச் செயற்கை ரசாயனக் கலப்படமோ, எண்ணெய் சேர்மானமோ இல்லாத இன்சுவை சிற்றுண்டி சேலத்து அல்வா புட்டு! இதைச் சிறுவர், சிறுமிகளுக்கு வீட்டிலேயே செய்துகொடுக்க, ஆரோக்கியம் கியாரண்டி. இளம் தலைமுறையோடு பசையாக ஒட்டிக் கிடக்கும் துரித உணவுகளை வேரறுக்க அல்வா புட்டு நிச்சயம் உதவும்.
சேலத்துத் தெருக்களுக்குப் பாரம்பரிய வாசனையைக் கொடுக்கும் அல்வா புட்டை உங்கள் அடுத்த சேலத்துப் பயணத்தில் தவறவிடாதீர்கள்!
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர் | தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com
| முந்தைய அத்தியாயம்: உணவுச் சுற்றுலா: ஜவ்வாது மலை கருநண்டு ரசம் |
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
13 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
22 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
28 days ago
வாழ்வியல்
29 days ago
வாழ்வியல்
29 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
1 month ago
வாழ்வியல்
1 month ago