“மார்பகப் புற்றுநோய் சிகிச்சை முறைகளில் வியத்தகு முன்னேற்றம்” - மதுரை கருத்தரங்கில் பேராசிரியர் தகவல்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: “இந்தியாவில் மார்பகப் புற்றுநோய் ஒரு சவாலாக உள்ளது. தற்போது இந்நிலைமை ஓரளவு மாறி வருகிறது" என்று மார்பக புற்றுநோய் கருத்தரங்கில் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை கருத்தரங்கம் நடந்தது. மருத்துவமனை முதல்வர் டீன் ரத்தினவேலு தலைமை வகித்து கருத்தரங்கை தொடங்கி வைத்தார். புற்றுநோய் அறுவை சிகிச்சை சங்கம் மாநில செயலாளர் அய்யப்பன் வரவேற்றார்.

நவீன மார்பக புற்றுநோய் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் மேலும் மருத்துவர்கள் நிபுணத்துவம் பெற வேண்டியும், பயிற்சி அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கு நுட்பமான பயிற்சி அளிக்கும் வகையிலும் இந்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இங்கிலாந்தில் இருந்து புற்றுநோய் மருத்துவ நிபுணர் சங்கர நாராயணன், சென்னையை சேர்ந்த மருத்துவ நிபுணர் வேதா ஆகியோர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு புற்று நோய் மருத்துவ சிகிச்சையை பற்றிய விவரங்களை கூறினார்.

கருத்தரங்கில் புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை தலைவர் பேராசிரியர் ரமேஷ் பேசியது: “இன்றைய சூழலில் உலகளவிலும், இந்தியாவிலும் மார்பக புற்றுநோய் பெண்களை அதிகம் பாதிக்கும் நோயாக உள்ளது. அதிக மக்கள் மற்றும் விழிப்புணர்வு குறைவாக உள்ள இந்தியாவில் மார்பக புற்றுநோய் ஒரு சவாலாக உள்ளது. தற்போது இந்நிலைமை ஒரளவு மாறி வருகிறது. வேகமான வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் விழிப்புணர்வு மூலம் பெருமளவு மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளன.

சமீப காலம் வரை முழு மார்பகத்தையும் அகற்றியே சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. இது நோயாளிகளுக்கு பெரும் மன உளச்சலை ஏற்படுத்துகின்றன. இதனை பெண்கள் தங்கள் பெண்மைக்கு ஏற்படும் பாதிப்பாகவே கருதுகின்றனர். இந்த அச்சம் மற்றும் தயக்கமான மனநிலையே அவர்கள் முறையான மருத்துவ சிகிச்சைக்கு வருவதற்கு ஒரு தடையாக இருக்கிறது. தற்போதைய புற்றுநோய் சிகிச்சை முறைகளில் ஏற்பட்ட வியத்தகு முன்னேற்றத்தின் காரணமாக மார்பகத்தை முழுவதும் அகற்றாமல் கட்டியை மட்டும் அகற்றி நவீன சிகிச்சைகள் வந்துள்ளன.

இந்த சிகிச்சைகள் மூலம் பூரண குணம் அடைலாம். அதன் அடுத்தக் கட்டமாக கட்டியை மட்டும் அகற்றி சில பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் மார்பகத்தை அதன் வடிவமும், பொலிவும் மாறாமல் மீட்டெடுக்கப்படும் சிகிச்சைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சிகிச்சை முறைகள் பரவலாக நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளிலும் நடைமுறையில் பின்பற்றப்படுகின்றன. தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இந்த சிகிச்சைகள் தொடங்கப்பட்டுள்ளன” என்று பேராசிரியர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE