சுற்றுச்சூழல், உடல் நலன், டிராஃபிக் தவிர்ப்பு... -  மதுரையில் சைக்கிளுக்கு மாறிய காவலர் கண்ணதாசன்!

By என்.சன்னாசி

மதுரை: மதுரையில் வாகனங்களால் பெருகியதை அடுத்து போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இடையூறுகளைத் தவிர்ப்பதற்காக போலீஸ் காவலர் ஒருவர் சைக்கிளுக்கு மாறியுள்ளார்.

மதுரையில் நாளுக்கு, நாள் புதிய வாகனங்கள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினமும் 100-க்கும் மேற்பட்ட புதிய இரு சக்கர வாகனங்களும், 50-க்கும் மேலான நான்கு சக்கர வாகனங்களும் 4 வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் பதிவெண்களை பெறுகின்றன. வாகன பெருக்கத்தால் மதுரை மாநகர சாலைகளில் தினந்தோறும் வாகனங்கள் திக்குமுக்காடுகின்றன. மெயின் ரோடுகள், உட்பட பிற ரோடுகளிலும், போக்குவரத்து சிக்னல்களிலும் வாகன நெருக்கடி என்பது அன்றாடம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

மாநகரில் சுமார் 1000க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீஸார் பணியில் இருந்து சீரமைத்தாலும் போக்குவரத்து இடையூறுகளால் மக்கள், வாகன ஓட்டிகள் காலை, மாலை, முதல்வர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வருகை நேரத்தில் சிக்கி தவிப்பது தொடர்கிறது. இது ஒருபுறம் இருக்கிறது என்றாலும், வாகனங்கள் அதிகரிப்பால் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து நேரிடுகிறது. சில நேரத்தில் போக்குவரத்து நெருக்கடியை கண்டு, கார்களை தவிர்த்து இரு சக்கர வாகனங்களுக்கு மாறலாமோ என, வாகன ஓட்டிகளுக்கு நினைக்க தோன்றுகிறது.

இந்நிலையில், மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் பிரிவில் பணியாற்றும் கண்ணதாசன் (47) என்ற காவலர் சைக்கிள் பயணத்திற்கு மாறியுள்ளார். தினமும் அவர் பணிக்கு சைக்கிளில் செல்கிறார். எங்கு சென்றாலும் சைக்கிளை பயன்படுத்துகிறார். “சைக்கிள் ஓட்டுவதன் மூலம் பொருளாதார சிக்கனம், சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் உடல் ஆரோக்கியம் கிடைக்கிறது. இதை விட மாநகர சாலை, சிக்னல்களில் போக்குவரத்து நெருக்கடியில் சிக்குவது தவிர்க்கப்படுகிறது” எனச் கூறுகிறார்.

மேலும், அவர் கூறுகையில், ''கடந்த 2003-ல் பணிக்கு சேர்ந்தேன். தற்போது தலைமை காவலராக உள்ளேன். குடும்பத்தினருடன் வெளியில் சென்றால் ஆட்டோவை பயன்படுத்துவோம். தொடர்ந்து சைக்கிள் ஓட்டுவதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. டிராஃபிக்கில் சிக்குவது தவிர்க்கிறேன். வீட்டில் கல்லூரி படிக்கும் மகனுக்காக டூவீலர் வாங்கி கொடுத்துள்ளேன். ஆனாலும், அதை பயன்படுத்துவதில்லை.

பணி நிமிர்த்தமாக ஓரிடத்திற்கு செல்லவேண்டுமானால் சற்று முன்கூட்டியே திட்டமிட்டு பயணிப்பேன். மாநகரில் சுற்றுச்சூழல், வாகன நெருக்கடிகளை தவிர்க்க சைக்கிள்கள் பயன்படுத்தலாம். மதுரையில் டூவீலர் விலையில் பழைய கார்கள் கிடைப்பதால் பலர் கார்களை வாங்குகின்றனர். இதன்மூலம் போக்குவரத்து நெருக்கடி என்பது மாநகரில் தவிர்க்க முடியாமல் உள்ளது,'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE