“வெற்றி, தோல்வி எல்லாம் நம்ம உழைப்புல இருக்கு” - ஆடை வடிவமைப்பாளர் சிந்து சிறப்புப் பகிர்வு

By ஜி.காந்தி ராஜா

“பிக்பாஸ் சீசன் 6 வீட்டுக்குள்ள வந்தவங்க எல்லாரும் அவங்களுக்கு கொடுத்த டாஸ்க்கை வின் பண்ணினாங்களா இல்லையான்னு எனக்கு தெரியாது. ஆனா, நான் எனக்கு கொடுத்த டாஸ்க்கை வின் பண்ணிட்டேன்னு தான் நினைக்கிறேன். என்னைப் பொறுத்த அளவில் பிக் பாஸ் சீசனில் 21 பேர் போட்டியாளர்கள். 21 பேருக்குமே தனித்தனி டிசைனர்கள். அந்த 21 பேரில் நான் மட்டும் வெளியே தெரிந்திருக்கிறேன் என்றால் அந்த மனசுதான் சார் கடவுள். ஒருத்தர் செய்யும் வேலைக்கு பணம் கொடுத்துவிடலாம். நாமும் அந்தப் பணத்தை வாங்கி கொள்ளலாம். ஆனால், நாம் செய்த வேலைக்கான உண்மையான மனம் திறந்த பாராட்டுகள் கிடைப்பதுதான் இங்கு பெரிய விஷயம். அது எனக்கு கிடைத்தது. அதுதான் என் மகிழ்ச்சி. அதனைத்தான் நான் எனக்கான சரியான சம்பளமாக பார்க்கிறேன். இந்த உலகில் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு சின்ன பாராட்டுக்குத்தான் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த காஸ்ட்யூம் டிசைனர் சிந்து.

"சென்னை பெருநகரின் அண்ணா நகர் மெயின் பகுதியில் எனக்கு ஒரு டிசைன் ஸ்டூடியோ. 15 ஊழியர்களுடன் எனது நிறுவனத்தை முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கிறேன். இந்த வளர்ச்சியை நான் உற்றுநோக்கிப் பார்த்தால், அன்றைய நிலைமை, அன்றிருந்த சூழலில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, என்னால் நினைத்துப் பார்க்கமுடியாத வளர்ச்சியாகத்தான் இதனைக் கருதுகிறேன். இது என்னைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய விஷயம். இந்த சமூகம் சரியான உழைப்பை எல்லா நேரங்களிலும் அங்கீகாரம் பண்ணத்தான் செய்கிறது. உதாசீனம் செய்தவர்களில் இருந்து விலகிச் சென்றவர்கள் வரை இன்று என் வளர்ச்சியைக் கண்டு வியந்து வாய்விட்டே சொல்லவும் செய்துவிட்டார்கள். இந்த வளர்ச்சிக்குப் பின், அந்த இருள் சூழ்ந்திருந்த பழைய நிலைமையை மறுபடியும் நினைத்துக்கூட பார்க்க நான் தயாராக இல்லை" என்று தன்னம்பிக்கை துளிரும் பேச்சில் மிளிர்கிறார் சிந்து.

ஒரு சிங்கிள் பேரண்ட்னு சொல்லவும், நீங்க என்ன கேட்க வர்றீங்கன்னு எனக்கு நல்லா புரியுதுன்னு சொல்லி அவரே பேச ஆரம்பித்துவிட்டார். “இந்த சமூகத்தில் நான் 'சிங்கிள் பேரண்ட்' அப்படின்னு சொல்லி அவர்களை அவர்களாகவே தனிமைப்படுத்துகிற அல்லது சிம்ப்பதி கிரியேட் பண்ணுகிற இந்த வார்த்தையை நான் கட்டாயம் தவிர்க்க விரும்புகிறேன். இங்கு சிங்கிள் பேரன்ட்னா இரண்டு தரப்பிலும் இருக்கிறார்கள். தனியாக குழந்தைகளை வளர்க்கிற ஆண்களும் சிங்கிள் பேரண்ட் தான். ஒரு தாயாக எல்லா பெண்களும் நிச்சயம் சிங்கிள் பேரண்ட் தான். பெண் துணையின்றி தனியாக வளர்க்கும் ஆண்களும் இந்த சமூகத்தில் இருக்கிறார்கள். அவர்களும் இதே ரீதியிலான கஷ்டத்தை அனுபவிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அதற்கான சதவீதம் குறைவு அவ்வளவுதான். எத்தனை ஆண்கள் இப்படி இருக்கிறார்கள் என்கிறபோது, பிள்ளைகள் வளர்ப்பில் எப்போதும் பெண்கள் எல்லோரும் சிங்கிள் பேரண்ட் தான். ஆணோ, பெண்ணோ இங்கு, சிங்கிள் பேரண்ட் என்பது பதவியோ சிம்பதியோ இல்லை; பொறுப்பு.

நம்பிக்கையை விதைத்த தன்னம்பிக்கை: திருமண முறிவு, கடந்த கால கஷ்டங்கள் என கிட்டத்தட்ட 4 நாட்கள் வீட்டில் ரூமை விட்டு வெளியே வராமல் அழுது அழுது கிடந்த நாட்கள் அவை. அந்த நேரங்களில் எல்லாம் என் அப்பா, என்னை நினைத்துப் பயந்துகொண்டே இருப்பார். இரவில் எல்லாம் தூங்கிவிட்டேனா இல்லையா என்று என் ரூம் கதவைத் திறந்து அடிக்கடிப் பார்த்துக் கொள்வார். நான் என் வாழ்வை வெறுத்து செத்து போய்விடுவேனோ என்கிற பயத்தை அவருக்கு ஏற்படுத்தியிருந்தேனோ என்னவோ. அப்போது அப்படி திறந்து பார்த்த அப்பாவிடம் நான் சொன்னேன். அப்பா, அப்படியெல்லாம் பயப்படாதீங்க. நான் வாழாத வாழ்வு ஒன்று இருக்கிறது. அதை இனிதான் வாழப் போகிறேன். நிறையப் பேருக்கு அது பதிலடியாக இருக்கும், நிச்சயம் வாழ்வேன். யாருக்காகவும் என் வாழ்வையும் குழந்தைகளையும் பிரிய விருப்பம் இல்லை என்று அந்த கணநேரத்தில் கூறிய அந்த நம்பிக்கை எண்ணங்கள்தான் என் வாழ்வின் அதிரடி மாற்றத்திற்கான நம்பிக்கை விதையை விதைத்தது. எதில் இருந்து மீண்டு வரவே மாட்டோமோ என்றிருந்தவற்றில் எல்லாம் அதனையடுத்து நல்லபடியாகவே மீண்டும் வந்துவிட்டேன்.

நம் மனதில் இருக்கும் சோகம், கஷ்டங்கள் அத்தனைக்கும் நம் மனதில் ஒரு வடிவேல் மீம்ஸ் டெம்ப்ளேட் கிரியேட் பண்ணிக்கிட்டீங்கன்னா கட்டாயம் சொல்றேன், அதை விட ஃபன் நம்ம வாழ்க்கையில் வேறு எதுவும் இல்லை. இதுக்காடா மனதளவில் இவ்வளவு கஷ்டப்பட்டீங்கன்னு நினைக்க வைத்துவிடும். பெரும்பாலும் பெண்கள் தங்களுக்கான கஷ்டமான சூழலை வாழ்வில் விரும்புவது இல்லை. அது வருகிறபோது எப்படியாவது சமாளித்துவிடலாம் என்றும், தேம்பியும், கெஞ்சியும் அதனை தக்கவைத்துக்கொள்வதில் பெரும் பிரயத்தனம் காட்டத்தான் செய்வார்கள். அதனையும் மீறி நடக்கும் விஷயங்களுக்கும், சில துரோகங்களுக்கும் நாம் அதன்பிறகு எந்த விதத்திலும் காரணம் ஆகமாட்டோம். அதன்பிறகு அதனையே நினைத்துக் கொண்டிருக்காமல் நம் விஷயங்களை நோக்கி வடிவேல் பாணியில் ஜாலியாக நகர்ந்துவிட்டால் வாழ்க்கையில் சேதாரம் நம்மை இழந்தவர்களுக்குத்தான். அந்தவிதத்தில் ரஹ்மான் சாரும், வடிவேல் சாரும் முகம் தெரியாத பலருடைய வாழ்வை மீட்டுக் கொடுப்பதில் அவர்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது. முக்கியமாக என்னை மீட்டெடுத்ததில் அவர்களுக்கும் யுவன்சங்கருக்கும் என் நன்றி எப்போதும் உரித்தாகட்டும். அதற்கு பிறகுதான் நான் என்னைச் சுற்றியே பார்க்க ஆரம்பித்தேன். எதுவுமே இல்லை. படிப்பு மட்டும்தான் இருந்தது.

சிந்து, டிசைனி சிந்து ஆனது எப்படி? - எந்தச் சூழலிலும் ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியம் கல்வி. அது நிச்சயமாக ஒரு குடும்பத்தை முன்னேற்றிவிடும். இன்று அந்த படிப்புதான் என்னைக் இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது. தனித்து ஒரு பெண்ணாக இரண்டு குழந்தைகளையும் படிக்க வைத்து காப்பாற்றி கொண்டு வரவேண்டும் என்று நினைக்கும்போது வரும் பாருங்க ஒரு பயம், தாழ்வு மனப்பான்மை. அது எல்லாம் எனக்கும் வந்தது. அதை எல்லாம் சுத்தியல் கொண்டு அடித்தது போல் நொறுக்கியது என்னிடம் இருந்த கல்விதான். அதன்பிறகு நாம தோத்துட்டோமேன்னு கோபத்துடன் கூடிய ஒரு உத்வேகம் என்னுள் சுழன்றுகொண்டே இருந்தது. அதனையடுத்து என்ன செய்ய போகிறோம். வீட்டுக்கு வாடகை கொடுக்கணும், குழந்தைகளுக்கான படிப்பு செலவு, அப்பாவுக்கான மருத்துவச் செலவு என்று ஒரு பக்கம் கூடிய சுமையின் மீதான அச்சமும் சேர்ந்து கொண்டது. அந்த நேரத்தில் தான் கற்று வைத்திருந்த பேஷன் டிசைன் தொழில் மூலமாக அடுத்தக்கட்ட நகர்வை ஆரம்பித்ததுதான் இன்று இந்த அளவு எனக்கான என் வாழ்க்கையை திருப்பி கொடுத்திருக்கிறது.

என் வாழ்வில் சொந்த அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். எந்தச் சூழலிலும் தனியாக நிற்கும் பெண்களை இந்த சமூகம் முதலில் தன் கண்களுக்கு மாட்டிக்கொண்டு பார்க்கும் ஒரு கண்ணாடி இருக்கு பாருங்க, அது ரொம்பவும் மோசமானது. அந்த கண்ணாடியை நீங்க கழட்டி, பிடுங்கி, சுக்குநூறாக உடைத்து எறிய நிச்சயம் உங்களால் முடியும். அதற்கு நீங்க உங்களோட வேலையோ, தொழிலோ அதில் இந்த சமூகம் கொடுத்த அவமானங்களை, தோல்விகளை, கஷ்டங்களை எல்லாம் அதில் கொண்டு கொட்டுங்கள். பிறகு பாருங்க. உங்களுக்கான வழியும் அதில் நீங்கள் ஜெயிப்பதற்கு அடைத்த கதவுகள் எல்லாம் தானாக திறந்து வழி விடும்.

அப்படி ப்ரிலான்ஸர் ஆடை வடிவமைப்பாளராக ஆரம்பித்த இந்த தொழிலில் எனக்கான அடையாளம் சின்னத்திரையில் நுழைந்தது மூலம் கிடைத்தது. அப்போது என்னுடைய காஸ்ட்யூம் நிறைய இடங்களில் பேசப்பட்டது. அப்படித்தான் ஆரம்பித்தது என் வளர்ச்சி. கிட்டத்தட்ட சின்னத்திரையில் நிறைய நடிகைகளுக்கு காஸ்ட்யூம் டிசைன் செய்து கொடுத்திருக்கிறேன். நிறைய சேனல்களில் எனது டிசைன் பயன்படுத்தப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. நிறைய திரை பிரபலங்களின் குடும்ப விழாக்கள், நடிகர்களின் விருது விழாக்கள் எல்லாவற்றிலும் இன்றளவில் என்னுடைய காஸ்ட்யூம் டிசைன் இடம் பெற்றுக்கொண்டு இருக்கிறது என்பதை என் உழைப்புக்கான அங்கீகாரமாக பார்க்கிறேன்.

அதன்பிறகுதான் பிக்பாஸ் சீஸன் 6-ல் விக்ரமனுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருக்ககூடிய ஒரு வாய்ப்பு விக்ரமனின் நண்பர்களான பூமிகா, ரெனால்ட் மூலமாக கிடைத்தது. அதில் நான் முழுவதுமாக திறம்பட உழைத்தேன். அதன்பிறகு அந்த நிகழ்ச்சி மூலம் விக்ரமன், தனக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆடைகள் அத்தனை சிறப்பாக இருந்ததாகவும், அது தன்னை அழகாக காண்பிப்பதாகவும் அங்கீகரித்தது எனக்கு எதிர்பாராத மகிழ்ச்சியாக அமைந்தது. அதற்கு நன்றி.

கம்பெனி என்னுடையதுதான் ஆனா, நான் ஓனர் இல்ல பாஸ்: மற்றபடி இன்று சாதாரண குடும்ப சூழலில் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி கொண்டிருந்தவள், நான் 15 நபர்களை கொண்ட ஒரு நிறுவனமாக இயங்கிகொண்டிருக்கும் அதில் என் உழைப்பை ஷேர் செய்து கொண்டிருக்கிறேன். இன்று எனக்கு உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். என்னோட காஸ்ட்யூம் டிசைன் ஏற்றுமதியாகி கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் நான் மட்டுமல்ல, என் உடன் பணிபுரியும் 15 நபர்களும்தான். நான் அவர்களிடம் இப்போதுவரை ஒருபோதும் பாஸாக நடந்துகொண்டதேயில்லை. அதனால்தான் அவர்கள் அத்தனை பேரும் தங்கள் சொந்த நிறுவனமாக நினைத்து எனக்காக உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இன்று என் குழந்தைகளின் எதிர்பார்ப்புகளை எல்லாவிதத்திலும் நிறைவேற்ற முடியும் தாயாக நான் இருக்கிறேன் என்பதில் அளவற்ற மகிழ்ச்சி. எந்த சூழலிலும் இந்த சமூகத்தை நினைத்து பயப்படாதீர்கள். பயந்தீர்கள் என்றால் நிச்சயம், அது உங்கள் முதுகெலும்பை முறித்துவிடும். அதனால் பயம் தவிர்த்து உங்களை மட்டும் நினைத்தால் நிச்சயம் உங்கள் வாழ்க்கையின் சின்ன சின்ன சந்தோஷங்களை என்ஜாய் செய்து வாழ முடியும்” என்கிறார் சிந்து.

“இந்த புரொபஷன் மீது எனக்கு தனி காதல் உண்டு. தினமும் காலையில் 10 மணிக்கு அலுவலகம் வந்தால் வீட்டிற்கு செல்ல இரவு 10 மணியாகி விடும். எவ்வளவு மன அழுத்தம், கஷ்டம் இருந்தாலும் இந்த சேரில் வந்து உட்கார்ந்திட்டேன்னு வைங்க... எப்பேர்பட்ட கஷ்டமும் மன அழுத்தமும் ஓடி போய்விடும். அந்த அளவுக்கு நான் இந்த வேலையினை என் குழந்தைகளைப்போல காதலிக்கிறேன். என் வேலை இதுதான். அதை மட்டும்தான் பார்த்தேன். மற்ற விஷயங்களில் நான் தலையிடுவதில்லை. அந்த வேலை இன்று என்னை உயர்த்தியிருக்கிறது. ஃபாஸ், பெயில் அது நாம் செய்யும் உழைப்பும் வாழ்வும்தான் முடிவு பண்ணும்” என்றபடி சிரிக்கிறார் காஸ்ட்யூம் டிசைனர் சிந்து.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

20 days ago

மேலும்