கவனம் ஈர்த்த ‘புல்லிகுட்டா’ - 200 நாய்கள் வலம் வந்த தஞ்சை மாதாகோட்டை கண்காட்சி

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: சோழர்கள் போருக்கு பயன்படுத்திய இன நாய் முதல் புதிய இன நாய்கள் வரையிலான 200 நாய்கள் கலந்துகொண்ட கண்காட்சியை தஞ்சை மக்கள் பலரும் ஆர்வத்துடன் ரசித்தனர்.

தஞ்சாவூர் அருகே மாதாகோட்டை பகுதியில் உள்ள மிருகவதை தடுப்பு சங்கத்தில், கால்நடை பாரம்பரிய துறையும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து, நாய்கள் கண்காட்சியினை இன்று (மார்ச் 11) நடத்தினர். கண்காட்சியை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்தார். இக்கண்காட்சியில், சிம்பா, அலங்கு, டாபர்மேன், லேபர் டாக், கிரேடன், ஜெர்மன் ஷெப்பர்ட், சிப்பி பாறை, கோம்பை, போலீஸ் மோப்ப நாய்கள் உள்ளிட்ட 200 நாய்கள் பங்கேற்றன. இக்கண்காட்சியினை பள்ளி மாணவ,மாணவிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் ரசித்தனர்.

தொடர்ந்து கண்காட்சியில் உரிமையாளர்களின் கட்டளைக்கு ஏற்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகளும், அணிவகுப்பு, தனி திறன் போட்டிகள் நடைபெற்றது. அதில் சிறந்த நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், கண்காட்சியில் அரிய வகை பறவைகள், பெரிய அளவிலான ஓணான், சிலந்தி, பாம்பு ஆகியவையும் இடம்பெற்றன.

தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற நாய்கள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறும்போது, “பாரம்பரிய நாய் இனங்களை பாதுகாக்கவும், செல்லப் பிராணிகள் மீதான நமது ஈர்ப்பை அதிகப்படுத்தும் விதமாக நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தங்களின் செல்லப் பிராணிகளை பலரும் கொண்டு வந்திருந்தனர். பல்வேறு விதமான நாய்கள் இடம்பெற்று இருந்தன. இது தஞ்சாவூர் மாவட்டத்தில் முதன்முறையாக நடைபெறும் கண்காட்சியாகும் என்றார்.

வேட்டை நாய்: அலங்கு என்கிற பெரிய நாய் வகை 10-ஆம் நூற்றாண்டில் சோழர்கள் தென்னிந்திய நிலப்பரப்பை ஆண்ட காலத்தில் போர்ப்படைகளில் பயன்படுத்தப்பட்டது. ராஜராஜசோழனின் போர்ப்படையில் எதிரி நாட்டு குதிரைப் படையைத் தாக்க அலங்கு இன நாய்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்கான சிற்பங்கள் மற்றும் வரலாற்று சான்றுகள் உள்ளன.

புல்லிகுட்டா நாய்

தஞ்சாவூர், திருச்சியை பூர்வீகமாக கொண்டது என கூறப்படுகிறது. தற்போது, புல்லிகுட்டா நாய் இனத்தில் மூதாதையர்களாக அலங்கு இருக்கலாம், பாகிஸ்தான், இந்தியாவில் சில பகுதிகளில் மட்டுமே உள்ளதாக நாய் வளர்ப்போர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE