நெல்லை மாநகர தலைமை துணை போலீஸ் கமிஷனராக இருப்பவர் ஜி.எஸ்.அனிதா. 2009-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் மூலம் காவல் பணிக்கு தேர்வானார். இவர் ஊட்டியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகவும், கோவை, ஈரோடு மாவட்டங்களில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகவும் பணியாற்றியவர். தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் துணை முதல்வராக பணிபுரிந்த இவர் சமீபத்தில் பதவி உயர்வு பெற்று நெல்லை மாநகர தலைமை துணை போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுள்ளார். அவருடன் உரையாடியதில் இருந்து...
துணை போலீஸ் கமிஷனர் பதவி குறித்து...
“காவல் துறையில் ஆண், பெண் என்று ஒருபோதும் பிரித்துப் பார்த்து நாங்கள் பணியை செய்யவில்லை. போலீஸ் அதிகாரி என்பது எங்களின் ஓர் அடையாளம். அதேபோல் ஒரு பெண் அதிகாரியாக இருப்பதில் உள்ள ஒரு சலுகை என்னவென்றால், ஈஸியாக தங்கள் மனநிலையை புரிந்துகொள்வார்கள் என்கிற ஒரு மனநிலையோடு மக்களில் நிறைய பேர் அணுகிறார்கள். அவர்களின் வலி, கஷ்டத்தை ஒரு பெண்ணால் எங்களால் உணர முடியும் என்று நம்புகிறார்கள். அதனால் பெண் அதிகாரிகளாக இருப்பவர்களை மிகவும் சுலபமாக அணுகி மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். மேலும், நம் குறையை இவங்க தீர்த்து வைப்பார்களா அல்லது எதிர்தரப்பினருக்கு சாதகமாக முடிவெடுத்துவிடுவார்களா என்கிற நம்பிக்கையில்லா ஒரு பயமும் அவர்களிடம் இருக்கத்தான் செய்யும். அந்த எண்ணத்தை உடைத்து அவர்களுக்கு உண்மையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி அதிகம் மெனக்கெட்டு அவர்களுக்கான நீதி எதுவோ அதைப் பெற்று கொடுக்கிறோம். இதனையே இந்த பதவியின் ஒரு மாண்பாக பார்க்கிறேன்.”
காவல் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்...
» மதப் பிரிவினையை தூண்டும் பதிவுகள்: பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை
» அடர்த்தியான களம், அழுத்தமான வசனம் - வெற்றிமாறனின் ‘விடுதலை பாகம் 1’ ட்ரெய்லர் எப்படி?
“பெண்களுக்கே உள்ள சவால்கள் என்றால், தற்போது முதல்வரின் அறிவுரையின் பேரில், பந்தோபஸ்து போடப்படும்போது பெண்களுக்கு சாதகமான இடங்களாக தேடித்தேடி போடுகிறோம். அதுபோக அவர்களுக்கான வாஷ் ரூம் போன்ற வசதிகள் அருகில் இருந்தால் மட்டும்தான் அவர்களுக்கு அந்த இடங்களில் டியூட்டி கொடுக்கிறோம். ஒருகாலத்தில் நடந்ததுபோல், கும்பலாக ஏதோ ஒரு இடத்தில் வேன்களில் மொத்தமாக ஏறி அங்கு சென்று பந்தோபஸ்து பார்ப்பது போன்ற விஷயங்கள் இன்று பெருமளவில் மாறியிருக்கிறது.”
சமகால பெண்களுக்கு பேராயுதம் எது?
பெண் தன்னுடைய உரிமையைக் கேட்டுப் பெறுவதற்கும் அதற்கான அங்கீகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கும் கல்வி பெரும் ஆயுதம். அதனை பெண்கள் எந்த அளவிலும் விட்டுக்கொடுத்து விடக்கூடாது. இன்று ஆண்களுக்கு நிகரான ஒரு பலம் பெண்களுக்கு கிடைத்திருப்பதுக்கு காரணம் கல்வி மட்டும்தான். இன்று எல்லா துறையிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகராக இருப்பதற்கு காரணம் கல்விதான். அந்தக் கல்வியை மட்டும் பெண்கள் கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும். விடவே கூடாது. எத்தகயை காலகட்டங்களிலும் கல்வி மட்டும்தான் பெண்களின் மிகப் பெரிய பாதுகாப்பு கேடயம்.
இது எல்லாவற்றிற்கும் மேலாக பெற்றோர்கள் பெண்களுக்கு மட்டுமல்ல, இரு பாலின குழந்தைகளுக்கும், வெற்றி மட்டுமே இலக்கு என்கிற எண்ணத்தை விதைக்காமல் வெற்றியோடு தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையையும் கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் பெண்கள் தோல்வியை பெரிதாக கருதாமல், அந்த மாதிரியான ஒரு சூழலில் அதனை சுலபமாகப் புறக்கணித்து அடுத்தக்கட்டத்திற்கான வெற்றியை நோக்கி முன்னேறும் மன தைரியம் கிடைக்கும். இதுவும் என்னைப் பொறுத்த அளவில் முக்கியமாக அனைவரும் கற்றுக் கொள்ளக்கூடிய வாழ்க்கைக் கல்வியாகப் பார்க்கிறேன். ஏனென்றால் வெற்றி மட்டுமே வாழ்க்கை இல்லை, தோல்வியும் வாழ்க்கைதான். அதனையும் அவர்கள் ஜெயித்து வரக்கூடிய வாய்ப்புகளையும் நாம் அவர்களுக்கு ஏற்படுத்தித்தர வேண்டும்.
பெண்கள் மீதான சமூகத்தின் சமகால பார்வை...
“நிச்சயமாக மாறி இருக்கிறது. இன்று எல்லா குடும்பங்களிலும் பெண்களுக்கே உரிய உரிமையை சரியாகத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். முந்தையக் காலகட்டங்களோடு இந்தக் காலச் சூழலை ஒப்பிடுகையில் நிறைய மாறியிருக்கிறது. குறிப்பாக, பெண்கள் முன்னேற்றத்திற்கு கற்கும் கல்வியில் எந்தவித தடையும் கிடையாது. அப்படியே இருந்தாலும் அந்த தடைகளை தகர்த்தெறிந்து, துள்ளி ஓடிக் குதித்து வரும் பெண்கள் இன்று அதிகரித்துவிட்டனர். அடக்குமுறைகளை அவர்களை நோக்கி வீசினால் எதிர்த்து உடைத்துவிடும் குணத்தை பெற்றுவிட்டார்கள். இப்படியான பெண்களை நான் மிகவும் வரவேற்கிறேன்.
ஆனால், அதேநேரத்தில் அவர்கள் எல்லா இடங்களிலும் ஆண்களுக்கு நிகர், சமத்துவம் என்கிற அழகான புரிதலை, ஆண்களுக்கு எதிராகப் போட்டி போட்டுக்கொண்டு மட்டும்தான் வர வேண்டும் என்கிற ஒற்றை எதிரி - விரோத ரீதியில் தவறாகப் புரிந்துகொண்டுவிடக் கூடாது. அப்படி நினைத்தால் அதுவும் தவறு. ஆண்களுக்கு எந்த அளவில் வாய்ப்புகள் இருக்கிறதோ, அதேபோல் தங்களுக்கும் உருவாக்கி கொள்ளுங்கள். ஆண்கள் செய்த தவறை அதேபோல் பெண்களும் பண்ணக் கூடாது. அதையெல்லாம் பயன்படுத்தி ஒரு பெண் உயர்ந்த பொறுப்பைத் தொட்டுவிட்டால் இந்தச் சமூகம் எல்லா வகையிலும் ஆண், பெண் பாராபட்சம் பாராது அவளை அங்கீகரிக்கத்தான் செய்கிறது. இதன்தொடர்ச்சியாக, இன்று நான் பார்க்கும் பெற்றோர்களின் மத்தியில் குழந்தைகள் மீதான பாலின பேதம் பெரும் அளவில் குறைந்திருக்கிறது என்பது பெரும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.”
உங்கள் ரோல் மாடல்?
“என்னுடைய ரோல் மாடல் கிரண் பேடி மேடம்தான். நான் பிஸினஸ் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த பெண். என்னுடைய வீட்டில் யாரும் வேலைக்குப் போய் நான் பார்த்தது இல்லை. அந்தநேரத்தில் எனக்கு வேலைக்குச் செல்லவேண்டும் என்ற ஆசை இருந்துகொண்டே இருந்தது. அதுவும், சாதாரணமானதாக இருந்துவிடக்கூடாது. இந்த சமூகத்திற்கு நேரடியாகச் சென்று சேவை செய்யும் அளவிலான ஒரு வேலைக்கு செல்லவேண்டும் என்பதுதான் என் எண்ணம். அது கனவாகவே இருந்தது. அதன்பிறகு திருமணம் நடக்கவும் என் எண்ணத்தைப் புரிந்துகொண்டு கணவர் அதற்காக மிகவும் உறுதுணையாக இருந்தார். அதற்குப் பிறகுதான் நான் படித்து இந்த சர்வீஸுக்கு வர முடிந்தது. நாம் போலீஸ் டிப்பார்ட்மெணட் சர்வீஸுக்குத்தான் வருகிறோம் என்பது எனக்கே தெரியாது. நான் காவல்துறையில் தான் வேலைசெய்யப் போகிறேன் என்று தெரிந்த பிறகுதான் அதன்மீது ஒரு ஈர்ப்பு வந்தது. அந்தநேரத்தில், காவல் துறையில் என்னை மிகவும் ஈர்த்தவர் கிரண் பேடி மேடம தான். முதல் இம்ப்ரஷன் அவர்மீது தான் ஏற்பட்டது. அது இன்றுவரை மாறவேயில்லை. அந்த அளவுக்கு எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவர் எழுதிய புத்தகங்கள் முழுவதையும் வாசித்திருக்கிறேன்.”
காவல் துறையில் அடியெடுத்து வைத்த அனுபவம்...
“இதுதான் என் முதல் வேலை. இதற்குமுன் நான் வேறு எந்த வேலையிலும் இருந்தது இல்லை. அப்படி இருக்கும்போது நமது அன்றாட நிகழ்வில் ஓர் ஒழுங்கு இருக்காது. அதை எதிர்பார்க்கவும் முடியாது. நான் வந்திருந்த போலீஸ் துறை என்பது அப்படியானது அல்ல. போலீஸ் துறையில் ஒழுக்கத்திற்குத்தான் அதிமுக்கியத்துவம் முதலில் கொடுக்கப்படும். அந்தவகையில் நேர முக்கியத்துவம் என்பதை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும். அதாவது, அதிகாலையில் 4 மணிக்கு என்றால், 4 மணிக்கு கட்டாயம் எழுந்திருக்க வேண்டும். இப்படித்தான் பேச வேண்டும். இந்த முறையைத்தான் பின்பற்ற வேண்டும். இந்த புரொட்டாகால் படிதான் நடக்கவேண்டும் என்றால், அப்படித்தான் நடக்க வேண்டும்.
முதலில் இந்த நடைமுறைச் சூழல் எனக்கு செட் ஆகவில்லை. ஏனென்றால் செட் ஆகிறவரை நம்மால் முடியுமா என்கிற ஒரு பயம் மனதில் இருந்துகொண்டேதான் இருக்கும். அதன்பின், செட் ஆன பிறகு வரும் பாருங்க மகிழ்ச்சி, அது தனி. அந்த மகிழ்ச்சி குழந்தையைப் பிரசவித்த தாயின் மகிழ்ச்சி. அந்த மாதிரியான ஒழுங்கு நடவடிக்கைகளால் நம் உடல் நலம் மற்றும் மன நலம் எல்லாவற்றிக்கும் ஒரு சூப்பர் ஃபீல் வர ஆரம்பித்துவிடும். அதனை நாம் ஏற்றுக்கொண்டு விரும்பி தினமும் மகிழ ஆரம்பித்துவிட்டால் அதில் அப்படி ஒரு தன்னம்பிக்கை ஏற்படும் பாருங்க, அது தனி ரகம். சமாளிக்க முடியாமல் ஓடிப்போய்விடலாம் என்று நினைக்கிறவர்களுக்கு கூட மேலும், இவ்வளவு சாதித்துவிட்டு வந்துவிட்டோம்... இன்னும் ஒரு ஸ்டெப் எடுத்துவைத்துவிட்டால் இன்னும் வெற்றிகரமாக இருக்கும். என்கிற எண்ணத்திலயே அந்த பயிற்சியை முடித்துவிடுவார்கள்.”
பெண்களுக்குச் சொல்ல விரும்புவது...
“பெண்கள் சரிசமாக போட்டிக்கொண்டு முன்னேறி இருந்தாலும், மகாத்மா காந்தி சொன்னதுபோல் நடு இரவில் ஏன் செல்ல வேண்டும் பெண்கள்... 9 மணிக்கு மேல் தனியாக சென்றால்கூட ஏதோ ஒரு விதத்தில் ஒரு பிரச்சினையைச் சந்தித்து கொண்டுதான் செல்கிறார்கள். அது இல்லாத காலம் விரைவில் வரும். அதுபோக பெண்களுக்கு நான் சொல்லக்கூடிய அறிவுரை என்றால், யார் எது சொன்னாலும் உடனே நம்பிவிடாதீர்கள். உங்களை நீங்கள் நம்புங்கள். மேலும், சோஷியல் மீடியாவில் வரும் லைக்கிற்கு ஆசைப்படாதீர்கள். அதனை நீங்கள் எதிர்பார்க்காதீர்கள். ஒவ்வொரு நாளும் உங்களுக்குள் ஒரு சேலஞ்ச் வைத்துக்கொள்ளுங்கள். அதிலிருந்து நீங்கள் ஜெயித்தீர்கள் என்றால் அதன்பிறகு உங்கள் வாழ்க்கை எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கும்.”
உங்கள் குடும்பம் பற்றி...
“என் பெயர் ஜி.எஸ்.அனிதா. நெல்லை மாநகர தலைமை துணை போலீஸ் கமிஷனர். நான் பிறந்தது மதுரை. வளர்ந்தது தாராபுரம். திருமணம் நடந்தது கோயம்புத்தூர். என்னுடைய கணவர் சிவா, பிஸினஸ் செய்கிறார். எனது மகன் சித்தார்த், கல்லூரியில் இரண்டாம் வருடம் ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங் படித்துக் கொண்டிருக்கிறார். என்னுடையது ரொம்ப அழகான சிறிய குடும்பம்தான்.”
திருநெல்வேலி பெண்களைப் பற்றி?
“திருநெல்வேலி பெண்கள் எப்போதும் பதற்றப்பட மாட்டார்கள் என்பதை நான் என் தனி அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். அதாவது, காலையில் தினமும் நடக்கும் டிரெய்னிங்கிற்கு அதிகாலையில் 4 மணிக்கு எழுந்து கிரவுண்ட்டுக்கு வரவேண்டும். அங்கு அதிகம் புதர் காடாக இருக்கும் என்பதால் பாம்புகள் நடமாட்டம் இருக்கும். அதனால் நாங்கள் எல்லாரும் கையில் டார்ச் போன்றவற்றுடன் பாதுகாப்பாக வாருங்கள் என்று சொல்லிகொண்டு இருப்போம். அதையெல்லாம் அவர்கள் கண்டுகொள்ளாமல் போய்க்கொண்டே இருப்பார்கள். பாம்புகள் வந்தால் அடித்து தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். அந்த இடத்தில் நான் இருந்தால், கொஞ்சம் பயந்துதான் போயிருப்பேன். இதேபோன்ற தைரியத்தை அவர்களிடம் பிரச்சினையின் எல்லா வடிவங்களின்போதும் பார்க்கிறேன். மிகவும் இரக்கமும் தன்னம்பிக்கையும் உடைய பெண்கள் அவர்கள்.”
- தொடர்புக்கு: gandhiraja.g@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
5 days ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
16 days ago
வாழ்வியல்
17 days ago
வாழ்வியல்
22 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
25 days ago
வாழ்வியல்
1 month ago
வாழ்வியல்
1 month ago