அழகு எனும் நவீனச் சுரண்டல், திருமணம் எனும் அழுத்தம் - சிமோன் டி பொவாரும் சில சிந்தனைகளும்

By இந்து குணசேகர்

பிரான்ஸின் பிரபல எழுத்தாளர், பெண்ணியவாதி, இருத்தலியல் தத்துவவியலாளர் என பன்முகங்களை கொண்ட சிமோன் டி பொவாரை பெண்கள் தினத்தில் நினைப்படுத்துதல் என்பது இன்றைய நாளை மேலும் சிறப்பானதாக்கக் கூடும்.

சிமோன் டி பொவாரின் உலக புகழ்பெற்ற புத்தகமான ‘second sex’ (இரண்டாம் பாலினம்) என்ற புத்தகத்தில் ‘முதலில் பெண்கள் பெண்களாக இங்கு பிறப்பதில்லை. மாறாக சமூகத்தினால் உருவாக்கப்படுகிறார்கள்” என்று குறிப்பிடுகிறார். ‘பெண்ணாக இருப்பது என்பது இயற்கையானது அல்ல. அது தொடர்ச்சியான வரலாற்றின் விளைவு மட்டுமே’ என்கிறார் சிமோன். தொடர்ந்து கூறுகையில், ”நான் பெண்கள் கருவுறுதலை இங்கு மறுக்கவில்லை. அது உயிரியல் நிகழ்வு. ஆண்களால் கருவுறவும் முடியாது. நான் இங்கு கூறுவது இரு பாலினத்துக்கு இடையேயான வேறுபாட்டை பற்றி. இந்த வேறுபாடே இங்கு ஆண், பெண் பாலினத்துக்கு மதிப்பீடுகளை வழங்குகிறது. இவ்வாறு உயிரியல் காரணங்களால் உண்டான இந்த வேறுபாட்டை எவ்வாறு ஏற்றுக் கொள்வது. அதுதான் இங்கு பிரச்சினை. இந்த வேறுபாட்டிலிருந்துதான் சுரண்டலும் அடக்குமுறையும் நடக்கின்றன. இந்தச் சமூகம் கட்டமைத்த தோற்றத்தின் விளைவாய் பெண் அழகின் பின்னாலும், பெண்மையின் பின்னாலும் ஓடவேண்டியவளாகிறாள்” என்று குறிப்பிடுகிறார் .

உண்மையில் சிமோன் டி பொவார் கூறுவதுபோல் இன்று பெண்கள் அழகு என்ற நவீனச் சுரண்டலுக்கு தங்களை விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். எப்போதும் அழகாக இரு, தீவிர உணவு கட்டுப்பாட்டுடோடு இரு, ஒப்பனைகள் செய்துகொள், நகைகள் அணி என்ற மறைமுக குரல்களுக்கு தங்களை பெண்கள் ஒப்புக் கொடுத்துவிட்டார்கள். ஆண்களால் கட்டமைக்கப்பட்ட இந்த மாறா கருத்துருவாக்கத்தில் சிக்கிக் கொண்டு அதனை சுதந்தரம், உரிமை என்று பெண்களே கூறுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது என கேள்வி எழுப்புகிறார் சிமோன்.

இச்சமூத்தில் உலா வரும் ”perfect women” என்ற வார்த்தையின் பின்னணியில் பெண்கள் தங்கள் தனித்துவமான உடலமைப்பை விட்டு எதோ ஒரு குரலின் அதிகாரத்தால் ஈர்க்கப்பட்டு அவர்கள் காட்டும் பொது பிம்பத்தை பிரதி எடுத்து கொண்டிருக்கிறார்கள் என்பதே திரை நட்சத்திரங்கள் மூலம் நாம் அறியும் உண்மை.

ஒரு மனைவியாக, தாயாக இருப்பதைவிட ஓர் எழுத்தாளராக, ஆசிரியராக வேண்டும் என்று சிமோன் டி பொவார் விரும்பினார். அதையே அவர் தேர்வும் செய்தார்.

நமது தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பு செய்யப்படும் சீரியல்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் பெரும்பாலானவை ஒரு பெண்ணின் திருமணத்தைதான் கருத்தாக்கமாகவே கொண்டுள்ளன. பெண்கள் திருமணத்துக்காகவே பிறக்கிறார்கள். அதுவே அவர்களை முழுமை செய்து அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் என நம் முன் 24 மணி நேர பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தத் தொடர்கள் ஒருவகையில் தங்கள் பிரச்சாரத்தில் வெற்றி பெற்று இருக்கின்றன. நமது சமூகத்தில் திருமணம் என்பது வணிகம், அழுத்தம், மதிப்பீடு மட்டும்தான்.

இதனைத்தான் “திருமணம் என்பது பாரம்பரியமாக சமூகத்தால் பெண்களுக்கு வழங்கப்படும் விதி. இங்கு பெரும்பாலான பெண்கள் திருமணமானவர்கள் அல்லது திருமணத்துக்காக திட்டமிட்டு கொண்டிருப்பவர்கள் அல்லது திருமணம் ஆகாமல் அவதிப்படுபவர்கள், அவ்வளவுத்தான் இங்கு பெண்களின் நிலை. திருமணத்தின் மீதான சாபம் என்னவென்றால், திருமணத்தில் பெரும்பாலும் தனி நபர்கள் தங்கள் வலிமையை விட அவர்களின் பலவீனத்தில்தான் இணைந்திருக்கிறார்கள். இதுவே உண்மை. ஒவ்வொருவரும் கொடுப்பதில் மகிழ்ச்சியைக் காண்பதற்குப் பதிலாக மற்றவரிடம் கேட்கிறார்கள்” என்கிறார் சிமோன்.

திருமணத்துக்குப் பிறகு குழந்தை இல்லாத பெற்றோர்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கும் இந்தச் சமூகம் ஆயிரம் கதைகளை வைத்திருக்கிறது. அக்கதைகள்தான் பெண்களை தியாகிகளாக ஒருபுள்ளியில் நிறுத்துகின்றன.

சிமோன் டி பொவார் - பிரபல பிரெஞ்சு இருத்தலியல் தத்துவியலாளர் ழான் பால் சார்த்ரே இருவரும் தங்களது கடைசி காலம்வரை திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழ்ந்தனர் என்பதை நாம் அறிந்திருப்போம். இதிலிருந்து தாய்மை பற்றியும், சார்த்ரேவுடனான் தனது உறவு குறித்து சிமோன் கூறிய உரையாடல்களை இங்கு பதிவு செய்வது அவசியமாகிறது.

”சார்த்ரேவுடனான என் உறவு... குற்றம் சுமத்தாத உறவு. நாங்கள் ஒருவர் மற்றவர் கைகளை கட்டிக்கொண்டு... திருமணம் செய்து கொண்டதால் சேர்ந்து வாழ்கிறோம் என்ற போலி கருத்துருவாக்கத்தில் இருக்க விரும்பவில்லை. குழந்தை பெறுவதில் எந்த வேறான கருத்தும் என்னிடம் இல்லை, ஆனால், எனக்கும் சார்த்ரேவுக்கும் இடையேயான உறவு குடும்பம் தாண்டி, அறிவின்பால் இணைந்தது. எங்களுக்கு நாங்கள் போதும். எங்கள் உறவில் அழுத்தத்துக்கு இடமில்லை. தாய்மை என்பதே இங்கு கட்டமைக்கப்பட்டதுதான். இதில் புனிதம் எல்லாம் இல்லை.” என்கிறார் சிமோன் டி பொவார்.

சிமோனின் இந்தக் கருத்துகள் 1960-களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இப்போதும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

சமவுரிமை: பொருளாதாரத்தில் தற்சார்பை அடைய பெண்களுக்கான சம உரிமை, சம வாய்ப்பு, சம ஊதியம் என்பது அனைத்து தளங்களிலும் அவசியம். இதற்காகவே நூற்றாண்டுகளாக வாக்குரிமை, சொத்துரிமை, கல்வியுரிமை என போராட்டங்கள் தொடர்கிறது. விவசாயத்தில் தொடங்கி அதி நவீன தொழிநுட்பங்கள் வரை பெண்ணுக்கான வேலை வாய்ப்புகள் ஆண்களுக்கு நிகராக உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் சமத்துவம் பரவி பாலின வேறுபாடு மறையும். அதற்கான நாட்களை நோக்கி முடங்கிவிடாமல் பெண்களும் நகர வேண்டும்.

இறுதியாக, “அவளது இறகுகள் ஒருபக்கம் வெட்டப்படுகிறது... ஆனால், அவள் பறக்க இயலாததற்காக குற்றம் சுமத்தப்படுகிறாள்..!” - சிமோன் டி பொவார் கூறுவதுபோலவே அதுவரை விமர்சிக்காமல் இருங்கள்...!

தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

16 hours ago

வாழ்வியல்

19 hours ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

7 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

18 days ago

வாழ்வியல்

18 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

27 days ago

வாழ்வியல்

27 days ago

மேலும்