“சாதாரண நடுத்தர குடும்பம்தான் என்னுடையது. ஆனால் இன்று என்னால் சில பேருக்கு வேலை கொடுக்கும் இடத்தில் நான் இருக்கிறேன் என்றால், அதற்கு என்னுடைய எல்லா முயற்சிகளுக்கும் அன்றிலிருந்து இன்று வரை என் குடும்பத்தினர் தந்த சப்போர்ட் பெரும் பலம் என்று நம்புகிறேன். அன்று எந்தவிதமான வருமானமும் இல்லாத நிலையில் தான் இந்த யூடியூப் சேனலை ஆரம்பித்தோம். முதலில் எல்லாரையும் போல... கமகம தக்காளி சாதம் செய்வது எப்படி? என்பது போலதான் வீடியோ போட்டுக்கொண்டு இருந்தேன். ஆனால், அதில் உள்ள கஷ்டம் எங்களைப் போன்ற யூடியூபர்களுக்கு மட்டுமே தெரியும். ஏனென்றால் அதன்பிறகு அத்தனை பாத்திரங்களையும் கழுவி சரி செய்யும்வரை நாமளோதான் செய்யவேண்டும். அது ஒருநாள் இல்லை பல நாள் தொடர் வேலை.
எனவே, இனி இது நமக்கு செட் ஆகாதுப்பா என்ற லெவலில் தான் அடுத்த என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, நமக்கு எது வருமோ அதை செய்வோம் என்றபடிதான் ஃபுட் ரிவியூவில் இறங்கினேன். பொதுவாகவே நான் நன்றாக சாப்பிடக்கூடிய பெண் என்பதால்தான் இந்த முடிவை தைரியமாக எடுத்தேன்” என்கிறார் கிருத்திகா.
திட்டமிடல்: “பொதுவாகவே, ஒவ்வொரு ஊருக்கும் கிளம்புவதற்கு முன்பே, அங்கு என்ன உணவு பிரபலமானது என்று தெரிந்துகொள்வேன். எங்கே? என்ன உணவை ருசித்து பார்க்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டுத்தான் புறப்பட ஆரம்பிப்பேன். அந்த ஆர்வம்தான் உணவு தொடர்பான வீடியோக்களை பதிவேற்றுவதற்கு என்னைத் தூண்டியது.
நான் திரைப்பட தொழில்நுட்பத்தில் பட்டயப் படிப்பை முடித்திருக்கிறேன். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. கணவர் அருண் பொன்ராஜ் புகைப்படம் மற்றும் வீடியோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். எங்களின் ஒரே மகள் லக்ஷ்யா இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். எனது குடும்பத்தின் ஆதரவால்தான் தொடர்ந்து நான் பயணிக்க முடிகிறது. முக்கியமாக எனது மகளும், எனது தங்கை மகளும்தான் எனது முதல் ரசிகர்கள்.
தனியார் நிறுவனத்தில் 12 ஆண்டுகள் பணி புரிந்தேன். எனக்கு சமைப்பதும், சாப்பிடுவதும் மிகவும் பிடிக்கும். அது தொடர்பாக ஏதாவது செய்து, அதன் மூலம் என்னை சமூகத்துக்கு அடையாளப்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எனவே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ‘டேஸ்டீ வித் கிருத்திகா’ என்ற பெயரில் உணவு பற்றிய யூடியூப் சேனல் ஆரம்பித்தேன். அதில் ஒவ்வொரு ஊரின் சிறப்பு உணவுகளையும், அந்த ஊர்களுக்கே சென்று ருசித்துப் பார்த்து, செய்முறையை தெரிந்துகொண்டு அவற்றை சமைக்கும் விதம் பற்றி விளக்கி வருகிறேன். தமிழ்நாட்டில் உணவைப் பற்றிய கருத்து சொல்லும் சேனலைத் தொடங்கிய முதல் பெண் நான்தான்.
கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை நான் சென்னையை விட்டு எந்த ஊர்களுக்கும் போனது இல்லை. ஆனால், எனது பாட்டி, கோலா உருண்டை, கொத்துக் கறி, கறி தோசை என்று வெவ்வேறு ஊர்களில் பிரபலமாக இருக்கும் அசைவ உணவுகளை தயார் செய்து கொடுப்பார். பணிபுரிய ஆரம்பித்த பின்பு, புகைப்படங்கள் எடுப்பதற்காக வெளியூர்களுக்குப் போகும்போது அந்தந்த ஊர்களில் பிரபலமாக இருக்கும் உணவுகளையும் சுவைக்க ஆரம்பித்தேன்.எவ்வளவுதான் ஜாலியாக வேலையை ஸ்டார்ட் செய்தாலும், எந்த விதத்திலும் அவரும் நானும் எங்கள் உழைப்பை கொடுப்பதற்கு தயங்கியதே இல்லை. வேலைன்னு வந்துட்டா, நாங்கள் இருவரும் அவ்வளவு சீரியஸான ஆட்கள்.
ரிவியூ பண்ணாத இடமேயில்லை: “தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் எல்லாவற்றுக்கும் சென்றதோடு, புதுச்சேரி, ஆந்திரா, கோவா, கேரளா, ஹைதராபாத் என்று அண்டை மாநிலங்களுக்கும் போயிருக்கிறேன். பலவிதமான உணவுகள் சாப்பிட்டிருக்கிறேன். மதுரையின் சிறப்பு உணவுகள் தனி ருசி கொண்டவை. ராமேஸ்வரத்தின் பட்டைச் சோறு, தொதல் இனிப்பு, நாகர்கோவில் பாலாடை, நுங்கு சர்பத் என்று பல விதமான உணவுகள் உள்ளன. புதுச்சேரியில் பிரெஞ்சு உணவுகளை சுவைக்க வாய்ப்பு கிடைத்தது. ஐதராபாத்தில் பிரியாணி, குனாபா சுவீட், கோவாவில் கடல் உணவுகள், குறிப்பாக சிப்பியைக் கொண்டு செய்யும் உணவு அபார ருசியானது. கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களைத் தவிர அனைத்தும் மாவட்டங்களிலும் ரிவியூ பண்ணிவிட்டேன். நான் சமீபத்தில் மலேசியா சென்றும் உணவு ரிவியூ பண்ணியிருக்கிறேன்.
அடையாளம்: நான் பார்த்து வந்த வேலையில் நல்ல வருமானம் வந்தது. இருந்தாலும் என் மனதுக்கு பிடித்த வேலைகளை செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அதன் மூலம் எனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள நினைத்தேன். எனவே எனது இலக்கை அடைவதற்காக வேலையை ராஜினாமா செய்தேன். அந்த நேரத்தில் கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு ஏற்பட்டது. மனம் தளராமல் எனது முயற்சியைத் தொடர்ந்தேன். அப்போது என் சேனலுக்கு ஏழாயிரம் பேர்தான் சந்தாதாரர்களாக இருந்தார்கள். எனவே ‘கிளவுட் கிட்சன்’ எனப்படும், இணையம் வழியாக மட்டும் உணவு விற்பனை செய்யும் நபர்களைப் பற்றியும், அவர்களது உணவுகளைப் பற்றியும் வீடியோ பதிவேற்றம் செய்தேன். அது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைப் பார்த்து வெளிநாட்டு ஊடகம் ஒன்று, அவர்கள் தொலைக்காட்சியில் பணியாற்றும் வாய்ப்பை அளித்தது. அதிலும் என் பயணம் உணவு சார்ந்ததாகவே அமைந்தது.
ஒவ்வொரு ஊரின் சிறப்பு உணவுகளை வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி என்ற ரீதியில் நிகழ்ச்சியை வழங்கி வருகிறேன். அதன் மூலம் பலதரப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களின் உணவு முறைகளைப் பற்றி தெரிந்து கொள்கிறேன். எனது பயணத்தில், இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் சிறப்பான, சுவையான உணவுகளையும், அது சார்ந்த கலாசாரம், பாரம்பரியம் போன்றவற்றையும் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். பல தோல்விகளை சந்தித்து, பல்வேறு முயற்சிகளை செய்த பின்புதான் என்னால் இந்த வெற்றியை அடைய முடிந்தது. திட்டமிட்டு செயல்பட்டு, கடினமாக உழைத்தால் நிச்சயமாக இலக்கை அடைய முடியும்.
சிக்கல்கள்: ஒரு பெண்ணாக நான் சந்தித்த சிக்கல் என்னவென்றால், தமிழ்நாட்டில் டாய்லெட் சார்ந்த பிரச்சினைகள் அதிகம் எதிர்கொண்டுள்ளேன். டாய்லெட்கள் சுத்தம் எங்கும் இல்லை. இதனை மிகவும் சரி செய்ய வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் உள்ளோம். இந்த விஷயத்தில் ஆண்கள் அதிர்ஷ்டசாலிகள். இதுபோன்ற பிரச்சினைகள் எப்போதும் பெண்களுக்குத்தான். இது பெண்களுக்கு எப்பொழுதும் அதீத சிரமத்தையும் அசெளகரியத்தையும் கொடுக்கிறது. இதுபோன்ற விஷயங்களால் தொலைதூர பயணத்தில் எத்தனைப் பெண்கள் தண்ணீரே குடிக்காமல் வீட்டுக்கு வந்து குடிக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். எந்தக் காலம் ஆனாலும் பெண்கள் எதிர்கொள்ளும் பெரும் சிரமம் இன்றளவிலும் இதுதான். இதுமட்டும்தான்” என்கிறார் கிருத்திகா.
விமர்சனம் தாங்கும் சக்தி: “எந்த வீடியோ போட்டாலும் திட்டுவதற்கு என்று சிலர் இருக்கிறார்கள். அதனையெல்லாம் படித்து எத்தனை நாள் மனது கஷ்டப்பட்டிருக்கும் என்று எனக்கே தெரியாது. ஆனால் இப்போது அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன். கிட்டத்தட்ட யாரும் தப்பு சொல்ல முடியாத ஒரு வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். அதற்குமே திட்டி கமெண்ட் செய்வது அவ்வளவு மோசமாக குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். இங்கு ஒரு பெண்ணை எந்த மாதிரி விமர்சிக்க வேண்டும் என்கிற வரைமுறையை முதலில் சட்ட ரீதியாக ஏற்படுத்த வேண்டும்.
ஒரு பொண்ணாக இருந்துகிட்டு நீ இப்படி போய் தெருத் தெருவாக போய் சாப்பிடுகிறாயே என்று எல்லாம் கமெண்டில் பேசியிருக்கிறார்கள். இந்த மாதிரி விமர்சனங்கள் எல்லாம் இன்று என்னை ஆளாக்கியிருக்கும் தைரிய விருட்சத்தின் உரங்கள். இப்போதெல்லாம் நான் கண்டு கொண்டேதேயில்லை. எந்தச் சூழலிலும் ஒரு பெண் மனம் ஒடியாமல் இருக்க வேண்டும் என்றால், அதற்கு குடும்பத்தின் சப்போர்ட் வேண்டும். அது எனக்கு எல்லா வகையிலும் கிடைத்திருக்கிறது. எனக்கு எல்லா விஷயத்திலும் எனது கணவர் அருண் மிகவும் சப்போர்ட்டாக இருக்கிறார்.
முதலில் சில ஹோட்டல்களில் எங்களை எல்லாம் உள்ளே விடவேயில்லை. பிறகு போகப் போகத்தான் அவர்கள் என்னுடைய வீடியோவைப் பார்த்து, கடைக்குள் எங்களை அனுமதித்தார்கள். எது எப்படியோ இன்று ‘டேஸ்ட்டி வித் கிருத்திகா’ என்றால் தமிழ்நாட்டில் இருக்கும் பலருக்கும் என் முகம் தெரியும் என்பதே எனக்கு மகிழ்ச்சிதான்” என்கிறார் கிருத்திகா.
- தொடர்புக்கு: gandhiraja.g@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
13 days ago
வாழ்வியல்
13 days ago
வாழ்வியல்
20 days ago
வாழ்வியல்
21 days ago
வாழ்வியல்
26 days ago
வாழ்வியல்
27 days ago
வாழ்வியல்
27 days ago
வாழ்வியல்
28 days ago
வாழ்வியல்
28 days ago
வாழ்வியல்
29 days ago
வாழ்வியல்
1 month ago
வாழ்வியல்
1 month ago