“ஆண் - பெண் சமத்துவத்திற்கு ஆண்களை, பிறப்பில் இருந்தே தயார் செய்துவர வேண்டும். அப்போதுதான் பாலின பாகுபாடற்ற சமூகம் என்பது சாத்தியமாகும்.”, “உறவுகளுக்கான எமோஷனல் சப்போர்ட்டிங் கிடைக்காத போதுதான் சிக்கல்கள் தொடங்குகிறது...”, “பெண்களின் பயம்தான் சமூக விரோதிகளின் பேராயுதம்...” என சமகால பெண்கள் பிரச்சினைகளையும், அவற்றுக்கான தீர்வுகளை நோக்கிய நகர்வுகள் குறித்தும் தெறிப்புக் கருத்துகளை இங்கே பகிர்கிறார் திரைப் படைப்பாளரும், பன்முகக் கலைஞருமான லட்சுமி ராமகிருஷ்ணன்.
“இன்றையச் சூழலில் பெண்களுக்காக சமத்துவம், சம உரிமை என்பன போன்றவற்றை நாம் திரும்பத் திரும்ப பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் நிஜமாகவே தற்போதைய பெண்கள் அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறார்களா? அல்லது 40, 50 வருடங்களுக்கு முந்தைய காலக்கட்டங்களில் வாழ்ந்த நமது அம்மா, பாட்டி போன்றவர்கள் சந்தோஷமாக இருந்தார்களா என்பதை பற்றிய தெளிவு பெறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பொதுவாகச் சொல்லப்போனால், என்னுடைய அம்மா, பாட்டி எல்லாம் வீட்டில் மட்டுமே இருந்தபோது அவ்வளவு சந்தோஷமாக அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதாகத்தான் நான் உணர்கிறேன். ஆனால், இந்தக் காலத்து நவநாகரிக பெண்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால், அவர்களுக்கு அவ்வளவு மன அழுத்தம்.
தற்போதைய பெண்கள் வேலை மற்றும் குடும்பம் என்று இரண்டு சைடுகளிலும் சாதிப்பதற்காக மிகவும் பிரயத்தனப்பட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்னதான் கஷ்டப்பட்டாலும் இந்த உலகம் இன்னும் பெண்களை மட்டும்தான் ஜட்ஜ் பண்ணிக்கொண்டே இருக்கிறது. எந்த விஷயமாக எடுத்துக்கொண்டாலும் அதை இருபாலர்களுக்கும் சமமாக பேசி முடிவெடுக்கும் இடத்தில் இந்த உலகம் இல்லை. அதில் எப்பவும் ஒரு ஓரத்தில் ஒரு சார்புத் தன்மை இருக்கிறது.
சோஷியல் மீடியா போன்ற ப்ளாட்பார்ம்கள் பெண்களை இன்று வேற லெவலில் கொண்டு போய்விட்டது. அவர்களுக்கான வாய்ப்புகள் திறமைகளை அடுத்த அடுத்த இடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. ஆனாலும், ஒரு சில விஷயங்கள் மட்டும் அந்தக் காலம் முதல் இந்த டிஜிட்டல் யுகம் வரை பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் ஏற்றத் தாழ்வுகளும் இன்னும் மாறவே இல்லை. குறிப்பாக, நான் இருக்கும் சினிமா துறையில் கூட ஆண்களின் ஆதிக்கம் அதிகம். அதில் ஒரு சில பெண்கள் மட்டும்தான் விதிவிலக்கு. குறிப்பாக நயன்தாரா, சமந்தா போன்றவர்கள் சினிமா துறையில் ஓர் உயர்ந்த இடத்தை தொட்டிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். ஆனாலும், கூட அந்த உயர்ந்த இடத்தினை இன்னும் முழுமையாக தொட்டு ஆக்கிரமித்துவிட முடியவில்லை. ஒரு நிரம்பாத பகுதி இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால் இன்றும் சினிமா மார்க்கெட்டை தீர்மானித்துக்கொண்டிருப்பது ஆண் நடிகர்கள்தான். ஆண்கள் மட்டும்தான்.
உலகம் முழுவதும் பெண்கள் சம்பந்தப்பட்ட பார்வை ஒரு தரப்பு மக்களுக்குத்தான் தெளிவாக இருக்கிறது. மற்றபடி எந்த விதத்திலும் மாறாத இன்னும் சில இடங்களில், பெண்களை வைத்துதான் குடும்பத்தின் மரியாதை இருக்கிறது என்று அவர்களை முன்னிறுத்தி செய்யப்படும் அரசியலானது அவர்களை கீழே தள்ளி அமுக்கி கொண்டேதான் இருக்கிறது. அது எந்தவிதத்திலும் மாறவேயில்லை என்பது பெரும் வருத்தம்தான்.
எல்லாவற்றையும்விட முக்கியமானது என்னவென்றால், எல்லாருக்கும் பொதுவான 8 மணி நேர வேலை களத்தில் ஆணுக்கு ஒரு கூலி, பெண்ணுக்கு ஒரு கூலி கொடுப்பது என்பது இன்றும் பரவலாகத்தான் இருக்கிறது. உடல் உழைப்புச் சார்ந்த தொழில்களை அடிப்படையாக கொண்டு வேலை செய்யும் இடத்தில் நிலவும் ஆண் - பெண் வர்க்க வேறுபாடு சார்ந்த ஏற்றத் தாழ்வுகளை நிச்சயம் களைய வேண்டும். இந்த ஏற்றத் தாழ்வுகள் குறிப்பிட்ட இடம் என்று இல்லாமல், சினிமாவில் இருந்து சாதாரண கிராமங்களில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் தோட்ட வேலைகள் வரை பெண்களுக்கான உழைப்புச் சுரண்டல்கள் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். மாறும் வரை இதனை ஒவ்வொரு முறையும் பேசுபொருளாக்கி விவாதத்துக்கு உட்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
சந்தோஷமாக சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடி கொண்டிருக்கிறோம். பெண்கள் முன்னேறி இருக்கிறோம்தான். மறுக்கவில்லை. ஆனால் எத்தனைக் குடும்பங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக சொத்துகளைப் பிரித்து கொடுக்கிறார்கள். அப்படி மகன், மகள் என்று பாகுபாடு பாராது செயல்பட்டிருக்கிறேன் என்னும் பெற்றோர்களுக்கான வட்டத்துக்குள் நின்று கொண்டு பார்த்தால் அந்த எண்ணிக்கை மிகக் குறைவாகத்தான் இருக்கும்.
இவை எல்லாம் பெண்களுக்கு எதிராக நடந்து கொண்டேதான் இருக்கும். ஆனால், வெளியுலக பேச்சிற்கு மட்டும், பெண்களின் மீதான வெளிச்சங்கள் கலர் கலராக பட்டுக்கொண்டே இருக்கிறது. அவர்களின் நிலைமை முன்னேறி இருப்பதாக காட்டிக்கொள்வது எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்?
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளில் இருந்து அலுவலக அரசியல், தனித்து செல்லும் இடங்களிலான பாலியல் சீண்டல்களை எதிர்கொள்வது வரை சில விஷயங்களில், அவை மறைமுகமாக மட்டுமல்ல; வெளிப்படையாகவே கூட மாறவேயில்லை. இது நமக்குப் பெருமையா? வேதனைத் தருவதாகத்தான் இருக்கிறது. இது எவ்வளவுப் பெரிய ஏற்றத் தாழ்வுக் கொடுமை?!
மறைந்துவிட்டதா குடும்ப வன்முறை? - பெண்ணுரிமை, சமத்துவம் அப்படி இப்படின்னு இவ்வளவு உரக்கப் பேசுகிறோமே, குடும்ப ரத்த சொந்த பந்தங்களுக்குள்ளான ஆண், பெண் ஏற்றத் தாழ்வுகள் மறைந்துவிட்டதா? அப்பா, மகன் முதல் அனைவரும் ஏதோ ஒரு விஷயத்தில் குடும்பத்தில் உள்ள பெண்களின் மீது ஒரு புறக்கணித்தலை, மதியாமையை வெளிப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் ஒரே காரணம், பெண் என்கிற ஒன்று தானே?!
‘நான் ஆண். வேலைக்குப் போகிறேன். நீ வீட்டில்தானே இருக்க... உனக்கு என்ன மரியாதை’ என்ற அளவில் இன்றும் எத்தனைக் குடும்பத் தலைவர்கள் இருக்கிறார்கள்? ‘நீ குடும்பத் தலைவி... உனக்கான மரியாதையை நான் எப்போதும் கொடுக்கிறேன்’ என்று எத்தனை வீடுகளில் சமத்துவம் இருக்கிறது? ஆண்களைப் போல இப்போதும் பெண்களும் வேலைக்கு செல்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு மட்டும்தான் வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் அன்றாட வேலைகளைச் செய்துவிட்டுத்தான் தூங்குகிறார்கள். தன் குழந்தைகளுக்கான டியூஷன் முதல் சமையலறை வேலை வரை பார்த்து ஓடாகத் தேய்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எத்தனை வீட்டு ஆண்கள் சரிசமத்துவமாக வேலையை பகிர்ந்து உதவி செய்கிறார்கள் என்பது மெஜாரிட்டியற்ற எண்ணிக்கையாகத்தான் இருக்கிறது.
இவை எல்லாவற்றையும்விட, பாலியல் தொழிலாளர்கள் பற்றி நாம் முக்கியமாக கவலைப்பட்டே ஆக வேண்டும். தங்களுக்கு ஏற்படும் பால்வினை நோய்களுக்குகூட அவர்கள் துணிந்து பொதுவெளியில் வந்து மருத்துவம் பார்த்துக்கொள்ள தயங்கி, பயந்து தங்கள் உடலை கவனித்துக்கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். அதனால் அவர்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை வார்த்தைகளால் சொல்லி தெரியவைக்க முடியாது. இந்தத் தொழில் இன்னும் நடந்துக்கொண்டிருப்பதற்கு யார் காரணம் ஆண்கள்தானே?
அந்த வகையில் பார்த்தால், இன்று நம் சமூகத்தின் பார்வையானது எந்தவிதத்திலும் மாறவே இல்லை. அதைப் பற்றிய கவலையும் நமக்கு இல்லை. ஆனாலும் நாம் தொடர்ந்து மகளிர் தினத்தை கொண்டாடிக்கொண்டே இருப்போம். வாழ்த்துகளைச் சொல்லிக்கொண்டே இருப்போம். பெண்கள் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
ஆண் - பெண் சமத்துவத்திற்கு ஆண்களை, பிறப்பில் இருந்தே தயார் செய்துவர வேண்டும். அப்போதுதான் இந்தப் பாலின பாகுபாடற்ற சமூகம் என்பது அடுத்த தலைமுறையினருக்காவது வாழ்வதற்கு ஏதுவாக கிடைக்கும்.
எமோஷனல் கம்பானியன்ஷிப் தேவை: இன்று பல குடும்பங்களில் பெண்களின் மனக்குறைகளைக்கூட என்னவென்று காது கொடுத்துக் கேட்டுக்கொள்ள கணவர்கள் தயாராக இல்லை. நாள் முழுவதும் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடப்பவளுக்கு, தனக்கான எல்லாமுமாக நினைக்கும் கணவன் வீட்டுக்கு வேலை முடிந்து வந்ததும் அப்பாடா கொஞ்சம் நேரம் பேச வேண்டும் என்ற மனநிலையில்தான் இருப்பாள். அப்படி காத்திருப்பவளுக்கு அந்த கணவன், காது கொடுத்தானா என்பதுதான் இங்கு கேள்வி.
அங்குதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது. ஆண், பெண் என்று வித்தியாசம் இல்லாமல் இங்கு எல்லோருக்குமே நட்பு பிடிக்கும். அதாவது, தான் சொல்வதை காது கொடுத்து கேட்பவர்களை குறிப்பாக, ரொம்பவே பிடிக்கும். இதுதான்... இந்த உளவியல் தான் சிலருக்கு வலையாகவும், உலையாகவும் ஆகிறது. உறவுகளுக்கான எமோஷனல் சப்போர்ட்டிங் கிடைக்காதபோதுதான் தவறான உறவுகளில் சென்று நிறைய பெண்கள் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த மாதிரியான சூழலைப் புரிந்துகொள்ள தயங்குவதால்தான் இந்த மாதிரியான பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்துவிடுகிறது. இதனை கணவர்களும் மனைவியும் தினமும் ஒரு அரைமணி நேரம் நட்பு ரீதியாக மனம் விட்டு பேசிக்கொண்டாலே போதும்... இன்று குடும்பத்தில் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
ஆனால், இந்த எமோஷனல் கனெக்டிங்கை சரியாக பயன்படுத்துகிறார்களா என்பதுதான் ஆண் வர்க்கத்தை எதிர்நோக்கியிருக்கும் முக்கியமான கேள்வி. இதையும் தாண்டி பெண்கள் தவறு என்று தெரிந்தும் சில தீயநட்புகளில் சிக்கிக் கொள்வதற்கு காரணம், அவர்களுக்கு அன்றாட வாழ்க்கை முறையும் அதில் ஏற்பட்டிருக்கும் சலிப்பும்தான்.
வழிதவறிய வாழ்வுக்கு அடுத்த முக்கியக் காரணியாக இருப்பது தனிமைதான் முக்கியப் பங்கு இருக்கிறது. இந்த தனிமையில் எந்த ஒரு ஆணும் பெண்ணும் தவறினை ரொம்ப சுபலமாக செய்துவிடுவார்கள் (இங்கு தனிமை என்பது வீட்டில் தனித்தனியே இருப்பது). நேரங்காலம் தெரியாமல் யாருக்காவது முகம் தெரியாதவர்களுக்கு கூட ஒரு போன் செய்து பேசி பெரிய பிரச்சினைகளில் மாட்டிக் கொண்ட ஏராளமான பெண்களைப் பார்த்திருக்கிறேன்.
தனிமைக்கு அடுத்ததாக, ஆண் - பெண் உறவுகள் கெட்டுப் போவதற்கு, பெரும் தீனி போடுவது மெபைல் போன்கள்தான். இதில்தான் நிறைய பெண்கள் தானாகவே போய் சிக்கி கொள்கிறார்கள். எனக்கு தெரிந்து, நான் பார்த்தவரை நிறைய பெண்கள் மெபைலில் வந்த ராங் கால்களில்தான் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். போகப் போக வாட்ஸ்அப், அதில் தங்களின் புகைப்படங்கள் ஷேர் என்று வந்தபின்பு பெண்கள் ஈஸியாக சில தவறான ஆண்கள் வசம் வந்து மாட்டிவிடக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். தன் தவறு உணர்ந்து திரும்ப எத்தனிக்கையில் தான் அவர்கள் பழகி வைத்திருக்கும் ஆண்களின் அசுர குணங்கள் தெரிய வர, வேறு வழியின்றி தவித்து வரமுடியாது, வெளிக்கொணர பயந்து மாட்டிவிட்டோமே என்று தங்கள் வாழ்வை தாங்களே பாழாக்கி விடுகிறார்கள்.
இப்பொழுதும் அல்ல எப்பொழுதும் நான் சொல்வது ஒன்றுதான். அவர்களுக்கு எப்போதும் தைரியம் தேவை. துணிந்து முடிவெடுங்கள். வெளியே வாருங்கள். தவறான உறவு என்று தெரிந்தால் குடும்பத்தை நினைத்துகொள்ளுங்கள். குழந்தைகளை நினைத்து பாருங்கள். துணிவு தானாக வரும். வெளியில் வந்துவிட்டபின் வரும் வம்பினை அதே துணிவுடன் குடும்பத்தினரிடம் தெரியபடுத்தி எதிர்கொள்ளுங்கள்.
வெளிப்படையே தீர்வு... - குழம்பி இருக்கும் சூழலில் முடிவு எடுக்காதீர்கள். என்ன நடந்தாலும் பெண்கள் வீட்டில் வெளிப்படையாகச் சொல்லவேண்டும். உடல் சார்ந்த மிரட்டல்களை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். எந்த மான, அவமானங்களுக்காகவும் அஞ்சி வீட்டுக்குள் அடங்கியோ, மனதால் முடங்கியோ விடாதீர்கள். தைரியமாக எதிர்த்தால் மட்டுமே பெண்கள் எதையும் நேரடியாக ஜெயிக்க முடியும். தங்கள் சிக்கல்களை தீர்க்க முடியும்.
பெண்களின் பயம்தான் சமூக விரோதிகளின் பேராயுதம். பயந்தால் மாட்டிக் கொள்வீர்கள். எப்போதுமே பெண்ணை நிர்வாணப்படுத்துதல், அது வார்த்தைகளாகவோ அல்லது மார்பிங் மூலமாகவோ, வீடியாக்கள் மூலமாகவோ அடக்கிவிடலாம் என்று உடல் விஷயங்களை யார் கையில் எடுக்கிறார்களோ அவர்கள்தான் வெட்கப்பட வேண்டும்... நாம் அல்ல. நாம் மிகத் தைரியமாக வெளியே வர வர, அவர்கள் ஓடி ஓடி ஒளிந்து கொண்டிருப்பார்கள்.
முக்கியமாக நம் மனதுக்குள்ளே தனித்து ஒளித்து வைக்காமல் பிரச்சினைகளை குடும்பத்தினர் மற்றும் பொதுவெளிகளின் மத்திக்கு கொண்டுவந்துவிட வேண்டும். எப்போது பொதுவெளிக்கு தெரிகிறதோ அப்போதே அந்தப் பிரச்சினை சுக்குநூறாக உடைந்து விடும். எந்தச் சூழலிலும் குடும்பம் மற்றும் சகோதரர், கணவர் யாராக இருந்தாலும் அந்த ஆண்கள் அவர்களைக் குறை சொல்லாமல் தெரியாமல் செய்த தவறை அவர்கள் உணரும்பட்சத்தில் துணை நின்றாலே பெண்களுக்கு பெரும் பலம் கிடைத்துவிடும்.
எந்த வகையில் ஆனாலும், அது டிஜிட்டல் சுதந்திரமாக இருக்கட்டும், தனி மனித சுதந்திரமாக இருக்கட்டும். நமக்கான பெண் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தாமல் நம்மை ஜொலிக்க வைக்க, வளர்த்து ஆளாக்கிகொள்ள பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
- தொடர்புக்கு: gandhiraja.g@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
13 days ago
வாழ்வியல்
14 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
18 days ago
வாழ்வியல்
20 days ago