சமகாலத்தில் எங்களை மக்கள் நாடுவது எதற்காக? - ‘டிடெக்டிவ்’ யாஸ்மின் நேர்காணல் | Women's Day Special

By ஜி.காந்தி ராஜா

தனியார் துப்பறியும் துறையில் பெண் டிடெக்டிவ் யாஸ்மின். மிகவும் சவாலான துறையில் துணிச்சலாக செயல்பட்டு வரும் இவர் ஒரு வழக்கறிஞரும் கூட. துப்பறிவாளராக தான் கடந்து வந்த பாதை குறித்தும், தனது துறை சார்ந்த தகவல்களையும் நம்மிடம் விரிவாகப் பகிர்ந்த நேர்காணல் இது.

‘டிடெக்டிவ் யாஸ்மின்’ என்று அழைக்கப்படுகிறீர்கள். இந்த இடத்தை எப்படி அடைந்தீர்கள்?

“ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதெல்லாம் சாதிக்க விரும்பும் பெண்களுக்கு அல்ல. ‘கல்யாணம் ஆகி குழந்தை குட்டி பெற்ற பிறகு குடும்பத்தைப் பாக்காமல், என்ன சாதனை வேண்டியிருக்கு?’ - இப்படிப் பேசும் ஆளுங்களை உங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், நான் டிகிரி முடித்தப்பின் தான் திருமணம் நடைபெற்றது. திருமண வாழ்க்கை, குழந்தை என்று ஓடிய வாழ்க்கையில் சராசரியான வாழ்க்கையை எவ்வளவு நாள் வாழ்ந்துக் கொண்டிருப்பது என்கிற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. அந்த நேரத்தில்தான் தினசரி நாளிதழில் வந்திருந்த டிடெக்டிவ் விளம்பரம் ஒன்று என் கண்ணில் பட்டது. அப்போதுதான் எனக்கு துப்பறியும் துறையென்று ஒன்று இருப்பதே தெரியும். அதனைப் பார்த்ததும் ஏனோ எனக்கு துப்பறியும் துறையில் ஒரு நாட்டம் ஏற்பட்டது.

இந்த துறை பெண்பிள்ளைகளுக்கு பாதுகாப்பற்ற துறை என்கிற ரீதியில் என் குடும்பத்தினர் முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை. பேசி மன்றாடித்தான் அனுமதி வாங்கி, பின் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தைத் தேடிப் பிடித்துப் பயிற்சி எடுத்தேன். அங்கும் பெண் பிள்ளைகளுக்கான தனித்துவ இடம் உடனே கிடைத்துவிடவில்லை. அங்கு நிலவிய அதிகாரமிக்க ஆணாதிக்கம் எரிச்சல் மூட்டியதால் நானே தனியாக டிடெக்டிவ் நிறுவனத்தைத் தொடங்கினேன்.

இன்று என்னிடம் 100-க்கும் மேற்பட்டப் பகுதிநேர டிடெக்டிவ் பணியாளர்கள் உள்ளனர். என் மகளுக்குப் பத்து வயது இருக்கும்போதுதான் நான் இந்த துறைக்குள் வந்தேன். அதனால், சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வயது ஒரு தடையில்லை. ஏன், குடும்பம் கூட தடை இல்லை. ஆனால் மனதில்தான் தடை வரக் கூடாது. இப்படியாகத்தான் நான் இந்த இடத்தை அடைந்தேன்.”



உங்களுடைய படிப்பு, குடும்பம் பற்றி...

“பெரிய அரசியல் பின்புலமோ, கல்வி மற்றும் பொருளாதாரத்தில் சிறப்பான பக்கபலம் கொண்ட குடும்பமோ அல்ல என்னுடையது. சாதாரண நடுத்தர, கட்டுப்பாடுகள் மிகுந்த இஸ்லாமியக் குடும்பம். இரு அண்ணன்கள், ஓர் அக்கா, ஒரு தங்கையுடன் வளர்ந்தவள். அதிகமான படிப்பு பெண்ணுக்கு எதற்கு என்று கல்வியை நிறுத்திவிட்டார்கள். அதன்பிறகு நான் போராடித்தான் மேற்கொண்டு படித்தேன். கல்லூரிச் செலவுக்குப் பணம் கேட்டால் அதைக் காரணம் காட்டி படிப்பு தடைபட்டுவிடுமோ என்றுகூட பயந்து அதனையும் நானே டியூஷன் எடுத்துச் சம்பாதித்து என் கல்லூரிப் படிப்பை முடித்தேன். இளங்கலை பொலிட்டிகல் சயின்ஸ் படித்து முடித்தேன். இந்த டிடெக்டிவ் பணியில் வழக்குரைஞர்களின் உதவி அடிக்கடி தேவைப்பட்டதால், நானே மேலும் வழக்கறிஞருக்குப் படித்து வழக்கறிஞராகவும் பதிவு செய்திருக்கிறேன். ”

நீங்கள் துப்புத் துலக்கும் விஷயங்கள் மற்றும் எந்த மாதிரியான விஷயங்களுக்கு மக்கள் உங்களை அணுகுகிறார்கள்?

“வாழ்வின் தொடக்கமான கல்யாணத்திலிருந்து வாழ்வின் முடிவான மரணம் வரை மக்கள் எங்களை அணுகுகிறார்கள். முன்பெல்லாம் ஜாதகப் பொருத்தம் பார்த்துத் திருமணங்கள் நடக்கும். ஆனால், அதில் பல திருமணங்கள் விவகாரத்தில் முடிந்திருக்கும் அல்லது சமூகத்துக்குப் பயந்து சகித்துக் கொண்டு வாழ்வர். ஆக, திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் மட்டும் போதாது. திருமணத்துக்கு முன், வேலை, வீடு, சொத்து போன்றவற்றில் பொய் சொல்லியிருப்பார்கள் மற்றும் காதல் தொடர்பு அல்லது அவர்கள் மீது இருக்கும் போலீஸ் கேஸ் போன்றவை எல்லாம் மறைக்கப்பட்டு இருக்கும். இந்த மாதிரியான தகவல்களை எல்லாம் டிடெக்டிவ் கண்டறிய முடியும். லட்சக்கணக்கில் செலவு செய்துவிட்டுப் பிறகு மாட்டிக்கொண்டு முழிக்காமல் இருக்க பிரைவேட் டிடெக்டிவ்வை அணுகுகிறார்கள்.

ஒரு நபரை கம்பெனியில் வேலையில் சேர்த்துக்கொள்ள, அவர் எப்படி என்று ஆராய, ஒரு நபருக்குப் பெரிய அளவில் கடன் கொடுக்க, அவருக்குத் திருப்பிச் செலுத்தும் தகுதி உள்ளதா என ஆராய என்றும் மக்கள் எங்களிடம் வருகிறார்கள். வீட்டில் அல்லது கம்பெனியில் நடக்கும் உள்விவகாரங்களை, குடும்ப சிக்கல்களை ஆராய, வேவு பார்க்கத்தான் டிடெக்டிவ்.”

அச்சுறுத்தல்களை எப்படிக் கையாள்கிறீர்கள்? எதிர்கொள்கிறீர்கள்?

“எந்த வெற்றியும் சும்மா வந்துவிடாது. டிடெக்டிவ் கேஸ் பார்க்கும்போது நடு இரவில் தொலைபேசியில் மிரட்டல் வரும். ரோட்டில் கூட நம் எதிரிகள் நம்மை பின்தொடர்வார்கள். அலுவலகம் வந்து ரவுடிகள் மிரட்டிவிட்டுச் சென்ற அனுபவங்களும் உண்டு. நான் அதுக்கெல்லாம் பயந்துவிடவில்லை. “துணிவே துணை” என்று எழுத்தாளர் தமிழ்வாணன் சொன்னது நமக்கானது தான். குடும்பத்துடன் ஒரு சினிமாவுக்கு போய் இருப்போம், உள்ளே நுழைந்ததும் கிளைன்ட் அல்லது டிடெக்டிவ்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வரும். அதன்பிறகு படம் எப்படி பார்க்க, தியேட்டரை விட்டு வெளியே போய்விடுவேன். இப்படி சில தனிப்பட்ட விருப்பங்களை நம் தொழிலில் நிறைவேற்ற முடியாது.

காலை ஆறு மணிக்கு எழுந்து வீட்டு வேலைகள் செய்து முடித்துக் கிளம்பினால் எப்பொழுது முடியும் என்று நேரம் குறிப்பிட முடியாத பணி. எப்பவும் என்னை உற்சாகமாக வைத்துக்கொள்வேன். சமையலோ, மற்ற வீட்டு வேலைகளோ, டிடெக்டிவ் பணியோ எதுவாக இருந்தாலும் நான் ரசித்துச் செய்கிறேன். அது என்னை மகிழ்ச்சியாகத்தான் வைத்திருக்கிறது.”



வேலையில் நீங்கள் சந்தித்த சவால்கள்?

உதாரணத்துக்கு, ஒருவர் பற்றி ஆராய்கிறோம், தகவல் ஐடி எல்லாம் சென்னை என்று காட்டும்; ஆனால் ஆள் ஆந்திராவில் ஏதேனும் ஒரு கிராமத்தில் இருப்பார். நாம் அங்கு போய்த்தான் ஆகவேண்டும். அதனை நேரிடையாக ஊர்ஜிதப்படுத்தவேண்டும். ஆக, திட்டமிடாத அறிமுகமில்லாத பாஷை தெரியாத இடத்துக்கு, குற்றவாளிகளைத் தேடிப் பயணம் செய்வது என்பது ஒரு பெண்ணுக்கு பெரும் சவால் தான்.

நாம் ஒரு குற்றவாளியின் கேஸை ஆராய்ந்து, இறங்கி வேலை பார்ப்போம். அந்த குற்றவாளிக்கு நாம் ஆள் மாற்றிப் பெயர் மாற்றி வேறு மொபைல் எண்ணிலிருந்து பேசி இருந்திருப்போம். அதேநேரத்தில் அந்தக் குற்றவாளி ஏதேனும் சிக்கலில் மாட்டினாலோ போலீஸில் மாட்டினாலோ அல்லது அவரது எதிராளிகளால் இறந்தாலோ அந்த கேஸில் அவருக்குப் போன் செய்த நம்முடைய எண்ணும் கூடவே சேர்ந்து மாட்டிய சம்பவங்களும் நடந்திருக்கிறது. நாம் யார் என்று தெரியபடுத்தி அந்த முடிச்சிலிருந்து நம்மை அவிழ்த்து வருவதற்குள் பெரும்பாடாகிப் போய்விடும்.

நம்மிடம் பணம் கட்டி கேஸ் கொடுத்தவரே, ஒரு கட்டத்துல சம்பந்தப்பட்டவரிடம், “உங்களைப் பற்றி எல்லா விஷயமும் தெரியும்” என்று சம்பந்தப்பட்டவரிடம் சொல்லிவிட்டாலும் நேரா அவர் வந்து என்னை மிரட்டி சென்ற செயல்களும் நடந்திருக்கின்றது. மொத்தத்தில் இது மாதச் சம்பள வேலை இல்லை. இதுவே பெரிய சவால்தான். பொருளாதாரம் சார்ந்த அழுத்தம் மற்றும் நம்முடைய பாதுகாப்பு உள்பட சில விஷயங்களை எதிர்கொள்ளும் பட்சத்தில் தினமும் கத்தி மேல் நடக்கும் வேலை தான் இது.”

தைரியத்தை வளர்த்துக்கொள்ள பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

“நான் தனித்துவமானவள். பத்தோடு பதினொன்று அல்ல என்று ஒவ்வொரு பெண்ணும் தன்னை நம்பவேண்டும். நீங்கள் எதைச் செய்தாலும் அதில் ஓரு வித்தியாசமான பார்வையை வைத்துக்கொள்ள வேண்டும். எந்த விஷயத்தைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் நம்மை முழுமையாகத் தயார் செய்துகொள்ள வேண்டும். ஏதாவது ஒரு தற்காப்புக் கலையினை அவசியம் கற்றுகொள்ள வேண்டும். பெரும்பாலும் எந்தவொரு வேலையினையும் ஆண்களின் துணையில்லாமல் செய்ய பழக வேண்டும். பெரும்பாலும் யாரையும் சாராது இருந்தாலே மனதிற்கு தைரியம் தானாக வந்துவிடும்.”

மகளிர் தினச் செய்தியாக...

“முயற்சியும் பயிற்சியும் இருந்தால் யாரும் எதையும் சாதிக்கலாம். சாதனைக்குப் பாலின பேதம் கிடையாது. ஆனால், ஆண்களால் உருவாக்கப்பட்ட இந்த சமூகத்தில் பெண்களுக்கு இரண்டாம் இடம்தான். எனவே நாம் முதலிடத்திற்கு வர வேண்டும் என்றால், நான் ஒரு பெண் என்கிற பொதுப்புத்தியை உடைத்துக்கொண்டு வெளியே வாருங்கள். எப்பவும் ஆணையே சார்ந்திருக்க வேண்டும் என்ற அப்ஸ்ட்ராக் ஆர்டர் யுக்தியை உதறித்தள்ளுங்கள். எப்பொழுது பெண்ணாக இருக்கவேண்டுமோ அப்பொழுது இருந்தால் போதும். மற்றபடி சாதிப்பதற்கு, சூழல்கள் ஒரு தடையே அல்ல. முக்கியமாக உங்களை நம்புங்கள்.”

- தொடர்புக்கு: gandhiraja.g@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

4 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

19 days ago

வாழ்வியல்

20 days ago

வாழ்வியல்

20 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

1 month ago

மேலும்