இன்றைய தேதிக்கு கிரிக்கெட்டின் நம்பர் ஒன் வீரரும் நம்பர் ஒன் கேப்டனும் விராட் கோலிதான். ஒரு புறம் பேட்டிங்கிலும் இன்னொரு புறம் கேப்டன் பதவியிலும் நேர்த்தியாக இரட்டைச் சவாரிசெய்துகொண்டிருக்கிறார். மூன்று விதமான போட்டிகளிலும் வீரராகவும் கேப்டனாகவும் முத்திரை பதித்து, உலக கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் ராஜாவாக வலம்வந்துகொண்டிருக்கிறார். ஆனால், இந்த வெற்றியும் அதிரடி ஆட்டமும் உள்நாட்டிலும் பலவீனமான எதிரணி பந்துவீச்சாளர்கள் மூலமாகவே விராட் கோலிக்குக் கிடைத்திருப்பதாக எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கவும் செய்திருக்கின்றன.
ஜொலிக்கும் கோலி
சர்வதேச கிரிக்கெட்டில் 2008-ம் ஆண்டில் அறிமுகமான நாளிலிருந்து டெஸ்ட், ஒரு நாள் போட்டிகள் என இரண்டையும் சேர்த்து 45 சதங்கள் விளாசி, ஜெட் வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறார் விராட் கோலி. 191 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 8,331 ரன்களைக் குவித்து, குறைந்த போட்டியில் அதிக ரன்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார். டெஸ்ட் தொடராக இருந்தாலும் சரி, ஒரு நாள் தொடராக இருந்தாலும் சரி, எந்தத் தொடரிலும் கோலியின் சதம் இல்லாமல் அந்தத் தொடர் நிறைவு பெற்றதில்லை. டெஸ்ட் போட்டியில் 50 ரன் என்ற சராசரியையும் ஒரு நாள் போட்டியில் 55 என்ற சராசரியையும் வைத்திருக்கும் வீரர் என விராட் கோலியின் சாதனைகள் சிலிர்க்கவைக்கின்றன.
வீரராகத்தான் ஜொலிக்கிறார் என்றால், கேப்டன் பதவியிலும் இதுவரை இந்திய கேப்டன்கள் செய்த சாதனைகளையெல்லாம் சர்வ சாதாரணமாகக் கடந்துகொண்டிருக்கிறார். இதுவரை 29 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து அதில் 19 வெற்றி, 3 தோல்வி, 7 டிரா என 64.29 சதவீத வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார். ஒரு நாள் போட்டியிலோ வெற்றி சதவீதம் இன்னும் அதிகம்.
இதுவரை 33 போட்டிகளுக்கு (ஆகஸ்ட் 30 நிலவரப்படி) கேப்டனாக இருந்து 25 வெற்றி, 7 தோல்வி, 1 முடிவு இல்லை என 78.12 சதவீத வெற்றியுடன் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறார். விராட் கோலியின் தனிப்பட்ட சாதனையும் கேப்டன்சி சாதனையும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன என்பதுதான் உண்மை. வலிமைமிக்க அணிகளான ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற அணிகளின் தற்கால வீரர்கள் மற்றும் கேப்டன்களின் சாதனைகள், தன்னை நெருங்க முடியாத அளவுக்குத் தனிக்காட்டு ராஜாவாகப் பயணித்துக்கொண்டிருக்கிறார் கோலி.
சச்சினுக்கு இணையா?
விராட் கோலியின் வெற்றி பிரேக் இல்லாத வண்டியைப் போல் பயணித்துக்கொண்டிருப்பதை அனேக கிரிக்கெட் பிரியர்கள் அணுஅணுவாக ரசித்துக்கொண்டிருக்கும் வேளையில், “விராட் கோலியின் ஆட்டத்தை சச்சின், டிராவிட் போன்ற வீரர்களுடன் ஒப்பிட முடியாது” என்று அண்மையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் யூசுப் யோகானா பட்டாசைக் கொளுத்திப்பொட்டார். கோலியின் ஆட்டத்தைப் பார்த்த எதிரணிகளின் வயிற்றெரிச்சல் இது என நினைத்தால், அது தவறு. யோகானா சொன்ன விஷயத்தில் வீரியமான கருத்துகள் இருந்தன.
“சச்சின், டிராவிட் போன்ற வீரர்கள் கிளென் மெக்ராத், ஷேன் வார்ன், கர்ட்லி அம்புரோஸ், கார்ட்னி வால்ஷ், வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், சக்லைன் முஷ்டாக், முத்தையா முரளிதரன், ஆலன் டொனால்ட் போன்ற அச்சுறுத்தும் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு ரன்களைக் குவித்தனர். ஆனால், இப்போது அச்சுறுத்தக்கூடிய பந்துவீச்சாளர்கள் யாராவது இருக்கிறார்களா? சாதாரணப் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு ரன்களைக் குவிப்பது பெரிய விஷயமில்லையே” என்று தன் கருத்துக்குப் பலம் சேர்த்திருந்தார் யோகானா.
யூசுப் யோகானாவின் கருத்துப்படி பார்த்தால், இன்று உலகில் எந்த அணியிலும் அச்சுறுத்தக்கூடிய பந்துவீச்சாளர்கள் நிச்சயம் இல்லை. மேலும், பேட்ஸ்மேன்கள் விளாசி ரன்களைக் குவிக்கும் அளவுக்கு கிரிக்கெட் விதிமுறைகளும் மாற்றப்பட்டிருக்கின்றன என்ற உண்மையையும் மறுக்க முடியாது. ஆனால், இந்த அம்சங்கள் எல்லா அணிகளின் வீரர்களுக்குப் பொருந்தியும் மற்ற நாட்டு கிரிக்கெட்டர்கள் விராட் கோலி அளவுக்கு ஏன் ஜொலிக்கவில்லை என்ற கேள்வியையும் புறம் தள்ளிவிட முடியாது.
வெற்றிகரமான கேப்டனா?
விராட் கோலியின் தனிப்பட்ட ஆட்டத்தை இப்படி விமர்சிப்பதில் தவறில்லை என்று நினைத்த வேளையில் வெற்றிகரமான கேப்டன்சி பற்றியும் எதிர்கருத்துகள் வரத் தொடங்கியுள்ளன. விராட் கோலி உள்நாட்டில்தானே இந்த வெற்றிகளையெல்லாம் பெற்றார், பலவீனமான அணிகளைத்தானே விராட் கோலி வீழ்த்தினார் என்பது போன்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிகூட இதுபோன்றதொரு கருத்தை அண்மையில் உதிர்த்தார்.
“விராட் கோலி இன்னமும் சவாலுக்கு உட்படுத்தப்படவில்லை. கேப்டனாக அவர் இன்னமும் பரிசோதிக்கப்படவில்லை. வெஸ்ட்இண்டீஸ், இலங்கை போன்ற அணிகள் தற்போது வலுவாக இல்லை. 2018-ம் ஆண்டில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் விளையாட உள்ளது. அப்போது இந்திய அணி கோலி தலைமையில் எப்படிச் சிறப்பாக ஆடுகிறது என்பதுதான் கோலியின் கேப்டன்சிக்கான அளவுகோல்” என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் தொடர்ச்சியாக 13 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றன. இதில் 10 போட்டிகளில் கோலி அணி வெற்றிபெற்றது. மேலும் பலமிழந்த வெஸ்ட்இண்டீஸ், இலங்கைக்கு சென்று அந்த அணிகளை கோலி அணி வீழ்த்தியிருக்கிறது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற அணிகளை அந்த நாடுகளின் சொந்த மண்ணில் வீழ்த்த இந்திய அணி இதுவரை அல்லாடி இருக்கிறது.
அந்த வகையில் விராட் கோலியின் கேப்டன்சி வெற்றி ஆராதிக்கும் அளவுக்கு இருக்கிறதா என்பது இனிமேல்தான் தெரிய வரும். வெற்றிகரமான கேப்டனாக வலம்வந்த டோனிகூட இந்த நாடுகளில் வெற்றி பெற முடியாமல், கடைசியில் டெஸ்ட் கேப்டன் பதவியை உதறித்தள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த நாடுகளில் விளையாடும்போது இந்திய வீரர்கள் தடுமாறியும் இருக்கிறார்கள்.
அந்த வகையில் பார்த்தால் 2018-ம் ஆண்டு விராட் கோலியின் தனிப்பட்ட ஆட்டத்துக்கும் கேப்டன் பொறுப்புக்கும் அக்னிப் பரீட்சை காத்திருக்கிறது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
10 hours ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
14 days ago
வாழ்வியல்
16 days ago
வாழ்வியல்
16 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
29 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
1 month ago
வாழ்வியல்
1 month ago
வாழ்வியல்
1 month ago