திருக்குறளின் விளக்கங்கள் மக்களிடம் சென்று சேரவில்லை: நடிகர் சிவகுமார் பேச்சு

By செய்திப்பிரிவு

கோவை: திருக்குறளின் விளக்கங்கள் மக்களிடம் சென்று சேரவில்லை என கோவையில் நடந்த இலக்கிய திருவிழாவில் நடிகர் சிவகுமார் பேசினார்.

தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை மற்றும் பொதுநூலக இயக்ககம் சார்பில் சிறுவாணி இலக்கியத் திருவிழா கோவையில் நேற்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி விழாவை தொடங்கி வைத்தார். பொதுநூலக இயக்குநர் க.இளம்பகவத், எழுத்தாளர் பவா செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் திரைப்பட நடிகர் சிவகுமார் பேசியதாவது: உலகம் தோன்றிய காலத்தில் பூமி, தண்ணீர் அனைவருக்கும் பொதுவானதாக இருந்தது. அதன்பிறகு, அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியா என பூமியை கூறுபோட்டனர். அட்லாண்டிக், பசிபிக், இந்து மகா சமுத்திரம் என தண்ணீரும் பிரிக்கப்பட்டது.

உலகில் யார் பெரியவர்கள் என்ற போட்டியில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் பல நாடுகள் அடிமைப்பட்டிருந்தன. இதற்கெல்லாம் முன்பாக, நாட்டில் உள்ள அனைத்து ஊர்களும் என் ஊர் தான். நாட்டில் உள்ள அனைவரும் என் சொந்தங்கள் தான் என்று விளக்கும் படி, யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று பரந்த மனதுடன் பாடிச் சென்றுள்ளார் தமிழ்க்கவிஞர் கணியன் பூங்குன்றனார்.

திருக்குறளின் விளக்கங்கள் மக்களிடம் சென்று சேரவில்லை. தமிழாசிரியர் விளக்கம் கூறி, தெளிவாக சொல்லிக் கொடுத்து முன்பே படித்திருந்தால் மட்டுமே திருக்குறள் விளக்கங்கள் தெரிந்திருக்க முடியும். இதனால் தான் காமராஜர், அப்துல்கலாம், எம்ஜிஆர், சிவாஜி போன்ற ஆளுமைகளின் வாழ்வில் நடைபெற்ற உருக்கமான சம்பவங்களை சொல்லி அதற்கு பொருத்தமான திருக்குறளை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டேன்.

மூன்றரை ஆண்டுகள் இப்பணியில் ஈடுபட்டு கடந்தாண்டு ஓர் அரங்கத்தில் திருக்குறளுக்கு சம்பவங்களைக்கூறி விளக்கிப் பேசினேன். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து எழுத்தாளர்கள் எஸ்.வி.ராஜதுரை, நாஞ்சில் நாடன், த.ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்டோர் பேசினர். கோவை மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், பொது நூலக இணை இயக்குநர் செ.அமுதவல்லி, கல்லூரி கல்வி இணை இயக்குநர் கலைச்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE