மதுரை அருகே ஹோட்டல் உரிமையாளர்கள் இணைந்து நடத்திய முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழா

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி கிராமத்தில் ஹோட்டல் உரிமையாளர்கள் இணைந்து முனியாண்டி சுவாமி கோயிலில் பிரியாணி திருவிழா நடத்தி பல ஆயிரம் பேருக்கு பிரசாதமாக வழங்கினர்.

மதுரை திருமங்கலம் அருகே உள்ளது வடக்கம்பட்டி கிராமம். இங்குள்ள முனியாண்டி சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஹோட்டல் உரிமையாளர்கள் இணைந்து பிரியாணி திருவிழாவை நடத்தி வருகின்றனர். தை மாதம் 2-வது வெள்ளிக்கிழமையில் நாயுடு சமூகத்தினரும், மாசி மாதம் 2-வது வெள்ளிக் கிழமை ரெட்டியார் சமூகத்தினரும் இவ்விழாவை நடத்துவது வழக்கம்.

நேற்று முன்தினம் ரெட்டியார் சமூகத்தினரின் விழா நடந்தது. ஒரு வாரம் காப்புக் கட்டி விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து முனியாண்டி சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். அன்று மாலை தேங்காய், பழம், பூ தட்டுடன் ஏராளமான பெண்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.

சுவாமிக்கு நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட 150 ஆடுகள், 300-க்கும் அதிகமான கோழிகள் பலியிடப்பட்டன. இதை 2,500 கிலோ அரிசியை பயன்படுத்தி சமையல் கலைஞர்கள் மூலம் பல அண்டாக்களில் விடிய விடிய பிரியாணி தயாரிக்கப்பட்டது. பிரியாணியை முனியாண்டிக்கு படையலிட்டு நேற்று அதிகாலை சிறப்பு பூஜை நடந்தது.

பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக பிரியாணி வழங்கப்பட்டது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரம் பேர் இந்த பிரசாதத்தை பெற்றுச்சென்றனர். இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருவோர் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.

இதற்காக 2 நாட்கள் உணவகங்களுக்கு விடுமுறை விட்டிருந்தனர். விழாக் குழுவினர் கூறுகையில், ‘முனியாண்டி சுவாமியை ஆண்டுதோறும் வணங்கி பலர் வேண்டுதல் வைக்கின்றனர். அது நிறைவேறியதும் காணிக்கையாக ஆடு, கோழி மற்றும் நன்கொடைகளை வழங்குகின்றனர். உணவகங்களின் உரிமையாளர்கள் தினசரி வியாபாரத்தில் காணிக்கையாக எடுத்து வைக்கும் தொகையை அளிக்கின்றனர்.

இதை வைத்து பிரியாணி தயாரித்து அனைவருக்கும் வழங்குகிறோம். இளைஞர்கள் முன்னின்று விழாவை நடத்துகின்றனர். இந்த விழாவை பயன்படுத்தி எங்கள் உறவினர்களுக்குள் பெண் பார்க்கும் படலமும் நடைபெறும் என்று கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE