டிராமில் ஏறியும் போவோம்... - 150 ஆண்டுகளை நிறைவு செய்த கொல்கத்தா டிராம் சேவை!

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரில் பயன்பாட்டில் உள்ள டிராம் போக்குவரத்து சேவை 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தச் சூழலில் டிராம் சேவை கடந்து வந்த பாதையை பார்ப்போம். கொல்கத்தா மற்றும் இந்தியாவின் தனித்துவமிக்க அடையாளங்களில் ஒன்றாக இந்த டிராம் சேவை திகழ்கிறது.

சரியாக 150 ஆண்டுகளுக்கு முன்னதாக இதே நாளில் (பிப்.24) கடந்த 1873-ல் டிராம் சேவை கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இதனை நிறுவி இருந்தனர். சுலபமான போக்குவரத்துக்காக கொண்டுவரப்பட்ட சேவை இது. செல்வந்தர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழைகள் என அனைத்து தரப்பு மக்களுக்குமான போக்குவரத்து சேவையாக இது இருந்துள்ளது.

ஆரம்ப நாட்களில் டிராமை குதிரைகள் இழுத்துச் சென்றதாக தெரிகிறது. அப்படியே நீராவி மற்றும் மின்சாரத்தின் மூலம் டிராம் இயக்கம் பின்னாளில் உருமாறி உள்ளது. 1960-களில் 37 டிராம் வழித்தட சேவைகள் பயன்பாட்டில் இருந்துள்ளதாக தகவல். கால ஓட்டத்தில் படிப்படியாக அது குறைந்துள்ளது. நிதி நெருக்கடி, முறையாக பராமரிப்பு செய்யப்பாடாத ட்ராம்கள், குறைந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை, சாலை மேம்பாடு, கொல்கத்தா மெட்ரோ விரிவாக்கம், டிராமின் மிதமான வேகம் மற்றும் சாலையை அதிகளவு டிராம்கள் ஆக்கிரமித்து கொள்வது போன்ற காரணங்களால் இதன் சேவை மங்க காரணமாக சொல்லப்படுகிறது.

டிராம் சேவையின் தற்போதைய நிலை: கொல்கத்தாவில் டிராம் சேவை பயன்பாடு மெல்ல மெல்ல மங்கி வரும் இந்த நேரத்தில் 150 ஆண்டுகள் என்ற வரலாற்று சிறப்பு மிக்க மைல்கல்லை டிராம்கள் எட்டியுள்ளன. தற்போது நகரில் மூன்று வழித்தடங்களில் மட்டுமே டிராம் சேவை பயன்பாட்டில் உள்ளதாக தெரிகிறது. அதன் சேவை நேரம் கூட முறையற்றதாக இருக்கிறதாம். கடந்த 2017-க்கு முன்னர் வரையில் நகரில் சுமார் 25-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் டிராம்கள் இயங்கி வந்துள்ளன.

ஓட்டுநர் பற்றாக்குறை மற்றும் அரசின் மெத்தனப் போக்கும் இந்த சேவை பாதிக்கப்பட காரணமாக உள்ளன. உலக அளவில் சூழல் மாசு நிறைந்த கொல்கத்தா நகரில் சுற்றுச்சூழலுக்கு உகந்த டிராம் போக்குவரத்து சேவை, அழிவின் விளிம்பில் உள்ளதாக தெரிகிறது.

டிராம்களின் அளவு சாலையை ஆக்கிரமித்து விடுவதாகவும், அதன் இயக்கம் மெதுவாக இருப்பதாகவும் சொல்லப்படும் வாதங்கள் ஆராய்ச்சி அடிப்படையில் முன்வைக்கப்படும் கருத்துகள் இல்லை என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் டிராம் சேவை பயன்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE