“அதிகாரத்தைப் பெற பெண்கள் முன்னேற வேண்டும்” - மாலினி பார்த்தசாரதி

By செய்திப்பிரிவு

சென்னை: பெண்கள் தங்களுக்கான அதிகாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னேற வேண்டும் என்று இந்து குழுத்தின் தலைவர் மாலினி பார்த்தசாரதி வலியுறுத்தியுள்ளார்.

இந்திய பெண்கள் கூட்டமைப்பு (Indian Women Network) சார்பில் சென்னையில் நடைபெற்ற தென் பிராந்திய ஆண்டுக் கூட்டத்தில், இந்திய வளர்ச்சியில் அதிகரிக்கும் பெண்களுக்கான அதிகாரம் எனும் தலைப்பில் மாலினி பார்த்தசாரதி உரையாற்றினார். அதன் விவரம்: ''பெண்கள் பணிக்குச் செல்ல வேண்டும். கடையிலோ அல்லது தொழிற்சாலையிலோ பணி செய்வதற்கு பெண்கள் தயங்கக் கூடாது. அவ்வாறு பணிக்குச் செல்வதன் மூலம் சமூகத் தடைகள் உடைவதை பெண்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

பணியிடங்களில் பெண்கள் சமமாக நடத்தப்படுவதற்கு உள்ள உரிமைகளில் ஆணாதிக்க அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாத பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. பெண்கள் தங்களுக்கான கோரிக்கைகளை ஒன்றிணைந்து முன்வைப்பதில் உள்ளார்ந்த சில முரண்பாடுகள் இருக்கின்றன. நெகிழ்வான வேலை நேரம், மகப்பேறு விடுமுறை உள்ளிட்ட சலுகைகள் பெண்களுக்கு ஆதரவாக இருக்கின்றன. அதேநேரத்தில், அவை ஒருபோதும் பெண்கள் தங்கள் வேலையில் முன்னேறுவதற்கு தடையாக இருந்துவிடக் கூடாது.

உற்பத்தித் துறை, தொழில் துறை போன்றவற்றில் ஈடுபடுவதில் பெண்களுக்கு இயல்பாகவே ஒரு தயக்கம் இருக்கிறது. அந்த தயக்கத்தில் இருந்து அவர்கள் விடுபட வேண்டும். உற்பத்தித் துறையில் 2.73 கோடி பேர் பணியாற்றுகிறார்கள். ஆனால், இதில் பெண்களின் பங்கு வெறும் 12 சதவீதம் மட்டுமே. எனினும், நிலைமை முற்றிலும் இருண்டதாக இருக்கவில்லை.

பெண்கள் முன்னேறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சென்னையில் பெண் ஒருவர் மேயராகி இருக்கிறார். தற்போது டெல்லியிலும் பெண் ஒருவர் மேயராகி இருக்கிறார். மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன'' என்று மாலினி பார்த்தசாரதி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE