பேரிடர் பாதிப்பு | துருக்கி, சிரியாவுக்கு அண்ணாநகர் மஸ்ஜித் ஜாவித் சார்பில் நிவாரண உதவி

By செய்திப்பிரிவு

சென்னை: பூகம்ப பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அண்ணாநகர் மஸ்ஜித் ஜாவித் அமைப்பின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

சமீபத்தில் துருக்கியிலும் சிரியாவிலும் ஏற்பட்ட பூகம்பங்கள் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொண்டன. பலர் தங்கள் சொந்தங்களையும் பந்தங்களையும் சொத்துக்களையும் சுகங்களையும் வீடுகளையும் இழந்து உறைபனியில் திக்கற்று திகைத்து நின்று கொண்டுள்ளனர்.

இந்த சோகம் பலரையும் பாதித்து உலகையே ஸ்தம்பிக்க வைத்து விட்டது. சிறார்கள் முதல் பெரியோர்கள் வரை எல்லோருமே பாதிக்கப்பட்டுள்ளனர். எத்தனையோ குழந்தைகள் ஆதரவற்றவர்களாக மாறியுள்ளன. எத்தனையோ பெண்கள், ஆண்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் சோகத்தில் பங்கேற்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மஸ்ஜித் ஜாவித் முஹல்லாவைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து பேரிடர் நிவாரண நிதியை திரட்டினர்.

சென்னை அண்ணா நகர்,மஸ்ஜித் ஜாவித் மூலம் கிட்டத்தட்ட ரூ. 20 லட்சம் மதிப்பிலான போர்வை, ஜெனரேட்டர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை முதல் தவணையாக அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னையில் உள்ள துருக்கி கார்கோ வேர் ஹவுஸைச் சேர்ந்த உமர் ஓசரைச் சந்தித்து நிவாரண பொருட்களை, அண்ணாநகர் மஸ்ஜித் ஜாவித் அமைப்பின் தலைவர் எல்.கே.எஸ். செய்யது அஹ்மது, செயலாளர் மு முஹம்மது யூசுப் அமீன் ஆகியோர் திங்கட்கிழமை ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE