சிறப்பு தேவை குழந்தைகளுக்கு இலவச முடிதிருத்தும் சேவை: வேலூரில் முடிதிருத்தும் தொழிலாளிக்கு குவியும் பாராட்டு

By செய்திப்பிரிவு

வேலூர்: வேலூரில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜா என்பவர் இலவசமாக முடி திருத்தம் செய்யும் பணியை சேவையாக செய்து வருவது பலரது பாராட்டை பெற்றுள்ளது.

சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள், சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகள் மீது கூடுதல் அக்கறையும் பராமரிப்பும் 24 மணி நேரமும் தேவைப்படுகிறது. அவர்களுக்கான மனப்பூர்வ ஆதரவை அளிப்பவர்கள் மிகவும் குறைவானவர்களே என்று கூறலாம்.

அந்த வகையில், வேலூர் பெரிய அல்லாபுரத்தில் உள்ள ஜெயம் முடி திருத்தும் கடையில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகள், 75 சதவீதத்துக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக முடி திருத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறார் ராஜா.

வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த 40 வயதான ராஜாவின் தந்தை ராமலிங்கம் என்பவர் வேலூர் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக முடி திருத்தும் கடை நடத்தி வருகிறார். தந்தையின் கடை பக்கம் போகாத ராஜா, பிளஸ் 2 படிப்பை முடித்ததும் சென்னையில் பிரபல முடி திருத்தும் கடையான நுங்கம்பாக்கம் ரமேஷ் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

சினிமா நடிகர்கள் அதிகம் வந்து செல்லும் அந்த கடையில் எப்படியாவது நடிகர்களுக்கு முடி வெட்ட வேண்டும் என்பதுதான் ராஜாவின் வாழ்நாள் கனவாக இருந்தது. ஆனால், அவரது கனவுக்கான தொலைவு நீளமானது என்பதை காலப்போக்கில் ராஜா உணர்ந்து கொண்டார். அங்கிருந்தபடியே தொண்டு இல்லங்களில் பராமரிக்கப்படும் பார்வையற்ற மாணவர்களுக்கு இலவசமாக முடி திருத்தம் செய்யும் பணியை ஆர்வத்துடன் செய்ய தொடங்கினார்.

இப்படியே 10 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் 2017-ம் ஆண்டு வேலூர் திரும்பியதும் தந்தைக்கு உதவியாக முடி திருத்தும் பணியை செய்துவந்தவர், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவசமாக முடி திருத்தும் பணியை தொடர்ந்துள்ளார். ‘‘தந்தையிடம் தொழிலை கற்காமல் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இதனால், அவர்கள் மீது எனக்கு எப்பவும் தனி பாசம் இருக்கும். அவர்களால்தான் எனக்கு முடி திருத்தும் செய்யும் தொழிலே தெரிந்துகொண்டேன்.

அவர்களை எப்போதும் விட்டுவிடக்கூடாது என்பதற்காக அவர்களை தேடிச்சென்று இலவசமாக முடி திருத்தம் செய்து வந்தேன்’’ என்றார் ராஜா. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அல்லாபுரத்தில் சொந்தமாக சலூன் கடையை திறந்தவர் இலவசமாக முடி திருத்தும் பணியை மனத் திருப்தியுடன் மீண்டும் தொடங்கியது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

‘‘இந்தப் பணி எப்போதும் தொடரும்’’ என்கிறார் ராஜா. ‘‘சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகள் மிகவும் கவனிக்க வேண்டியவர்கள். ஒன்றரை மாதங்களுக்கு ஒருமுறையாவது எனது கடைக்கு வந்து கண்டிப்பாக முடி திருத்தம் செய்து கொண்டு திரும்பும்போது அந்த குழந்தைகளின் அழகை பார்க்கவே ரசிக்கும்படியாக இருக்கும்’’ என்றார்.

மாற்றுத்திறனாளிகள், சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கு இலவச முடி திருத்தம் என்பது சிறிய பணியாக இருந்தாலும், அது தேவையானவர்களுக்கு ராஜா போன்றவர்களின் கருணை உள்ளங்களால் கிடைப்பது மகிழ்ச்சியே!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE