வேளாண் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரிப்பால் களையிழந்த கிருஷ்ணகிரி கால்நடை சந்தை

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: உழவுத் தொழிலில் இயந்திரங்கள்பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், தைப்பூச திருவிழாவின்போது, கிருஷ்ணகிரியில் நடைபெறும் கால்நடை சந்தையில் மாடுகள் வரத்துக் குறைவால் களையிழந்தது.

கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவையொட்டி, 7 நாட்கள் மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.

வெளிமாநில வியாபாரிகள்: சந்தையில், மாடுகளை வாங்கவும், விற்பனை செய்யவும்தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களி லிருந்தும், கர்நாடக, ஆந்திர மாநிலங்களிலிருந்தும் ஏராளமான வியாபாரிகளும், விவசாயிகளும் வருவது வழக்கம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இச்சந்தையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டின மாடுகள் விற்பனை நடைபெற்றது.

மேலும், சந்தையில் இடம் கிடைக்காமல், கோயில் அருகே உள்ள தோட்டங்களிலும், சாலைகளிலும் கால்நடைகளை வியாபாரிகள் விற்பனை செய்வர்.

மாட்டு வண்டி: இந்நிலையில், நிகழாண்டில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, கடந்த 5-ம் தேதி சந்தை தொடங்கியது. இதில், குறைந்தளவு மாடுகளே விற்பனைக்கு வந்துள்ளன. வேளாண் தொழிலில் உழவுப் பணி, மாட்டுவண்டி பயன்பாட்டில் இயந்திரங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், கால்நடைகள் தேவை குறைந்து பாரம்பரியத்தை இழப்பதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.

உள்ளூர் மாடுகள் - இது தொடர்பாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறியதாவது: கரோனா காரணமாகக் கடந்த 2 ஆண்டுகள் தைப்பூசத்தில் சந்தை நடைபெறவில்லை. தற்போது நடைபெறும் சந்தையில் இதுவரை (3 நாட்கள்) உள்ளூர் மாடுகள் 500 விற்பனைக்கு வந்தன. ஒரு மாடு ரூ.25 ஆயிரத்திலிருந்து அதிகபட்சம் ரூ.45 ஆயிரம் வரை விலை போகிறது.

குறிப்பாக உழவுக்கு இயந்திரங்கள் பயன்பாடு அதிகரித்து உள்ளதால், மாடுகள் மூலம் உழவு பணிகள் மேற்கொள்வது மிகவும் அரிதாகிவிட்டது. அரசும் வேளாண் இயந்திர பயன்பாட்டை ஊக்குவிக்கிறது.

கேரளா வியாபாரிகள் ஆர்வம்: இதேபோல, விவசாயப் பணி மற்றும் செங்கல், மணல் உள்ளிட்ட குறைந்த பாரங்களை ஏற்றிச் செல்லும் மாட்டுவண்டிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால், ஒரு கிராமத்தில் ஒரு மாட்டுவண்டி இருப்பதே அரிதாக உள்ளது. மேலும், எருது விடும் விழா, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தேவைக்கு மட்டுமே நாட்டின மாடுகளைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய சந்தையில் அதிகளவில் கேரளா வியாபாரிகள் மாடுகளை வாங்கிச் சென்று நாட்டினமாடுகளை பல்வேறு போட்டிகளில் பங்கேற்க பயிற்சி அளிக்கின்றனர்.

இதேபோல, திருவண்ணாமலை, சேலம் பகுதிகளிலிருந்து விவசாயப் பணிகளுக்காக 10 மாடுகளை விவசாயிகள் வாங்கிச் சென்றனர்.

அரசுக்குக் கோரிக்கை: சந்தைக்கு, உள்ளூர் மாடுகள்மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளதால், வழக்கமான பரபரப்பின்றி சந்தை களையிழந்து காணப் படுகிறது. எனவே, நாட்டின மாடுகள் வளர்ப்பை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாட்டு வண்டிகளில் பாரம் ஏற்றிச் செல்ல விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, நமது பாரம்பரியத்தைக் காக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE