90ஸ் ரீவைண்ட்: வீடியோ டெக்கும் கேசட்டும்

By டாக்டர் வி.விக்ரம்குமார்

டெக்கும் வீடியோ கேசட்டும் பலரைப் பால்ய காலத்திற்கு நிச்சயம் அழைத்துச் செல்லும் அக்காலப் பொக்கிஷங்கள். 80, 90களில் திரையரங்கங்களில் பார்க்கத் தவறிய படங்களை, அடுத்த சில மாதங்களில் பார்ப்பதற்கான வாய்ப்பினை அவை மட்டுமே கொடுத்தன.

தூர்தர்ஷனில் திரைப்படங்கள் வெளியாகப் பல ஆண்டுகள் பிடிக்கும். ஆனால், நமக்குப் பிடித்த நாயகர்களின் படங்களைக் குடும்பத்தோடு சில மாதங்களிலேயே பார்ப்பதற்கு அவை உதவின.

வீடியோ கேசட் கடைகள்

அக்காலத்தில் வீடியோ கேசட், டெக் செட்களை வாடகைக்கு விடும் கடைகள் ஏராளம் இருந்தன; அப்போதைய முக்கியமான தொழிலும் அதுவே. பண்டிகை நாட்களில் டெக் கடைகளில் கூட்டம் அலை மோதும். திரையரங்கத்திற்கு அடுத்த படியாகக் கூட்டம் முட்டிமோதும் இடம் இதுதானோ என்று சிறுவனாக இருந்த போது நான் நினைத்ததுண்டு!

நோட்டுப் புத்தகத்தில் கடைக்காரர் எழுதி வைத்திருக்கும் கேசட்டுகளின் குறிப்பைப் பார்த்து படங்களைத் தேர்ந்தெடுப்போம். பிரபலமான எம்.ஜி.ஆர், சிவாஜி கால திரைப்படங்கள், ரஜினி, கமல் திரைப்படங்கள், அப்போதைக்கு வெளியான திரைப்படங்கள் எனக் கலந்துகட்டி பல கேசட்டுகளை வீட்டுக்கு வாங்கிச் செல்வதுண்டு. அதிலும் டாம் அண்ட் ஜெர்ரி வீடியோ கேசட்டுகள் சிறுவர்களிடம் மிகப் பிரபலம்.

தொலைக்காட்சிப் பெட்டிகள்

கடையில் ஒட்டப்பட்டிருக்கும் திரைப்பட விளம்பரப் படங்கள், கேசட்டுகளை வாங்கத் தூண்டும். குடும்பம் சகிதமாக டெக் கடைக்குச் சென்று, திரைப்படக் கேசட்டுகளைத் தேர்வு செய்த நாட்கள் பல இருக்கின்றன. பல கடைகளில் டெக் செட்டுகளோடு தொலைக்காட்சிப் பெட்டிகளையும் வாடகைக்கு விடுவார்கள். அதில் பிளாக் அண்ட் வொயிட் தொலைக்காட்சிப் பெட்டிகளும் கலர் பெட்டிகளும் வெவ்வேறு வாடகைகளில் கிடைக்கும். பல குடும்பங்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் கலர் தொலைக்காட்சிப் பெட்டிகளை வாடகைக்கு எடுத்து திரைப்படங்களை ரசிப்பதும் நடக்கும். அதில் எங்கள் குடும்பமும் ஒன்று. திருவிழா நாட்களில் உறவுகள் ஒன்று கூடினால் திரைக்கொண்டாட்டம் தான்.

கேசட்டுக்குப் போட்டோ போட்டி

சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்பட கேசட்டுகளைக் கேட்கும் போது, ‘அது புதுப்படங்க… இப்போ தான் அவங்க வாங்கிட்டுப் போனாங்க… அஞ்சு மணிக்கு வந்து வாங்கிக்கோங்க…’ எனப் பல நேரங்களில் கடைக்காரர் சொல்வதுண்டு. அதிலும் நல்ல படமாக இருந்தால் இரு முறை பார்த்து ரசித்து குறிப்பிட்ட அவகாசத்தில் கொடுக்காமல் நேரம் கடத்துபவர்களும் உண்டு.

யார் வீட்டில் அந்தக் கேசட் இருக்கிறது எனத் தெரிந்தால், அவர்களின் வீடுகளுக்கே விஜயம் செய்து, காத்துக் கிடந்த நாட்கள் பல. கடைக்காரர்களே வீடுகளுக்குச் சென்று, ‘டைமுக்குத் தரலைனா அடுத்த முறை கேசட் தரமாட்டோம்ங்க….’ எனச் செல்லமாக மிரட்டல் விடுவார்கள். கேசட்டுகளுக்காக முன்பதிவு நடப்பதும் உண்டு. குறிப்பிட்ட நேரத்தில் கேசட் தராமல் போனால் சண்டை போடும் வாடிக்கையாளர்களைச் சமாளிப்பது கடைக்காரர்களுக்குப் பெரும்பாடாகிவிடும். முன்பதிவு செய்த கேசட்டுகளுக்கு மாற்றாக வேறு திரைப்பட கேசட்டுகளை இலவசமாக வழங்கும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெறும்.

நில்லாமல் ஓடும் திரைப்படங்கள்

மொத்தமாக நிறைய கேசட்டுகள் கிடைத்துவிட்டால், நேரம் காலம் பார்க்காமல் வீட்டில் திரைப்படங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். பகலில் ஓடும் மூன்று காட்சிகளைத் தாண்டி, இரவில் மட்டுமே இடைவிடாமல் நான்கு காட்சிகளைப் பார்த்துக் குதூகலித்த நாட்கள் பல உண்டு. சனிக்கிழமை மாலை தொடங்கி, ஞாயிறு இரவு வரை திரைப்படங்களை அசராமல் பார்த்து மகிழ்ந்த நாட்கள், கூட்டுக் குடும்ப நாட்களை நினைவுபடுத்துபவை. பாட்டிக்குப் பிடித்த திரைப்படம், சிறுவர்களுக்குப் பிடித்த திரைப்படம், அத்தைக்குப் பிடித்த திரைப்படம் என விருப்பத்திற்கு ஏற்ப சுற்று ரீதியில் படங்கள் ஒளிபரப்பாகும். பலரது வீட்டு வரவேற்பறைகள் குட்டித் திரையரங்குகளாக உருமாறும். வேட்டி, பெட்ஷீட், சேலை போன்ற வீட்டில் கிடைக்கும் பொருட்கள், சாளரங்களிலும் கதவுகளிலும் தொங்கி வெளிச்சத்தைக் குறைத்து தியேட்டர் எஃபக்ட்டைக் கொடுக்க உதவும்.

வரலாறாக மாறிய டெக்குகள்

தூர்தர்ஷனைத் தாண்டி தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் மெல்ல மெல்ல வீடுகளுக்குள் நுழைய ஆரம்பித்த உடன் டெக் செட்டுகளின் விற்பனை சரிய ஆரம்பித்தன; டெக் செட்டுகளின் காலம் வரலாறாக மாறத் தொடங்கியது! இன்றும் கூட பழைய டெக் செட்டை அப்படியே வைத்திருக்கும் கடைகளைப் பார்த்திருக்கிறேன். தங்களுக்கு வாழ்க்கை கொடுத்த டெக் செட்டைத் தெய்வமாக வணங்கும் இப்போதைய வீடியோ கடைக்காரர்களை நானறிவேன்.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE