வாழையில் ஊடுபயிராக சின்ன வெங்காயம்: பர்கூர் பகுதி விவசாயிகள் ஆர்வம்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: பர்கூர் பகுதியில் வாழையில் ஊடுபயிராக சின்ன வெங்காயம் நடவு செய்யும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், வேப்பனப்பள்ளி, தேன்கனிக் கோட்டை, தளி, உத்தனப்பள்ளி, கெலமங்கலம், கிருஷ்ணகிரி, பர்கூர், போச்சம்பள்ளி, சந்தூர்,மத்தூர் ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

15 ஆயிரம் டன் வாழைப்பழம்: இதன் மூலம் ஆண்டுக்கு 15 ஆயிரம் டன் வாழைப்பழம் கிடைக்கிறது. இவை வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்குச் செல்கின்றன. தற்போது, பர்கூர் பகுதி விவசாயிகள் வாழையில் ஊடுபயிராக சின்ன வெங்காயம் நடவு செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 150 ஹெக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. சின்ன வெங்காயத்துக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சந்தைகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால், மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தை நேரடியாகவும், சிலர் ஊடுபயிராகவும் சாகுபடி செய்து வருகின்றனர்.

நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: பர்கூர் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், இப்பகுதியில் வாழையில் 2 மாதப் பயிரான சின்ன வெங்காயத்தையும் சாகுபடி செய்கிறோம். வாழைக்குப் பாய்ச்சும் தண்ணீர், உரம் மற்றும் பூச்சி மருந்து உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் சின்ன வெங்காயத்துக்கும் கிடைப்பதால், ஒரே செலவில் 2 பயிர்களையும் பராமரிக்க முடிகிறது.

இதனால் உற்பத்தி செலவு குறைகிறது. சாகுபடி செய்யப்படும் சின்னவெங்காயம், எங்களது தேவைக்குப்போக, உள்ளூர் சந்தையிலும், மளிகைக் கடைகளிலும் நேரடியாக விற்பனை செய்கிறோம். இதனால், ஓரளவுக்கு வருவாய் கிடைக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். வாழைக்குப் பாய்ச்சும் தண்ணீர், உரம் உள்ளிட்டவை வெங்காயத்துக்கும் கிடைப்பதால், ஒரே செலவில் 2 பயிர்களையும் பராமரிக்க முடிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE