விருதுநகர் | தனி ஒருவராக போட்டித் தேர்வுக்கு இலவச வகுப்பு எடுக்கும் வட்டாட்சியர் - மதிய உணவு திட்டத்தையும் தொடங்கினார்

By இ.மணிகண்டன்

விருதுநகர்: கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த விருதுநகரில் தனி ஒருவராக கடந்த 17 ஆண்டுகளாக போட்டித் தேர்வுகளுக்கு இலவச வகுப்பு நடத்தி சுமார் 10 ஆயிரம் பேரை அரசு ஊழியர்களாக மாற்றியுள்ளார் வட்டாட்சியர் மாரிமுத்து (56).

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், படித்து பட்டம் பெற்று அரசு ஊழியராக வேண்டும் என்ற குறிக்கோளோடு போட்டித் தேர்வில் வெற்றிபெற்று கடந்த 1994ல் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். பின்னர், படிப்படியாக பதவி உயர்வுபெற்று தற்போது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு வட்டாட்சியராகப் பணியாற்றி வருகிறார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கக் கட்டிடத்தில் மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இலவசமாக தனி ஆளாக வகுப்பெடுத்து வருகிறார். கடந்த 17 ஆண்டுகளில் சுமார் 10 ஆயிரம் பேரை அரசு ஊழியர்களாக மாற்றியுள்ளார் வட்டாட்சியர் மாரிமுத்து. விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி வெளிமாவட்டங்களிலிருந்தும் இளைஞர்கள் பயிற்சிக்காக வந்துசெல்கின்றனர்.

சுமார் 2 ஆயிரம் பேரை ஒரே இடத்தில் அமர வைத்து அவர்களுக்கு எளிமையாகப் புரியும் வகையில் வகுப்பெடுத்து வரும் வட்டாட்சியர் மாரிமுத்து, தன்னிடம் பயிற்சிபெறும் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் "வள்ளலார் திட்டம்" என்ற திட்டத்தை இன்று தொடங்கினார்.

இதுகுறித்து வட்டாட்சியர் மாரிமுத்து கூறுகையில், "மிகுந்த வறுமையில் வாழ்ந்தவன் நான். அரசு ஜீப்பை பார்க்கும்போதெல்லாம் நாமும் இதில் ஒருநாள் வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. படிப்பு மட்டுமே வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டது. அதனால், போட்டித் தேர்வுக்குப் படித்து வெற்றிபெற்று அரசு பணிக்கு வந்தேன். 2003ம் ஆண்டு அரசு அலுவலகங்களில் ரூ.4 ஆயிரம் ஊதியத்தில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

2006ல் அவர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது முதன் முதலில் அவர்களுக்காக இலவச பயிற்சி வகுப்பைத் தொடங்கினேன். பயிற்சிபெற்ற 150 பேரில் 145 பேர் தேர்ச்சிபெற்று மீண்டும் அரசு பணிக்குத் திரும்பினர். அதைத்தொடர்ந்து, தற்போது வரை இலவச பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறேன். கடந்த 17 ஆண்டுகளாக சனி, ஞாயிற்றுக் கிழமைகளை பயிற்சியளிப்பதற்காக முழுமையாக அர்ப்பணித்து செயலாற்றி வருகிறேன். இதுவரை சுமார் 10 ஆயிரம் பேர் மத்திய, மாநில அரசுத் தேர்வுகளில் வெற்றிபெற்று பணிக்குச் சென்றுள்ளனர்.

இதே விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு துறை அலுவலகங்களில் எனது மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். தற்போது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சுமார் 2 ஆயிரம் பேர் வீதம் பயிற்சி பெறுகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இவர்களுக்காக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 10க்கும் மேற்பட்ட பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
மாணவர்களில் பலர் மதியம் உணவருந்துவது இல்லை. பலர் பசியோடு இருப்பதைப் பார்த்துள்ளேன்.

அதனால், அவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் எண்ணத்தில் எனது முயற்சியில் இலவச மதிய உணவு வழங்கும் "வள்ளலார் திட்டம்" என்ற திட்டத்தை தொடங்கியுள்ளேன். இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்து அரசி, மளிகை போன்றவைகளை வழங்க முன்வந்துள்ளனர். ஏழை, எளிய மாணவர்கள், கிராமப்புற மாணவர்களின் அரசு வேலை என்ற கனவு என்னைப் போன்று நிஜமாக வேண்டும். அதற்கு பசி தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த திட்டம்" என்றார்.

இன்று நடைபெற்ற இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஒரு டன் அரிசியை சங்கத்தின் செயலர் ஜெய்சங்கர், தலைவர் முருகன் உள்ளிட்டோர் வழங்கினர். மேலும், வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலமும் மதிய உணவு திட்டத்திற்கான பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

18 days ago

வாழ்வியல்

19 days ago

வாழ்வியல்

20 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

27 days ago

மேலும்