2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலக்கியம் எழுதியவர்கள் தமிழ் பெண்கள்: திருப்பூர் புத்தகத் திருவிழாவில் சு.வெங்கடேசன் எம்.பி. புகழாரம்

By செய்திப்பிரிவு

திருப்பூர்: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலக்கியம் எழுதியவர்கள் தமிழ் பெண்கள் என்று, திருப்பூர் புத்தகத் திருவிழாவில் சு.வெங்கடேசன் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகம், திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் ஆகியவை இணைந்து நடத்தி வரும் 19-வது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் மதுரை எம்.பி.யும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன், ‘சரித்திரத் தேர்ச்சி கொள்’ என்ற தலைப்பில் பேசியதாவது:

சமூகத்தை பயிற்றுவிக்கும் மகத்தான பங்களிப்பு அரசு நிர்வாகத்துக்கு உண்டு. அதற்கு உதாரணம் இந்த புத்தக கண்காட்சி. அரிஸ்டாட்டில், கன்பூசியஸ், அர்த்தசாஸ்திரம் மற்றும் திருக்குறளை படியுங்கள். இந்த புத்தக் கண்காட்சி மேடை என்பது, அறிவின் திறந்த வாசல். அரிஸ்டாட்டில், கவுடில்யர் தொடங்கி மனிதர்களை, மனித சமூகத்தை எப்படி மேலாண்மை செய்ய வேண்டுமென எழுதினார்கள்.

படை, கோட்டை, உளவுப்பிரிவை எப்படி உருவாக்க வேண்டுமென பல நூல்கள் எழுதப்பட்டன. மனித மனதை எப்படி அறவழியில் நடத்துவது என பிரதானப்படுத்தியது திருவள்ளுவர்தான். பனியன் நகரம் திருப்பூர். ஆடைக்கு தமிழில் 12 சொற்கள் உள்ளன. மேலாடை அணியத் தொடங்கிய காலம், மனித சமூகம் நாகரிகம் தொட்ட காலம்.

அந்த ஆடைக்கு சங்க இலக்கியத்தில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 12 சொற்கள் தமிழில் மட்டுமே உள்ளன. இந்த பெருமை தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு. கடலில் செலுத்தப்படும் வாகனத்துக்கு 24 சொற்கள் உண்டு. நொய்யல் நதிக்கரையின் கொடுமணலில் கண்டுபிடிக்கப் பட்டவையும், கரூரில் கண்டறியப்பட்டவையும், புகளூரில் கண்டறிப்பட்டவையும் தமிழ்ச் சமூகத்தின் பெரிய அடையாளங்கள்.

இந்திய மொழிகளுக்கு தாய்மொழி சமஸ்கிருதம் என்று மக்களவையில் ஒரு எம்.பி. பேசினார். இதற்கு ஆதாரம் சொல்ல முடியுமா என்று கேட்டோம்? சமஸ்கிருத கல்வெட்டைவிட, தொன்மையான தமிழ் கல்வெட்டு மதுரையிலும், தேனியிலும் கிடைத்ததை கூறினோம். தமிழில் 64 ஆயிரம் கல்வெட்டுகள் உள்ளன. சமஸ்கிருதத்தில் 4 ஆயிரம் கல்வெட்டுகளே உள்ளன.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலக்கியம் எழுதியவர்கள் நம் பெண்கள். சங்க இலக்கியத்தில் 40-க்கும் மேற்பட்ட பெண் படைப்பாளிகள் எழுதியது தமிழ் இலக்கிய வரலாறு. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக வெளியிடப்படுகின்ற புத்தகங்களையும், ஆவணப்படங்களையும் மறைப்பது அனைத்து காலத்திலும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட ஆட்சியர் சு.வினீத், சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE