மதுரை அருகே 150 ஆடுகள், 300 கோழிகளை பலியிட்டு ஹோட்டல் உரிமையாளர்கள் நடத்திய பிரியாணி திருவிழா

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரை அருகே முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்கள் நடத்திய பிரியாணி திருவிழாவில் 150 ஆடுகள், 300 கோழிகளை பலியிட்டு தயாரிக்கப்பட்ட பிரியாணி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி தாலுகாவைச் சேர்ந்தது வடக்கம்பட்டி கிராமம். இவ்வூரைச் சேர்ந்தவர்கள் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் அசைவ ஹோட்டல் நடத்தி வருகின்றனர். இவர்களின் காவல் தெய்வமான முனியாண்டி கோயில் வடக்கம்பட்டியில் உள்ளது.

இக்கோயில் திருவிழாவை ஆண்டுதோறும் நாயுடு, ரெட்டியார் சமூகத்தினர் தனித்தனியாகக் கொண்டாடுகின்றனர். பிரியாணி தயாரித்து பல்லாயிரம் பேருக்கு பிரசாதமாக வழங்கப்படுவதால் பிரியாணி திருவிழா என்றழைக்கப்படுகிறது. நாயுடு சமூகத்தினர் 88-ம் ஆண்டு விழாவை நேற்று முன்தினம் கொண்டாடினர்.

இதில் ஹோட்டல் உரிமையாளர்கள், குடும்பத்தினர், தொழிலாளர்கள் என பல்லாயிரம் பேர் பங்கேற்றனர். இதையொட்டி கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. மேளதாளத்துடன் ஏராளமான பெண்கள் பூத்தட்டு, மாலையுடன் ஊர்வலமாகச் சென்று முனியாண்டி கோயிலில் பொங்கல் வைத்தனர். இரவு முழுக்க சிறப்பு பூஜைகள் நடந்தன.

பக்தர்கள் பலரும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற ஆடு, கோழிகளை காணிக்கையாக வழங்கினர். இவ்வாறு சேர்ந்த 150 ஆடு, 300 கோழிகள் சுவாமிக்கு பலியிடப்பட்டன. இதன் இறைச்சியை கொண்டு 40-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் பிரியாணி தயாரிக்கப்பட்டது. பிரியாணியை முனியாண்டி சுவாமிக்கு படையல் செய்து நேற்று அதிகாலை சிறப்பு பூஜை நடந்தது.

பின்னர் ஹோட்டல் உரிமையாளர்கள், ஆடு, கோழி வழங்கியவர்கள், நன்கொடையாளர்கள் எனப் பல ஆயிரம் பேருக்கு பிரியாணி பிரசாதம் வழங்கப்பட்டது. அதன் பின்பு பக்தர்களும், சுற்றுப்புற கிராமத்தினர் என 10 ஆயிரம் பேர் வரை பிரியாணி பிரசாதம் பெற்றனர். இது குறித்து கோயில் நிர்வாகிகள் கூறுகையில், 1,500-க்கும் அதிகமான ஹோட்டல்கள் முனியாண்டி சுவாமி பெயரில் செயல்படுகிறது.

இதன் மூலம் உரிமையாளர்களால் தினமும் ஒரு தொகை முனியாண்டி சுவாமிக்கு காணிக்கையாக வைக்கப்படும். இக்காணிக்கையை பயன்படுத்தி ஆண்டுதோறும் திருவிழா நடத்துகிறோம். திருவிழாவை எவ்வளவு சிறப்பாக கொண்டாடுகிறோமோ அந்த அளவுக்கு எங்கள் தொழிலை புத்துணர்வோடு செய்கிறோம் என்ற நம்பிக்கையைப் பெறுகிறோம். இதற்காகவே வெளிநாட்டில் இருந்தாலும் இவ்விழாவில் பங்கேற்க வந்துவிடுவோம் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE