சீனப் புத்தாண்டு: வினோத நம்பிக்கையும் கொண்டாட்டமும்

By செய்திப்பிரிவு

இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகள் கிரிகோரியன் நாட்காட்டியைப் பின்பற்றி ஜனவரி 1ஆம் தேதியை புத்தாண்டு தினமாகக் கொண்டாடி வருகின்றன. ஆண்டுக்கு 12 மாதங்கள், 365 நாள்கள் எனக் கணக்கிட்டு ஜனவரி 1ஆம் தேதியைப் புத்தாண்டாக கொண்டாடி வருகிறோம். ஆனால், சீனப் புத்தாண்டு அப்படி அல்ல. சந்திரனை மையப்படுத்திய லுனார் நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டது. அவர்களுக்குப் புத்தாண்டு பிறக்க 13 மாதங்கள் ஆகிறது.

ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் தொடங்கி பிப்ரவரி முதல் வாரம் வரை புத்தாண்டு தினக் கொண்டாட்டங்கள் சீனாவில் களைகட்டத் தொடங்கிவிடுகின்றன. அதன் அடிப்படையில் கடந்த 22ஆம் தேதி சீனாவில் புத்தாண்டு தொடங்கி விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முயல் பெயரில் சீனப்புத்தாண்டு பிறந்திருகிறது. எனவே, இந்த ஆண்டு சிறப்பாகவும் வளமாகவும் இருக்கும் என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். சீனப் புத்தாண்டு குறித்து சில சுவையான தகவல்கள்:

* கரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளிலும் புத்தாண்டைக் கொண்டாட முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடந்தார்கள் சீனர்கள். ஆனால், இந்த ஆண்டு உற்சாகமாகப் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

* வயதைத் தெரிந்துகொள்ள பிறந்த ஆண்டை கணக்கிடுவதைப் போல சீனர்கள் எந்த விலங்கின் ஆண்டில் பிறக்கிறார்களோ அதை வைத்தே வயதைக் கணக்கிடுகிறார்கள். நம்மூரில் சிலர் பிறந்த ஆண்டைக் கேட்டால் சொல்வதற்குத் தயங்குவதைப் போலவே சீனாவிலும் பிறந்த ஆண்டின் விலங்கை யாரிடமும் சொல்லாமல் ரகசியம் காப்போர் உண்டு.

* குறிப்பிட்ட விலங்கு ஆண்டில் பிறப்பவர்கள் அந்த விலங்குக்குரிய குணாதிசயங்களைக் கொண்டிருப்பார்கள் என்கிற நம்பிக்கை சீனர்களிடம் உண்டு.

* சீனர்கள் ஆண்டு பிறப்பின் முதல் 8 தினங்களைச் ‘சிறிய வருடப்பிறப்பு’ என்றும் அதன் பின்னர் வரும் 11 நாள்களை ‘வசந்த வருடப் பிறப்’பாகவும் கடைசி 4 தினங்களை வண்ண விளக்குகளால் அலங்கரித்தும் வானில் பறக்கவிட்டு ‘விளக்குத் திருவிழா’வாகவும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

* சீனாவில் புத்தாண்டைக் கொண்டாட பல லட்சம் பேர் 7 நாள்களிருந்து 2 வாரங்கள் வரை நகரங்களிலிருந்து அவரவர் சொந்த கிராமங்களுக்கு இடம்பெயர்கின்றனர்.

* பொங்கல் பண்டிகைக்கு வீட்டைச் சுத்தம் செய்து வண்ணமடிப்பதைப்போல சீனாவிலும் ஆண்டு பிறப்பின் முதல் பருவத்தில் வீட்டைச் சுத்தம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

* வீடுகளுக்கு வண்ணம் பூசுவதில் சிவப்பு நிறத்தையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அது மட்டுமின்றி பண்டிகைக் காலங்களில் சிவப்பு நிறத்தினாலான உடைகள், பொருட்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

* ரெட் பாக்கெட் - பார்ப்பதற்கு நம் ஊர் மொய்க் கவரைப் போல இருக்கும் உறைகளில் சிறிய அளவிலான பணத்தை வைத்து புத்தாண்டு அன்று பெரியவர்கள் குழந்தைளுக்குக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

* தீபாவளியன்று நாம் பட்டாசு வெடித்து கொண்டாடுவதைப் போல சீனர்களின் புத்தாண்டு பட்டாசு இல்லாமல் நிறைவடைவதில்லை.

• புத்தாண்டு அன்று எதிர்மறையாகப் பேசுவது, சீனர்களிடையே அபசகுனமாகக் கருதப்படுகிறது. அன்றைய தினம் நோய், பேய், மரணம், வலி, வெறுமை போன்றவை சம்பந்தப்பட்ட பேச்சுகளை பெரும்பாலும் தவிர்ப்பார்கள். அன்றைய தினம் கண்ணாடி, பீங்கான் பாத்திரங்கள் போன்றவை உடைவதும் கெட்ட சகுனமாகப் பார்க்கப்படுகிறது.

• புத்தாண்டுப் பிறப்புக்கு முன்னரே வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்ட தூய்மைப் பணிகளைச் செய்யத் தொடங்குவார்கள். புத்தாண்டு பிறப்புக்குப் பின் அந்த வேலைகளைச் செய்யமாட்டார்கள். புத்தாண்டு அன்று முடி திருத்துதல், தலைக்கு குளித்தல் உள்ளிட்டவையும் தீய விளைவுகளைத் தரும் என்று நம்புகின்றனர்.

• புத்தாண்டு நாளில் வீடுகளில் அடுப்பு மூட்டுவதையும் கத்தி, கத்தரிக்கோல் போன்ற கூர்மையான உபகரணங்களை உபயோகிப்பதையும் தவிர்க்கின்றனர். ஏனெனில் கூர்மையான ஆயுதங்கள் அந்த ஆண்டில் வளமையையும் வெற்றியையும் கத்தரித்துவிடும் என்று நம்புகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கி முடியும் வரை 99 சதவீத முடிதிருத்தும் நிலையங்கள் அங்கு மூடப்படுகின்றன.

• புத்தாண்டு அன்று மாமியார் வீட்டுக்குச் செல்வதை பெரும்பாலான ஆண்கள் விரும்புவதில்லை. அதேபோல் பெண்ணும் பிறந்த வீட்டுக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர். அப்படிச் செல்வது பிறந்த வீட்டுக்குத் தீமையைத் தரும் என்று நம்புவதே காரணம். அதனால், புத்தாண்டுக்கு மறுநாள் குழந்தை குட்டிகள், பரிசுப் பொருட்களுடன் மாமியார் வீட்டுக்குச் சென்று பார்த்துவிட்டு வருவார்கள்.

• நம்மைப் போலவே புத்தாண்டு அன்று கடன் வாங்குவதும் கொடுப்பதும் சீனாவிலும் இருதரப்பிலும் நல்ல விஷயமாகப் பார்க்கப்படுவதில்லை. அன்றைய தினம் கடன் வாங்கினால் ஆண்டு முழுவதும் கடன் வாங்க வேண்டிவரும் என்று நம்புகின்றனர் சீனர்கள். மருந்துகள் எடுத்துக் கொள்வதையும் மருத்துவமனைக்குச் செல்வதையும் அறுவை சிகிச்சையையும்கூடத் தள்ளி வைக்க முயற்சிப்பார்கள்.

12 ஆண்டுகள் 12 விலங்கினங்கள்

2020 - எலி
2021 - எருது
2022 - புலி
2023 - முயல்
2024 - டிராகன்
2025 - பாம்பு
2026 - குதிரை
2027 - ஆடு
2028 - குரங்கு
2029 - சேவல்
2030 - நாய்
2031 - பன்றி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

4 hours ago

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

4 days ago

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

27 days ago

வாழ்வியல்

27 days ago

மேலும்