பண்பாட்டைப் பறைசாற்றும் பொங்கல் படி

By செய்திப்பிரிவு

மிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, மொழி, சாதி, சமயப் பாகுபாடு எதுவுமின்றி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் சமத்துவ விழா. எந்தவொரு விழாவும் அது கொண்டாடப்படும் நாட்களுக்கு முந்தைய ஆயத்த நாட்களில் அதிக எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.பொதுவாக விழா நாட்கள் அவ்விழாவின் இறுதி நாட்களாகத்தான் இருக்கும்.

அந்தவகையில் இப்பொங்கல் விழாவிற்கு முன்னேற்பாடாக கிட்டத்தட்ட பத்துநாட்களுக்கு முன்பிருந்தே வீட்டைச் சுத்தப்படுத்துவது,வெள்ளையடிப்பது, பழையன கழிவது என தடபுடலாகப் பொங்கலை வரவேற்கும் நிகழ்வுகள் நடைபெறும். பெரும்பாலான பள்ளி, கல்லூரி மற்றும் பொதுநிறுவனங்களிலும் சமத்துவத்தை நிலைநாட்டும் நோக்கில் இப்பொங்கல் முன்விழா மகிழ்ச்சியோடு, சமத்துவப் பொங்கலாகக் கொண்டாடப்படுகிறது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் இத்தித்திக்கும் பொங்கல் குதூகலத்தால் நிறைத்துவிடுகிறது.

அதிலும் சிறப்பாக, புதிதாகத் திருமணமான ஜோடிகளின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அதற்கு முக்கியக் காரணம் திருமண வாழ்க்கையின் முதல் பொங்கலைச் சந்திக்கும் மணமக்களுக்காகப் பெண் வீட்டிலிருந்து கொடுக்கப்படும் பொங்கல் சீதனம்தான். இதை ‘பொங்கல் படி’ என்பர். தங்கள் இல்லத்தில் பொங்கல் விடப்படுகிறதோ இல்லையோ புகுந்த வீட்டில் தங்களுடைய மகள் சிறப்பாகப் பொங்கலிட்டு மகிழ்ந்திருக்க வேண்டும் என்கிற அதீத பாசமே இதற்கான அடிப்படைக் காரணம். விருந்தோம்பல், உபசரித்தல், பிறர்நலம் பேணல் போன்ற மானுடத்தின் அறப்பண்புகளைத் தலைமுறை தலைமுறையாகக் கடத்திவரும் ஓர் உயர்ந்த பண்பாட்டின் சுருக்கமான குறியீட்டு வடிவமாகவே இப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மக்களின் போக்குவரத்துக்கு மாட்டு வண்டிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட 1980கள் வரை தமிழகத்தின் தென்மாவட்டக் கிராமங்களில் பொங்கலுக்கு முந்தைய வாரத்தில் ஒவ்வொரு தெருக்களிலும் வில்வண்டிகள், சக்கடாவண்டிகளின் நடமாட்டமாகத்தான் இருக்கும். நீண்டு நிற்கும் செங்கரும்புக் கட்டுகள், மண் மணம் வீசும் பனங்கிழங்குகள், பச்சை இலைகளோடு பிடுங்கப்பட்ட மஞ்சள் செடிகள் போன்றவற்றோடு பொங்கல் சீர்வரிசையைச் சுமந்தபடி ஜல் ஜல் என்கிற ஜதியோடு தலையை ஆட்டியபடி நுழையும் மாட்டு வண்டிகளின் ஆரவாரம் கிராமங்களை நிறைத்திருக்கும்.

அந்த மாட்டு வண்டிகளைப் பின்தொடர்ந்து உற்சாக ஒலியெழுப்பி துரத்தியோடி மகிழும் சிறுவர் பட்டாளம் ஒருபக்கம். தனது தாய்வீட்டு மாட்டு வண்டியின் ஓசைக்காகக் கனவுகளோடு காத்திருக்கும் புதுப்பெண்ணின் புன்னகைப் பார்வை எனச் சீர் கொண்டுவரும் நிகழ்வே தனி அழகுதான். பொங்கல் சீர்வரிசை என்பது நம் முன்னோர்களால் உறவுமுறையைத் தொடர்ந்து வலுவுடன் வைத்துக்கொள்ள ஏற்படுத்தப்பட்ட உன்னதமான நடைமுறை. தங்கள் வீட்டுப் பெண் புகுந்த வீட்டினரால் மதிப்புடன், அன்பு பாராட்டி அவளது பிறந்தவீட்டின் பெருமையறிந்து மகிழ்ச்சியாக வாழ வைக்க வேண்டும் என்கிற அன்பின் மிகுதியால் அளிக்கப்படுவது.

பொங்கல் சீர்வரிசையில் பொங்கலிடத் தேவையான பித்தளை, வெண்கலம், மண்பானை இவற்றுள் ஏதாவது ஒருவகை பானையும், அச்சு வெல்லம், கருப்பட்டி, 11 படி பச்சரிசி, 9 படி புழுங்கரிசி, கரும்பு, மஞ்சள் கொத்து, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, கைமுறுக்கு, வாழை இலை, காய்கறிகள், ஏலக்காய், முந்திரி, குத்து விளக்கு, சந்தனம், குங்குமம், விளக்குத் திரி, பணம் போன்றவற்றோடு வண்டியில் ஏற்றி, பிறந்தவீட்டுச் சீராக உடன் பிறந்த சகோதரர்கள் தங்களது சகோதரியின் வீட்டில் கொண்டு சென்று இறக்குவர். இச்சீர்வரிசையில் இடம்பெறும் பொருட்களில் அவரவர் குடும்ப பொருளாதார வசதிக்கேற்ப மாற்றமிருக்கும். ஆனால் அச்சீர்வரிசை தாங்கி நிற்கும் அன்பின் அளவில் மட்டும் மாற்றமேயிராது!

சீர்வரிசையோடு பெண் வீட்டின் சகோதர்கள், அவர்களுடன் வரும் தன்னுடைய உறவினர்களை உபசரிக்கும் முகமாக, ஆட்டுக் கிடா அல்லது கோழி வெட்டி அன்பு மணம் கமழ ‘சம்பந்தி விருந்து’ வைத்து அவர்களை வழியனுப்புவர். மாட்டு வண்டிகள் வழக்கொழியத் தொடங்கிய தொண்ணூறுகளில் மூன்று சக்கர ஆட்டோக்கள் அந்த இடத்தைப் பிடித்தன. ஊர்ந்துவரும் அந்த மஞ்சள் வாகனம் சீர்களின் அளவுக்கு ஏற்ப அசைந்தும் ஆடியும் நகர்ந்துகொண்டு தெருக்களின் முக்கு முடுக்குகளுக்குள் எல்லாம் சென்று வருவதும் போவதுமாக இருக்கும். அதை வேடிக்கை பார்த்து ஆங்காங்கே பொங்கல்படி கொண்டு வரும் குடும்பத்தின் அருமை பெருமைகளைப் பேசி மகிழும் கிராமத்தினர் ஆங்காங்கே நின்று கூடிப் பேசும் அழகு இன்றுவரை நமது தமிழ் சமுகத்தின் கலாச்சாரத்தை உயிர்ப்பித்துக்கொண்டுதான் உள்ளது.

பொங்கல் சீர்வரிசையால் குடும்ப உறவில் ஏற்படும் மகிழ்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியாகத் தலைப் பொங்கலோடு நின்று விடாமல் வாழ்க்கை முழுவதும் தங்களது சகோதரிக்குப் பொங்கல் படி வழங்கும் சகோதரர்கள், பெற்றோர்கள் இன்றும் தமிழகத்தில் இருக்கின்றனர் என்பது நமது பண்பாட்டின் பெருஞ்சிறப்புகளுள் ஒன்று.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

7 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

27 days ago

வாழ்வியல்

28 days ago

வாழ்வியல்

28 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

1 month ago

மேலும்