குளிர்காலத்தில் சளி, இருமலைத் தடுக்கும் வீட்டு வைத்தியங்கள்: சித்த மருத்துவ வழிகாட்டுதல்

By ஜி.காந்தி ராஜா

ஜலதோஷம் மற்றும் இருமல் போன்றவை குளிர்காலத்தில் அதிகம் நம்மைப் பாதிக்கும் விஷயம். அதனை எதிர்கொள்ளும் வகையில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சில வீட்டு வைத்தியங்கள் குறித்து பேசுகிறார் சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார்.

டெல்லி உட்பட வட இந்தியா முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது. வெப்பநிலை 1.8 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துவிட்டது. இதனால் மூடுபனி மற்றும் மேகமூட்டம் போன்றவற்றால், உடலில் குளிர் அதிகரித்து ஜலதோஷம் மற்றும் இருமலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

இந்த குளிரை எதிர்கொள்ளும் வகையில் சில வீட்டு வைத்தியங்களை நாம் கடைபிடித்தால், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாகிட உதவும். அதே நேரத்தில் நமது உடலை சூடாகவும் வைத்திருக்க முடியும்.

மரு.வி.விக்ரம்குமார்., MD(S)

ஆவி பிடித்தல் அவசியம்: சைனஸ், நுரையீரல் ஒவ்வாமை இருப்பவர்கள் குளிர்காலங்களில் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள வாரத்தில் இரண்டு நாட்கள் ஆவி பிடிக்க வேண்டும். குறைந்தது 5 நிமிடங்கள் எடுத்துக்கொண்டால் போதுமானது.

ஒரு வாயகன்றப் பாத்திரத்தில் தண்ணீருடன் மஞ்சள், நொச்சி, கற்பூரவள்ளி, துளசி போன்றவற்றை போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் நல்லது. இதில் ஒரு சில பொருட்கள் கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள் வெறும் வெந்நீரில் மட்டும் ஆவி பிடிப்பதும் நல்ல பலன் தரும். ஆவி பிடிப்பதால் கபம் சார்ந்தப் பிரச்சினைகளாக இருந்தால் நிவாரணம் கிடைக்கும்.

கற்பூரவல்லி, தூதுவளைத் துவையல்: குளிர்காலங்களில் மட்டுமில்லாமல் எல்லா நேரங்களிலும் தண்ணீரைக் காய்ச்சி குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. தண்ணீரைக் காய்ச்சி இறக்கியபின் அதில் தேற்றான் விதைகளைப் போட்டு ஊறவைத்து பின் வடிகட்டி அருந்தலாம். குளிர்காலங்களில் தூதுவளைத் துவையல், கற்பூரவல்லி இலைகளைப் பயன்படுத்தி பஜ்ஜி செய்து சாப்பிடலாம். கொள்ளு ரசம், மிளகு ரசம் அடிக்கடி வைத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக இஞ்சி சட்னி, இஞ்சி துவையல் சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். காபி, டீக்குப் பதிலாக சுக்கு காபி, இஞ்சி காபி போன்றவற்றை அருந்துவது சிறந்தது. குளிர்காலங்கள் முழுவதும் நீர் அருந்த செம்புப் பாத்திரங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தலைபாரம் அகற்றும் சுக்கு பற்று: குளிர்காலத்தில் ஏற்படும் தலைப் பாரங்களுக்கு சுக்குவைத் தட்டி பசையாக்கி நெற்றியில் பற்றுப் போட்டு 5 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இதனால் தலைபாரம் அகலும்.

சித்தமருத்துவத்தில் பயன்படுத்தப்படும் நீர்க்கோவை மாத்திரையினை வாங்கி இடித்து பசையாக்கி அதனை மூக்கு இரண்டு பக்கவாட்டுகளில் இருக்கும் மேடுகளிலும், நெற்றியிலும் போட்டுவர நீர்கோர்த்திருந்தால் இருந்தால் சரியாகிவிடும்.

சளி, இருமல் போக்கும் தாளிசாதி சூரணம்: சளி, இருமலுக்கு தாளிசாதி சூரணத்தை தேனில் குழைத்துச் சாப்பிட்டால் உடனடியாக நல்ல பலன் தரும். இது சிறந்த கோழையகற்றியாகப் பயன்படுகிறது. கபத்தினால் நிறைய பேருக்கு தொண்டைப் பகுதியில் ஒருவிதமாக கோழை போல் சுழன்றுக் கொண்டிருக்கும். அவர்களுக்கு இது நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். இதில் தாளிசாதி பொடி மட்டுமல்லாமல் வடகமாகவும் வருகிறது.

(மருத்துவர் ஆலோசனையின் பேரில் மருந்து அளவினை எடுத்துக்கொள்வது சிறந்தது)

தொடர்ந்து வறட்டு இருமல் இருப்பவர்கள் அதிமதுரம் மாத்திரையை பயன்படுத்துவது நல்ல பலன் தரும். கூடவே, ஆடாதொடா சிரப் பயன்படுத்திக் கொள்ளலாம். பலன் கிடைக்கும்.

குளிர்காலத்தில் தண்ணீரைத் தவிர்க்காதீர்கள்: குளிர்காலத்தில் தண்ணீர் குடிப்பது பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை, ஏனெனில் பலர் போதுமான தண்ணீரை உட்கொள்வதில்லை, இது நீரிழப்புக்கு வழிவகுக்கிறது. "பல்வேறு நீராகாரங்களைக் குடிப்பது, குறிப்பாக தண்ணீர், நமது உடல் பல நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது, இது நமது உடலின் நச்சுத்தன்மையை நீக்கி, சுத்தமாக வைத்திருக்கிறது. வெதுவெதுப்பான தண்ணீரைத் தவிர, காய்கறி சூப்களும் செய்து அருந்தலாம்.

குளிர்காலங்களில் கை கொடுக்கும் பஞ்சமுட்டிக் கஞ்சி: துணிக்குள் தலா பத்து கிராம் உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, சிறுபயறு (அ) தட்டைப் பயறு, கடலை, பச்சரிசி ஆகியவற்றை வைத்து முடிச்சுப் போட்டு, ஒரு லிட்டர் நீர் கொண்ட மண்பானையிலிட்டு, நான்கில் ஒரு பாகமாக (அதாவது 250 மிலி அளவு) குறையும் வரை காய்ச்சிப் பயன்படுத்தலாம். இதிலுள்ள புரதக்கூறுகள் உடலை தெம்படையச் செய்யும். குளிர்காலங்களில், காலை வேளைகளில் திட உணவுக்குப் பதிலாக பஞ்சமுட்டிக் கஞ்சி போன்ற திரவ உணவை எடுத்துக்கொள்ள, நீரிழப்பை ஈடுகட்ட முடியும்.

இஞ்சி மற்றும் துளசி தண்ணீர்: குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களைத் தடுப்பதில் இஞ்சி, மிளகு போன்ற சமையல் பொருட்களுக்கு முக்கிய பங்கு உண்டு. "பொதுவாக ஓருவர் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவராக இருந்தால், இஞ்சி மற்றும் துளசி நீர் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நாள் முழுவதும் அவரை சுறுசுறுப்பாக வைத்திருக்க பெரிதும் உதவும்."

தொண்டை மற்றும் மார்பு ஏற்படும் சளி தொற்றுக்கு தேன்: பல்வேறு நோய்களை குணப்படுத்தும் பழமையான பொருட்களில் ஒன்று தேன். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தொண்டை வலியை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மேலும் குளிர்காலத்தில் ஏற்படும் மார்பு சளி தொற்றுகளையும் குறைக்கும்.

மஞ்சள் நீர், பால்: சளி மற்றும் இருமலுக்கான சிறந்த மருந்துகளில் ஒன்று மஞ்சள். இதனை கொதிக்கவைத்த பால் அல்லது தண்ணீரில் கலந்து அருந்துவது சிறந்தது. இது ஒரு ஆண்டிபயாடிக் ஆக செயல்படுவதன் மூலம் பல நோய்களைத் தடுக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் சி: வைட்டமின் சி உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. சளி மற்றும் இருமலை விரைவாக குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த குளிர்காலம் நோயற்றதாக இருக்க, ஆம்லா, ஆரஞ்சு மற்றும் அன்னாசி போன்ற உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நோய்த்தொற்றைக் குறைக்க துத்தநாகம் நிறைந்த உணவுகள்: பருப்பு வகைகள், முழு தானியங்கள், கொட்டைகள் மற்றும் விதைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்த்தொற்றைக் குறைக்கின்றன. குளிர்காலத்தில், உடல் நோய்களை எதிர்த்துப் போராடும் போது, ​​சக்தி பெற ஆரோக்கியமான உணவு தேவைப்படுகிறது.

கிரீன் டீ மற்றும் சூப்கள் போன்ற சூடான பானங்கள்: குளிர் காலங்களில் சூடான பானங்களை குடிப்பது உடலின் வெப்பநிலையை சமநிலைப்படுத்த உதவுகிறது. கிரீன் டீ மற்றும் காய்கறி சூப்கள் அடிக்கடி அருந்துவது நம்மை புத்துணர்ச்சியாக்கி குளிரில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும்.

சுவாசப் பயிற்சிகள்: "சுவாசப் பயிற்சிகள் சளி மற்றும் இருமலைத் தடுக்க பெரிதும் உதவுகிறது. உடற்பயிற்சியின் போது, வலுக்கட்டாயமாக சுவாசிக்கத் தொடங்கும் போது, நாசிகள் சூடாகத் தொடங்குகிறது.

வாரத்திற்கு 4-5 முறை உடற்பயிற்சி செய்யுங்கள்: உடற்பயிற்சி செய்வது பனிக்காலங்களில் ஏற்படும் மூக்கு அடைப்புகளைச் சரி செய்து, நல்ல சுவாசத்திற்கு வழிவகுக்கிறது. மேலும் உடலில் வெப்பத்தை அதிகரித்து, பருவகால சளி மற்றும் இருமல் வராமல் தடுத்துவிடும் என்கிறார் சித்த மருத்துவர் டாக்டர் வி.விக்ரம்குமார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

19 days ago

வாழ்வியல்

20 days ago

வாழ்வியல்

25 days ago

வாழ்வியல்

26 days ago

வாழ்வியல்

26 days ago

வாழ்வியல்

27 days ago

வாழ்வியல்

27 days ago

வாழ்வியல்

28 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்