ராஜபாளையம் | கோயிலில் புதைந்து இருந்த 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் மீட்டெடுப்பு

By செய்திப்பிரிவு

ராஜபாளையம்: ராஜபாளையம் - புதிய பேருந்து நிலையம் அருகே பாண்டியர் காலத்தை சேர்ந்த பறவைக்கு அண்ணம் காத்தருளிய சுவாமி கோயிலில் மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் மற்றும் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்று ஆய்வு மையம் இணைந்து ஆய்வு செய்தனர். அப்போது மண்ணில் புதைந்து இருந்த 800 ஆண்டுகால பழைமையான கல்வெட்டுகள் மீட்கப்பட்டன.

இதுகுறித்து பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய செயலர் தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் கூறும்போது, ''சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் பாண்டியர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் தற்போது கருவறை மட்டுமே எஞ்சியுள்ளது. இந்தக் கோயிலில் ஆய்வு செய்தபோது பூமிக்கு அடியில் கற்கள் மற்றும் தூண்கள் புதைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த வாரம் ஜேசிபி இயந்திரம் மூலம் மண்ணில் போன்ற புதைந்து இருந்த பிரம்மாண்ட தூண்கள் மற்றும் கல்வெட்டுகள் மீட்கப்பட்டன.

அவை கோயில் நிர்வாக குழுத் தலைவர் வெள்ளத்துரை மற்றும் உறுப்பினர்களால் வரிசைப்படுத்தப்பட்டது. இதன்மூலம் இங்கு பெரிய கோயில் இருந்ததற்கான தடயங்கள் காணப்படுகிறது. இது குறித்து வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்வெட்டை கண்டறிந்து சுத்தம் செய்வது, கல்வெட்டுகளை படி எடுக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் உதயகுமார் மற்றும் முத்துப்பாண்டி ஆகியோரால் பயிற்சி அளிக்கப்பட்டது.

இங்கு 25-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டன. மேலும் சில கல்வெட்டுகள் படி எடுக்க வேண்டி உள்ளது. அனைத்து கல்வெட்டுகளையும் ஒருங்கிணைத்து அதில் உள்ள செய்தியை வெளிக்கொண்டுவரும் பணி நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு உள்ளேயும், கோவில் கட்டுமானத்தின் வெளிப்புறமும் சில கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கல்வெட்டு தூண்கள் துண்டு துண்டாக உள்ளதால் செய்தியை முழுமையாக அறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட ஆய்வில் முதலாம் மாறவர்ம சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தியோடு கல்வெட்டு தொடங்குவது தெரியவந்துள்ளது'' என்றார்.

ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் கந்தசாமி கூறும்போது, ''இக்கோயில் அமைந்துள்ள பகுதியை வெண்பைக்குடி நாட்டு கருங்குளமான சாதவாசகநல்லூர் என்று அழைக்கப்பட்ட குறிப்புகள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. எத்தகைய ஆய்வுகள் நமது வரலாற்றுத் தொடர்ச்சியை வருங்கால சந்ததியினரிடம் கொண்டு செல்வதற்கு உதவும். ராஜபாளையம் பகுதியில் உள்ள மாயூரநாதசுவாமி கோயில், தெற்கு வெங்காநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோயில், சோழபுரம் சிவன் கோயில், பெருமாள் கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் மூலம் இப்பகுதியின் வரலாற்றை அறிய முடிகிறது'' என்றார்.

இதில் வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் ரமேஷ்குமார், ஜெகந்நாத் மற்றும் முதுகலை வரலாற்று துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழு தலைவர் வெள்ளத்துரை மற்றும் குழு உறுப்பினர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE