கோவையில் முதல்முறையாக ஜன.7, 8-ம் தேதிகளில் செட்டிநாடு திருவிழா

By செய்திப்பிரிவு

கோவை: கோவை விழாவின் ஒருபகுதியாக கோவை கொடிசியா வளாகத்தில், டி அரங்கில் வரும் 7, 8-ம் தேதிகளில் செட்டிநாடு திருவிழா நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறும்போது, “செட்டிநாடு திருவிழாவுக்கான ராயல்டி பாஸ் வாங்குவோருக்கு வரவேற்பு பானத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும். செட்டிநாட்டு பகுதியைச் சேர்ந்த பல பொருட்களின் அணிவகுப்பை அருங்காட்சியத்தில் பார்த்து மகிழலாம். அதோடு, செட்டிநாடு நகர கோயில்களை காணலாம். கடைவீதியில் பொருட்கள் வாங்கலாம்.

தங்கள் கைகளால் கொட்டான் முடையலாம், ஆத்தங்குடி டைல்ஸ் செய்யலாம், சுண்ணாம்பு பூச்சு கற்கலாம், சுவர்களில் ஸ்டென்சில் ஆர்ட் செய்யலாம். செட்டிநாட்டு பலகாரங்களை சமைத்துப் பார்க்கலாம். பல்லாங்குழி, ஆடு புலி ஆட்டம், சொட்டாங்கல், ஒத்தையா இரட்டையா என நாம் சிறுவயதில் விளையாடி மறந்துபோன பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடலாம்.

அறுசுவை சைவ, அசைவ செட்டிநாட்டு விருந்து உண்ணலாம். என்இயு சாவனிர் அரங்கில் விற்கப்படும் அழகிய பொருட்களை ஞாபகார்த்தமாக வாங்கிச் செல்லலாம். ராயல்டி பாஸ் பெற 6383911627 என்ற எண்ணிலோ, www.neucbe.com என்ற இணையதளத்திலோ தொடர்புகொள்ளலாம். ராயல்டி பாஸ் பெற்ற பின்னர், அதில் கொடுக்கப்பட்டுள்ள இணையத் தொடர்புக்கு சென்று உங்களுக்கு விருப்பமான உணவு வேளையை முன்பதிவு செய்யலாம்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE