தஞ்சாவூர் | ஆதரவற்ற மாணவர்களுக்கு 10,000 வாழைப்பழங்களை இலவசமாக வழங்கிய விவசாயி

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆதரவற்ற மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்காக 10,000 வாழைப்பழங்களை இலவசமாக வழங்கினார் வாழை விவசாயி எம்.மதியழகன்.

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நாளை, மற்றும் நாளை மறுநாள் தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் தங்கியுள்ள மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், சமூக நலத்துறை சார்பில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இலவசமாக வாழைப்பழங்களை வழங்கியுள்ளார் திருவையாறு அருகே வடுகக்குடியைச் சேர்ந்த வாழை விவசாயி எம்.மதியழகன். தஞ்சாவூரில் இன்று (டிச.27) மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் ஆணையர் ஆ.குளோரி குணசீலியிடம் ஒன்றரை டன் எடையுள்ள 10 ஆயிரம் வாழைப்பழங்களை மதியழகன் வழங்கினார்.

இதுகுறித்து விவசாயி எம்.மதியழகன் கூறியது: “நான் வாழை சாகுபடி செய்து வருகிறேன். கரோனா காலத்தில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நான்கு முறை இலவசமாக வாழைப்பழங்களை வழங்கியுள்ளேன். அதேபோல் கடுவெளியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கு தீபாவளி, பொங்கல் பண்டிகை காலத்தில் இலவசமாக வாழைப்பழங்களை வழங்கி வருகிறேன்.

தற்போது ஆதரவற்ற மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வாழைப்பழங்களை வழங்க முடிவு செய்தன். இதற்காக ஒன்றரை டன் எடையில் ரூ.40,000 மதிப்பீட்டில் 10 ஆயிரம் எண்ணிக்கை கொண்ட பூவன் ரக வாழைப்பழங்களை வழங்கியுள்ளேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE