குளிர் காலத்தில் கார் பயணம் - கவனத்துக்குரிய சில குறிப்புகள்
புதுடெல்லி: அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் நிலவும் கடும்பனி மக்களின் இயல்பு வாழ்கையை பாதித்துள்ளதை செய்திகள் மூலம் அறிந்து வருகிறோம். இந்தியாவிலும் இப்போது குளிர் காலம் என்பதால், இந்தக் காலத்தில் காரை பாதுகாப்பாக இயக்குவது பராமரிப்பது குறித்த சில ஆலோசனைகள் இங்கே...
- பொதுவாக அனைத்து காலநிலைகளிலும் சிறப்பாக இயங்க காரை எப்போதுமே உரிய கால நேரத்தில் சர்வீஸ் செய்து சிறப்பாக வைத்திருக்க வேண்டும்.
- பொதுவாக சீக்கிரமே தேய்மானம் அடைந்துவிடும் நிலையில் உள்ள உதிரி பாகங்களை குளிர் காலத்துக்கு முன்பாக மாற்றுவது அவசியம். இதனால் கார் நடுவழியில் மக்கர் செய்வதைத் தவிர்க்கலாம்.
- குளிர் காலத்தில் காரை எடுக்கும் முன்பாக, ஜன்னல், முகப்பு விளக்கு, பின்புற விளக்கு, முன்புற கண்ணாடி, பின்புற கண்ணாடி, ரியர் வியூ கண்ணாடி உள்ளிட்டவற்றை வெதுவெதுப்பான தண்ணீரில் துடைக்க வேண்டும். இதன் மூலம் கடுங்குளிரிலும் சாலை தெளிவாக தெரியும். கொதிக்கும் நீரை பயன்படுத்தக் கூடாது.
- குளிர்ச்சியாக வெளியில் செல்லும்போது கண்ணாடிகள் உடையும் அபாயம் உண்டு. பனிக் கட்டி பெய்யும் பகுதிகளில் உள்ளவர்கள் (குறிப்பாக டெல்லி, ராஜஸ்தான், காஷ்மீர்) காரின் மீது பனிக்கட்டிகள் விழுந்தால் அதை அகற்றவேண்டும். இல்லையெனில் அது கரைந்து முன்புறத்தில் வழிந்து கார் ஓட்டுவதற்கு இடையூறாக இருக்கும்.
- மின்சாரம் சார்ந்த அனைத்து கருவிகளும் செயல்படுகிறதா என்று சோதித்து பார்க்க வேண்டும். ஏசி சரிவர வேலை செய்கிறதா என்பதை சோதிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் காரினுள் குறிப்பிட்ட குளிர் நிலை நிலவ இது மிகவும் அவசியம். அதேபோல ஹீட்டர் இருப்பின் அதையும் சரிவர பராமரிக்க வேண்டும்.
- வெளியில் கடும் குளிர் நிலவினாலும் காரினுள் வெப்ப நிலை நிலவ ஹீட்டர் அவசியம். மழைக்காலத்தில் மட்டுமின்றி குளிர்காலத்திலும் வைப்பர் மிகவும் அவசியம். அது சரிவர வேலை செய்கிறதா என்று சோதிப்பது மிகவும் முக்கியம்.
- குளிர் காலத்தில் பேட்டரி பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு மிகவும் அதிகம். குளிர்காலத்தில் இன்ஜின் ஸ்டார்ட் ஆவதற்கு மிகவும் முக்கியமானது பேட்டரி. இது சக்தி மிக்கதாக இருந்தால்தான் கார் ஸ்டார்ட் ஆகும். எனவே பேட்டரி பழையதாக இருந்தால் மாற்றுவது அவசியம். அதேசமயம் பேட்டரியிலிருந்து செல்லும் அனைத்து வயர்களும் சிறப்பாக, பழுதின்றி உள்ளனவா என்று சோதித்துக் கொள்ள வேண்டும்.
- என்ஜின் ஆயில் தரத்தை சோதிக்க வேண்டும். என்ஜின் ஆயில் மாற்ற வேண்டியிருந்தால் அதை மாற்றுவது அவசியம். ஏனெனில் குளிர்காலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் உறைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம். எல்லா காலங்களிலும் பிரேக் மிகவும் அவசியம். அதிலும் குறிப்பாக குளிர் காலங்களில் சாலைகளில் பிடிப்பு குறைவாக இருக்கும். இந்த சமயங்களில் பிரேக் மிக துல்லியமாக பிடிக்கும் வகையில் மாற்றங்கள் செய்ய வேண்டும்.
- குளிர் காலங்களில் காரில் முழுமையான அளவில் பெட்ரோல் அல்லது டீசலை நிரப்புவது அவசியம். ஒருவேளை கார் நடுவழியில் நின்றுவிட்டால், வெளியில் கடுங்குளிர் நிலவினால், காரினுள் ஹீட்டரை போட்டு அமர்ந்திருக்கலாம்.
- பனிப் பிரதேசங்களில் உள்ளவர்கள் காரில் பெட்ஷீட், சால்வை போன்றவற்றோடு சிறிதளவு ஸ்நாக்ஸ், குடிநீர் ஆகியவற்றை எடுத்துச் செல்வதும் அவசியம்.
- நீண்ட பயணம் செல்லும்போது உங்கள் போனுக்கான ஸ்பேர் பேட்டரி மற்றும் பவர் பேங்க் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்வது புத்திசாலித்தனம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்