பாத வெடிப்பு முதல் ஜலதோஷம் வரை: குளிர்கால உடல் பாதுகாப்புக்கு 13 குறிப்புகள்
குளிர்காலம் வந்துவிட்டாலே சருமத்தில் பிரச்சினை, பாத வெடிப்பு, மூட்டு வலி, உதடு வெடிப்பு, ஜலதோஷம் உள்ளிட்ட பாதிப்புகளும் அணிவகுக்க ஆரம்பித்துவிடும். இவற்றுக்குத் தீர்வு காண எளிய குறிப்புகள் இதோ...
- குளிர்காலத்தில் சருமத்தின் மென்மையைப் பராமரிக்கச் சோப்புக்குப் பதிலாகக் கடலை மாவைப் பயன்படுத்தலாம்.
- கூந்தல் அதிகமாக வறண்டுவிடுவதுடன், ஓரங்களில் வெடித்துப்போய் அதிக முடி இழப்பை ஏற்படுத்துவதைத் தவிர்க்க இளஞ்சூடான ஆலிவ் எண்ணெயைத் தலையில் தடவி, மசாஜ் செய்து ஊறிய பிறகு குளிக்கலாம்.
- சிலருக்கு குளிரால் தசைப்பிடிப்பு ஏற்பட்டு வலி உண்டாகலாம். அவர்கள் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து, அதைத் துணியால் நனைத்துப் பிடிப்பு ஏற்பட்ட பகுதியில் ஒத்தடம் கொடுத்து வந்தால் நிவாரணம் கிடைக்கலாம்.
- குளிர்காலத்தில் பலருக்கும் பாத வெடிப்பு ஏற்படலாம். ஒரு பக்கெட் சுடுநீரில் சிறிது உப்பு போட்டுக் கால் பாதங்களை 10 நிமிடங்கள் வைத்து, பிறகு பாதங்களை நன்கு துடைத்துவிட்டு மாய்சுரைசிங் கிரீம் அல்லது ஹேண்ட் அண்ட் பாடி லோஷனைத் தடவலாம்.
- குளிர்காலம் வந்தாலே சிலருக்கு மூட்டு வலியும் வரும். வேப்ப எண்ணெயைச் சூடாக்கி, வெற்றிலையை வதக்கித் தடவி மூட்டில் பத்துபோல் போட்டுக்கொண்டால் சிறிது நேரத்தில் வலி குறைய வாய்ப்பு உண்டு.
- குளிர்காலத்தில் ஏற்படும் தலைவலியைப் போக்க, ஒரு கல்லில் சிறிதளவு வெந்நீர் விட்டுச் சுக்கை உரசி விழுதாக எடுத்து நெற்றியில் பற்றுப் போடலாம்.
- குளிர்காலத்தில் பலருக்கும் பிரச்சினை உதடு வெடிப்பு. இதற்கு பெட்ரோலியம் ஜெல்லியை உதட்டில் தடவலாம். அல்லது, கரும்பு சக்கையை எரித்து அதை வெண்ணெயில் குழைத்து உதட்டில் தடவலாம். இதனால் உதட்டு வெடிப்பு குணமாவதோடு, கூடுதல் மென்மை கிடைக்க வாய்ப்பு உண்டு.
- குளிக்கப் பயன்படுத்தும் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கொள்ளுங்கள். இது, குளிப்பதால் ஏற்படும் ஈரப்பத இழப்பை மீண்டும் பெற இது உதவும்.
- மிகவும் சூடான நீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், மிகவும் சூடான நீரில் குளிப்பதால் உடலின் இயற்கையான எண்ணெய்ப் பசை குறைந்துவிடும்.
- தேநீர் தயாரிக்கும்போது அத்துடன் சிறிதளவு துளசி இலைச் சாறு, சர்க்கரைக்குப் பதிலாகத் தேன் ஆகியவற்றைக் கலந்து அருந்தினால் ஜலதோஷம் நீங்கலாம்.
- தொண்டையில் கரகரப்பு, வலி இருந்தால் சமையல் உப்பை வெதுவெதுப்பான நீரில் கரைத்து வாய் கொப்பளிக்கலாம்.
- குடிப்பதற்கு வெந்நீர் காய்ச்சும்போது சில துளசி இலைகளுடன் சிறிதளவு ஓமம் போட்டுக் காய்ச்சினால் மணமாக இருப்பதுடன் ஜலதோஷம் பிடிக்காது.
- ‘நலம் வாழ’ பகுதியில் இருந்து.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்