50 வயது தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகள்: இ(ணை)தயத்தைக் கவரும் கதை

By செய்திப்பிரிவு

மும்பை: தந்தை இறந்த பின்னர் தனது தாயாருக்கு அவரது 50 வயதில் மறுமணம் செய்து வைத்த மகள் ஒருவரின் கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.

மும்பையில் ஃப்ரீலேண்ஸ் டேலண்ட் மேனேஜராக பணியாற்றி வருபவர் டெப் ஆர்த்தி ரியா சக்கரவர்த்தி. இவருக்கு இரண்டு வயது ஆனபோது பிரபல மருத்துவரான அவரது தந்தை மூளையில் ரத்தக்கசிவு பாதிப்பால் இறந்து விடுகிறார். அந்த நேரத்தில் அவரது தாயார் மோசுமி சக்கரவர்த்திக்கு வயது 25 தான். ஷில்லாங்கில் வசித்து வந்த அவர்கள் தந்தையின் மறைவுக்கு பின்னர் குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து பிரச்சினை காரணமாக, ஆர்த்தியை அழைத்துக்கொண்டு மோசுமி தன் தாய் வீட்டிற்கு வந்துவிடுகிறார். ஆசிரியையான மோசுமி அதன் பின்னர் தனது மகளை வளர்க்கிறார்.

ஆர்த்தி வளர்ந்ததும் தாயின் தனிமை அவரை பாதிக்க, அவரை மறுமணம் செய்துகொள்ளும்படி வேண்டுகிறார். அதற்கு தாய் “நான் திருமணம் செய்து கொண்டால் உன்னுடைய நிலைமை என்னவாகும்?” என கேட்டு அந்தப் பேச்சை தவிர்த்து வந்துள்ளார்.

“நான் பல முறை என் அம்மாவை மறுமணம் செய்துகொள்ளும்படி கூறியிருக்கிறேன். அதற்காக பல முறை அவரது மனதை மாற்ற முயற்சி செய்திருக்கிறேன். முதலில் நீங்கள் யாருடனாவது நட்பாக பழகுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். ஆரம்பத்தில் அவருடன் நட்புடன் பேச தொடங்குங்கள் என்றேன். அதன் பின்னர் ஒரு நாள் நீங்கள் நல்ல நண்பர்களாகிவிட்டீர்கள். உங்களால் நல்ல வாழ்க்கை துணைவர்களாக இருக்க முடியும்” என்று தன் தாயின் மனதை மாற்றி அவரை மறுமணத்திற்கு சம்மதிக்க வைத்த கதையை கூறுகிறார் ஆர்த்தி.

மோசுமி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஸ்வபான் என்பவரை கடந்த மார்ச் மாதத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது மணமக்கள் இருவருக்கும் வயது 50.

“இப்போது என் அம்மாவின் வாழ்க்கை மாறிவிட்டது. என் அம்மா மகிழ்ச்சியாக இருக்கிறார். முன்பெல்லாம் எல்லா விசயங்கள் மீதும் அவருக்கு ஒரு எரிச்சல் இருந்தது. இப்போது அம்மா தனது வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறார்” என்கிறார் தாயுமானவளான டெப் ஆர்த்தி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE